Wednesday, July 27, 2011

பீகாரிலிருந்து வந்தவர்கள்

இன்னொரு அந்தி.
தெருவோர பேக்கரியில்
பத்துரூபாயை நீட்டி பன் கேட்டான் சிறுவன்.
கூட மூவர்
(அம்மா? தங்கை? குட்டித்தம்பி?)
கட்டிடத்தொழிலாளர்கள் இவர்கள்
வடக்கத்திக்காரர்கள்
(சொன்னது கடைக்காரர்)
இரவுணவுக்கா?
ஆமாம்
மொத்தக் குடும்பத்துக்கா?
ஆமாம்
தினமுமா?
ஆமாம்
குழந்தைக்குமா?
ஆமாம்
ஆமாம்
(பன்னை டீயில் தோய்த்து
குழந்தைக்கு அவள் ஊட்டும்போது
நிலாவைத் தேடுமா அவள் கண்கள்?
குறுக்காக நீண்டுயரும் தளங்களுக்கு இடையே
தென்படுமா அதன் ஒரு கீற்று?
நிலவைக் கட்டிடம் விழுங்கிவிட்டிருந்தால்
ஒரு குழல்விளக்குத் துண்டு
ஒளிருமா அருகே?)
மின் தடை இருக்குமா
இன்றைக்கு இரவு?
உரத்த கடைசிக்கேள்வி மட்டும்
உடனே கால்முளைத்து
அடுக்குமாடிக் கட்டிடங்கள்
பலவும் நீளத்தாண்டி
ஆ.....மாம்
எதிரொலித்தது நகரமெங்கும்
பல குரல்களில் பல மொழிகளில்
ஆத்திரத்தோடு.

3 comments:

கோநா said...

பெருந்தேவி,
அந்த டீக்கடைக்காரர் சொன்னது போலவே (வடக்கத்திக்காரர்கள்) பீகாரிலிருந்து வந்தவர்கள் என்பதை விட வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற தலைப்பு மிக பொருத்தமானதாக தோன்றுகிறது.

Perundevi said...

நன்றி கோநா. தலைப்பு அப்படியொரு யதார்த்தத் தொடர்போடு இருக்கவேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். கவிதைசொல்லி பின்னால் கேட்டறிந்த ’தகவலாகவும்’ அது இருக்கலாம், அல்லது அவரது யூகமாகவும் இருக்கலாம்.

K.R.அதியமான் said...

நல்ல கவிதை. குழந்தை தொழிலாளர்கலை காணும் போது, திக்கற்றவர்களை காணும் போது நானும் இந்த ‘வலியை’ உணர்ந்திருக்கிறேன்.

பிகார் சகல வளங்களும் கொண்ட பகுதிதான். நீர் வளம், கனிம வளம் என்று.. ஆனாலும் அங்கு கொடும் வறுமை. வேலை இல்லா திண்டாட்டம். புலம் பெயர வேண்டிய அவல நிலை. ஒரே காரணம் : அங்கு லிபரல் ஜனனாயகமும், தொழில் முனைவோர்களும் செயல்பட இயலாத மாஃபியா சூழல்.

இதை ஒட்டிய எமது பழைய பதிவு : (எதிர் பிரச்சாரம் போல் இவைகளை இங்கும் quote செய்யும் புத்தி எனக்கு) :http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html வறுமைக்கு காரணமும், விளைவுகளும்