Saturday, June 26, 2010

இன்னொரு படுக்கை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (6)

(Another Bed: Charles Bukowski)

இன்னொரு படுக்கை
இன்னொரு பெண்

இன்னும் திரைச்சீலைகள்
இன்னொரு குளியலறை
இன்னொரு சமையலறை

வேறு கண்கள்
வேறு முடி
வேறு
பாதங்கள் மற்றும் கட்டைவிரல்கள்
ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நிரந்தரத் தேடல்.

நீ படுக்கையில் இருக்கிறாய்
அவள் வேலைக்குச் செல்ல உடையணிகிறாள்
நீ யோசிக்கிறாய் என்ன ஆயிற்றென்று
கடைசியாகச் சென்றதற்கு, அதற்கு முன்னதற்கு
இதெல்லாமே ரொம்ப வசதிதான்—
இந்தப் புணர்வு
இந்த ஒன்றாகப் படுத்துக்கொள்ளல்
இந்த மென்மையான அன்பு…

அவள் போனபிறகு நீ எழுகிறாய், அவள்
குளியலறையை உபயோகிக்கிறாய்,

இதெல்லாமே ரொம்ப அந்நியோன்னியமாக, அந்நியமாக
திரும்ப படுக்கைக்குச் செல்கிறாய்
இன்னும் ஒருமணி நேரம் தூங்குகிறாய்.

போகும்பொழுது வருத்தத்துடன் போகிறாய்
ஆனாலும் மீண்டும் பார்ப்பாய் அவளை
நடந்தாலும் நடக்காவிட்டாலும்.
கடற்கரைக்கு ஓட்டிச் செல்கிறாய், அமர்ந்திருக்கிறாய்
காருக்குள். கிட்டத்தட்ட நண்பகல் இப்போது.
-இன்னொரு படுக்கை, வேறு காதுகள், வேறு
காதணிகள், வேறு வாய்கள், வேறு செருப்புகள், வேறு
உடைகள்

வண்ணங்கள், கதவுகள், தொலைபேசி எண்கள்

தன்னந்தனியாக இருக்க வலு உனக்கு இருந்தது ஒரு காலத்தில்.
அறுபதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆண் என்பதால்
இன்னும் அறிவோடு இருக்கவேண்டும் நீ.

காரைத் துவக்குகிறாய், மாற்றுகிறாய்,
யோசித்தபடி, சென்றவுடன் ஜீனி-க்கு தொலைபேச வேண்டும்.
அவளை வெள்ளிக்கிழமையிலிருந்து பார்க்கவில்லை.


(மொழிபெயர்த்துச் செய்தவரின் குறிப்பு: இக்கவிதையில் ஆண் பெண்ணாக, பெண் ஆணாக இருந்தால் எப்படியிருக்கும்? அல்லது எல்லாமே ஆணாக அல்லது பெண்ணாக இருந்தால்.....? இருந்தாலும், “வேறு வேறுகள்” தருகிற அலுப்பு என்பதை எப்பாலினரும் எப்பாலிடத்தும் ஏதோவொரு நேரத்தில் உணரக்கூடிய யதார்த்தம் காரணமாக, இக்கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்)

3 comments:

latha ramakrishnan said...

hello,

my first poem was published in 1983in kanaiyaazhi. this is for your information.

affectionately

rishi

Raja said...

நல்லாயிருக்குங்க... இலக்கிய வாசிப்பே இல்லாதவன் நான்... தொடர்ந்து உங்கள் பக்கங்களைப் படிக்கப் போகிறேன்...

Perundevi said...

நன்றி ராஜா...உங்கள் வார்த்தைகள் மேலும் உத்சாகம் தருகின்றன எனக்கு. :)