Saturday, February 20, 2010

68வது பிரிவு

கந்தசாமிக்கும் லதாவுக்கும் இது
68வது பிரிவு.
முதல் 2 தடவை
இருவரும் தற்கொலைக்கு
முயல நினைத்தார்கள்
தனித்தனியாக;
அடுத்த 8 தடவை
வாழ்த்துகளோடு குட்பை சொல்லிக்கொண்டார்கள்.
1 முறை தன் உள்ளங்கையில்
அவன் பார்க்க பிளேடால் கீறிச்சென்றாள் லதா.
இருவருக்கும் சங்கேதமான
பாடல்காட்சி வந்த டிவியை
குத்தி உடைத்தான் கந்தசாமி 1 முறை.
கண்ணீர் நனைத்த கண்ணாடி
பிரிவின் தடயச் செல்வத்தை
லதா துடைக்கவில்லை 1 தரம்.
முதல்முத்தம் கொடுத்தபோது
அவள் ஈஷிய சட்டையை
எரித்துப்போட்டான் கந்தசாமி 1 தரம்.
4 தடவை லதாவும் 1 தடவை கந்தசாமியும்
தொலையுறவில் கதறியழுது அவரவர் முன்பிருந்த
லேப்டாப்களை நனைத்துக் கெடுத்ததும் உண்டு.
கந்தசாமி அவளைப் பார்க்காமல்
ஈமெயில் மட்டும் போட்டுக்கொண்டிருந்தான்
அது 1/2.
லதா அவனைப் பார்த்தபடியே
அவனைப் பார்க்கவேயில்லை, அது இன்னொரு 1/2.
3 முறை லதா கந்தசாமியையும்
3 முறை கந்தசாமி லதாவையும்
பரஸ்பர அன்பில் சந்தேகித்துப் பிரிந்தார்கள்.
(அவன் கனவில் அனுஷ்கா அரைகுறையாய் வந்ததும்
இவள் தன் கனவில் அதை முழுசாய்க் கண்டதும்
இதில் அடக்கம்)
சந்தேகத்தை மனதில் வைக்காமல்
லதா சொல்லித்தொலைத்ததால்
கந்தசாமிக்கு பிரிய 1 வாய்ப்பு.
அப்படி அவன் பிரிந்ததால்
லதாவுக்கும் சண்டைபோட 1 வாய்ப்பு.
சேர்ந்திருந்தபோதே லதாவோடு
7 தடவை
பிரிந்துதான் இருந்தான் கந்தசாமி.
அவ்வளவு மோசமில்லை லதா.
1 தடவை இன்னொருவன்
தன்னைக்கொஞ்சியதற்காய்
2 முறை தானாகவே பிரிந்து
கந்தசாமியைத் தண்டித்தாள் மாதர் சிரோமணி.
லதா ஒரு கவிதை எழுதியதற்காக
1,
கந்தசாமி அவள் கவிதைகளைப் படிக்காததற்காக
8,
மனதில் பிரிந்திருக்கிறார்கள்.
ஒரேவழியாக அவள் தொல்லை ஒழிய
சாமியிடம் நின்று புலம்பினான் கந்தசாமி 1 நாள்,
அன்றிரவே சாமியாடி
லதா அவனை மீட்டுக்கொண்டாள்.
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமமாய் உறவு பயணிக்க
யாஹூ கணக்கை (அவளுக்கென தொடங்கியது)
7 முறை கந்தசாமி மூடிப்போட்டான்
போட்டிக்கு லதாவும் 6 முறை லிஸ்டில்
அவனை டெலீட் செய்து முறித்துக்கொண்டாள்.
இன்னும் சில பிரிவுகள்
அவர்களுக்கே நினைவில்லை.
68 பிரிவுக்கு ராசியான இலக்கம்,
நவக்கிரக ராசிக்கல் சோசியர்
சொல் மட்டுமே நினைவில் இருத்தப்
பிரயத்தனப்படுகிறான் கந்தசாமி.
தூதுசெல்ல புழுபூச்சியைக்கூடத்
தேடுவதாக இல்லை லதா.

69, 77, 88
அவர்களுக்காகப்
பொறுமையாகக் காத்திருக்கின்றன.
90-ல்
நிற்கும் மரணம் மட்டும்
வரிசையில்
முந்தத்துடிக்காமல் இருக்கட்டும்.

4 comments:

tamil said...

சனிபகவானுக்கு சனியன்று ப்ரீதி செய்தால் சரியாகுமோ? அல்லது
துர்க்கைக்கு ராகு காலத்தில் வாரம் ஒருமுறையென 12 வாரம் வழிபாடு செய்தால் குழப்பம் எல்லாம் தீருமோ?

அருகில் உள்ள ஸ்டார்பக்ஸில்
வரும் திங்கள் காலை 9 மணிக்கு மேல் காபியும்,கேக்கும் சேர்ந்து சாப்பிட்டால் 69வது பிரிவு தவிர்க்கப்படுமோ?

Where Do We Fall When we Fall in Love- இந்தப் புத்தகத்தில் இந்த தலைப்பில் உள்ள கட்டுரையில் லதா-கந்தசாமி காதல்-ஊடல்-’மோதல்’-பிரிதல்களுக்கு விடை இருக்குமோ?.

எல்லாம் அந்த லதா-கந்தசாமிக்கே வெளிச்சம் :).

Perundevi said...

Thara said ...

சும்மா சொல்லக்கூடாது
செம சூப்பர் 68வது பிரிவு
ஆய கலை 64ங்கிலும் கனிந்து கலந்து
யாஹூ யாஹூவென
அல்லும் பகலும் த்யானித்து
அச்சூவெனத் தும்மினால்
என்னாச்சூஊஊஊஊ செல்லமென
கவலைப்பட்டு, பட்டதற்குச் சிணுங்கீஈஈஈ
அனுவோ அனுஷ்காவோ
அணுகினதற்கு சுணங்கி
விரலறுத்து ரத்தம் வியர்த்தம் பண்ணி
மின்னஞ்சல் கணக்கு முடித்து
முடித்ததற்கு முடங்கியிருந்த
லதா கந்தசாமிகளின் கதையை
எண் கணிதம் வகுத்து சுபமாக்கி
எழுட்தப்பட்டிருக்கும் இக்கவிதையை
சும்மா சொல்லக்கூடாதடி
என் செல்லமே
(நல்ல வேளை நமக்குள்ளொன்றும் காதலில்லை...ஈஷினதை எரிக்கவோ ஈமேயில் கணக்கை முடிக்கவோ... ஆக காதலின்மை நன்றென்றறிக..)

!!!!

கார்திக்வேலு said...

liked the account ledgering format.

it sets the matter of fact ...repititive detached ..have to go through this dutiful tone ..

what you are saying ..went so well with how you are saying.

Perundevi said...

கார்த்திக், ரொம்ப சரி. முயற்சித்த repetition நன்றாக communicate
ஆகியிருக்கிறது. நன்றி.