Sunday, March 6, 2011

புணர்-விளையாட்டு: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (13)

மோசமானவற்றிலேயே
நிசமாகவே
ஆக மோசமானது
இரவுக்குப் பின் இரவாக
உனக்கு இனியும் புணரப்பிடிக்காத பெண்ணோடு
ஒரே படுக்கையில் கிடப்பதுதான்.

அவர்களுக்கு வயதாகிவிடுகிறது, அவர்கள் அழகாக
இருப்பதில்லை இனிமேலும்—அவர்கள்
குறட்டைகூட விடுகிறார்கள், ஆன்மாவை
இழந்துவிடுகிறார்கள்.

ஆக, நீ படுக்கையில், சிலசமயம் கொஞ்சம் திரும்புகிறாய்,
உன் பாதம் அவளுடையதைத் தொடுகிறது—
கடவுளே, மோசம்!—
இரவு இன்னமும் இருக்கிறது வெளியே
திரைச்சீலைகளுக்கும் அப்பால்
ஒரே கல்லறையில்
உங்கள் இருவரையும் உறையிட்டுமூடி.

மேலும் காலையில் நீ குளியலறைக்குப்
போகிறாய், வரவேற்பரையில் செல்கிறாய், பேசுகிறாய்,
ஏதேதோ தொடர்பில்லாமல் சொல்கிறாய்; முட்டை பொரிகிறது, கார்கள்
கிளம்புகின்றன.

ஆனால் எதிரெதிரே உட்கார்ந்திருக்கின்றனர்
இரு அந்நியர்கள்
ஜாம் இடப்பட்ட டோஸ்டைத் தொண்டைக்குள் திணித்தபடி
உம்மென்றிருக்கும் மூஞ்சியையும் குடலையும்
காப்பியில் எரித்தபடி.

அமெரிக்காவில் பத்து மில்லியன் இடங்களில்
இதேபோலத்தான் –
ஒன்றுக்கெதிர் இன்னொன்றாக
சலித்துப் போன வாழ்க்கைகள்
எந்தப் போக்கிடமும் இல்லை.

காரில் ஏறுகிறாய் நீ
பணியிடத்துக்கு ஓட்டிச் செல்கிறாய்
அங்கே இன்னும் அந்நியர்கள், பெரும்பாலும்
ஏதோவொருவரின் மனைவிகள் கணவர்கள்
வேலையெனத் தலைக்குமேல் தொங்கும் கத்தி
தவிரவும் அவர்கள் குலாவுகிறார்கள், ஜோக் அடிக்கிறார்கள்,
கிள்ளிக்கொள்கிறார்கள், சிலசமயம்
வேறெங்கோ ஒரு துரிதப்புணர்வும் முனைந்து முடிகிறது
அதை வீட்டில் செய்ய முடியாது
மேலும் அப்புறம்
காரோட்டி வீட்டுக்குத் திரும்பி வருதல்
கிறிஸ்துமஸ் அல்லது உழைப்பாளர் தினம் அல்லது
ஞாயிற்றுக்கிழமை அல்லது அதைப் போல ஒன்றுக்கான
காத்திருத்தலோடு.

(இக்கவிதை பெண்ணியசார்புநிலை எடுப்பவராக எனக்குப் பிரச்சினையான ஒன்று, ஆனால் கவிஞராகப் பிடித்திருக்கிறதே, என்ன செய்வது? அடையாளங்களின் மோதலில் இங்கே கவிஞரே வென்றார். :))

4 comments:

சமயவேல் said...

நான் எழுதிய/எழுதவிரும்பிய/எழுதிக் கொண்டிருக்கும் கவிதை போலவே இருக்கிறது. இன்றைய தினங்கள் இப்படித்தான் கழிகின்றன.

சமயவேல் said...

நான் எழுதிய/எழுதிக்கொண்டிருக்கும் கவிதை போலவே இருக்கிறது. இப்பொழுது நாட்கள் இப்படித்தான் கழிகின்றன. மொழிபெயர்ப்பு GOOD.

சமயவேல் 07.08.2011

Anonymous said...

நீங்கள் புனைந்த "நீ பாதி நான் பாதி கண்ணே" என்ற கவிதையின் தொனி இந்த கவிதையிலும் கேட்கிறதே? நீங்கள் பெண்ணின் குரலில் எழுதினீர்கள். இக்கவிஞர் ஆணின் குரலில் எழுதியிருக்கிறார். பால் வேற்றுமையை தாண்டி பார்க்கும்போது சொல்லப்படும் உணர்வுகள் ஒன்றுதான் !

Perundevi said...

சமயவேல், உங்களுக்கு நான் இட்ட மறுமொழி ஏனோ பிரசுரமாகவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது:

“ஆம், கவிதையின் தினங்களாக மட்டுமே இத்தகைய தினங்கள் இருக்கட்டும்.”

hemgan: ஆம். நன்றி.