நீங்கள் இதை நம்பாமலிருக்கலாம்
ஆனால் வெகுசொற்பத்
துன்ப உராய்வோடு
வாழ்க்கையைக் கடப்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் நன்றாக உடையுடுத்துவார்கள்
நன்கு தூங்குவார்கள்
அவர்கள் குடும்ப வாழ்க்கை குறித்து
அவர்களுக்கு நிம்மதியிருக்கும்.
தொந்தரவுற மாட்டார்கள்
மிகநன்றாக உணர்வார்கள் அவ்வப்போது.
அவர்கள் இறக்கும்போதும்
அது எளிய சாவாக இருக்கும், பொதுவாக அது நேரும்
தூக்கத்தில்.
நீங்கள் நம்பாமலிருக்கலாம்
இதை
ஆனால் இப்படியான மனிதர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால்
அவர்களில் நான் ஒருவனில்லை.
ஆ! இல்லை, நான் அவர்களில் ஒருவனில்லை,
அவர்களில் ஒருவனாக
இருக்கமுடிவதற்கு
அருகில்கூட நானில்லை.
ஆனால் அவர்கள்
அங்கே இருக்கிறார்கள்.
நானும் இங்கே.
(விசனம் தூண்டிய கவிதை இது: பெருந்தேவி)
2 comments:
மிக நல்ல முயற்சி. பகிர்தலுக்கு மிக்க நன்றி.
ஒரு சின்ன ஆலோசனை: மொழிபெயர்ப்போடு அதன் ஆங்கில மூலவடிவத்தையும் (ஆங்கிலமெனில்)
தர முடிந்தால், இரண்டையும் (மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு ) அதனதன் அழகோடு ஆராதிக்க முடிகிற வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் விருப்பப்படி மொழிபெயர்ப்பு மேலும் செம்மையுற வாய்ப்பு அமையலாம், வாசகர்களால்.
மீண்டும் நன்றி.
ஊக்கத்துக்கு நன்றி “நானும் என் கடவுளும்.”
இவ்வலைப்பூவில் இருக்கும் பெரும்பாலான கவிதைகளின் ஆங்கில வடிவம் இணையத்திலேயே கவிஞரின் பெயரைக் கூகிளிட்டுப் பெறலாம். இதற்கு வசதியாக கவிதைகளின் ஆங்கிலத் தலைப்புகளை இனி கொடுக்கிறேன்.
Post a Comment