கவிஞர் லீனா மணிமேகலைக்கு,
முதலில் உங்கள் பதிவில் http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/06/blog-post.html என்னைத் திட்டி என் வலைப்பூவுக்கு பப்ளிசிட்டி கொடுத்ததற்கு நன்றி. எனக்கும் உங்களோடு உரையாட விருப்பமில்லைதான், இருந்தாலும் நீங்கள் என்மேல் பல புகார்கள் வைத்திருப்பதால், இதை எழுதுகிறேன்.
உங்கள் கவிதைகளை முன்னிட்டு உங்களைப்பற்றி வந்த தனிப்பட்ட தாக்குதல்கள் (வினவுத்தளத்தில் வந்தவை உட்பட) மோசமான முன்னுதாரணங்கள் என்றுதான் நினைக்கிறேன். நானும் ஜமாலனும் உங்கள் கவிதைகளைப்பற்றி எழுதிய கட்டுரையில் இதைக்குறிப்பிட்டிருக்கிறோம். எங்களை விமரிசித்த வினவின் பின்னூட்டத்தையும் தொடர்புடைய பதிவில் நீங்கள் காணலாம். http://innapira.blogspot.com/2010/04/x.html
இனி உங்கள் மற்ற புகார்களுக்கான என் பதில்கள்:
//நர்சிம் வக்கிரம் என்பதை ஒரு கேடு கெட்ட வக்கிர கும்பலின் இணையதளத்தில் சென்று தான் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமா? இதில் உங்களுக்குத் தொடர் வண்டி போல பெண்ணியம், பின்நவீனத்துவம், உடலரசியல், கோட்பாடெல்லாம் பேசும் "என்னருமை" தோழர் ஜமாலன் வேறு. அவர் "யாரெ"ன்றே எனக்கு குழப்பம் வந்துவிட்டது.//
நர்சிம்மின் பிரச்சினையின் முதல் கட்டுரையில் அவர் பற்றி வினவு வைத்த விமரிசனம் சரியென்று எனக்குத்தோன்றியது. உடனே பின்னூட்டமும் இட்டேன். (ஜமாலனுடைய பின்னூட்டத்துக்குப் பிறகுதான் என் பின்னூட்டம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது :-). நீங்கள் ஜமாலனை என் தொடர்வண்டி என்று சொன்னதற்கு அவர் வருத்தப்படுவார், பாவம்.) மேலும், எந்தத்தளத்தில் நான் பின்னூட்டமிட வேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை. உங்கள் கவிதைகளைப் பற்றிய பதிவுகள் போன்ற சிலதில் சில அதீதமான தேவையற்ற சொற்பிரயோகங்களும் பின்னூட்டங்களும் வினவு தளத்தில் இருந்தன. ஆனால் அதற்காக அரசியல் களப்பணியைப் பொறுத்தவரை ம.க.இ.க தோழர்களின் பங்களிப்பையோ கமிட்மெண்ட்டையோ குறைத்து மதிப்பிடமுடியாது என்றே நான் கருதுகிறேன். இன்றைக்கும் ஆப்பரேஷன் க்ரீன்ஹண்ட்டை எதிர்ப்பது, சிதம்பரம் கோயில் நுழைவு உட்பட பலபோராட்டங்களில் அவர்களின் ஈடுபாட்டை, பங்களிப்பை நான் மதிக்கிறேன்.
//அறிவு மரபு பற்றிய உங்கள் பார்ப்பனீய வியாக்கியானங்களையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். விளைவுகளை மட்டுமே நம்புபவள் நான். பாசாங்குகளிலிருந்து இலக்கியத்தை காப்பாற்றுவது முக்கியம் என்பது என் தீர்மானம்.//
இவை வேறு யாருக்கோ எழுதவேண்டியதை எனக்கு எழுதிவிட்டீர்கள்போல. அறிவு மரபை பற்றி யார் எப்போது எங்கே பார்ப்பனீய வியாக்கியானம் கொடுத்தது என்று நான் அறியேன்.
//பிறப்பால் பார்ப்பனியர் என்றால் நான் எழுதுவது பார்ப்பனியப் பிரதியா என்று நீங்கள் எடுக்கும் பால பாடங்கள் ரொம்ப உளுத்துப் போனவை. கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லாமல் பார்ப்பனிய குழுவூக்குறிச் சொற்களை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்தவும் செய்துவிட்டு, அதற்கு வக்காலத்தும் வாங்கும் உங்கள் சொந்த சாதி அபிமானங்களால், இழக்கப் போவது நீங்கள் தான். வேறு யாருமல்ல.//
பார்ப்பனியம் எது என்பதைப்பற்றி சில கேள்விகள் என் முந்தைய பதிவில் வைத்தேன், என் பதிவை வாசிப்பவர்களுக்காக. இலக்கியப் பிரதிகளில் பார்ப்பனியம் பற்றிய விசாரணைக்கு பதிவை முன்னிட்ட உரையாடல்கள் உதவும் என்பதால். உங்களிடம் பதில் இல்லை என்றால் ”உளுத்துப்போனவை,” ”கூச்சநாச்சமில்லை,” ”சாதி அபிமானம்” என்றெல்லாம் திட்டுவீர்கள்போலும். நல்லது. ”வக்கில்லையா?”, “கூச்சநாச்சமில்லை” என்ற வார்த்தைகளெல்லாம் ஏதோ அரசியல் கூட்டத்தில் நாலாந்தரப் பேச்சை கேட்கிற உணர்வையே தருகிறது. உடனே இப்படி நான் சொல்வது நாகரிகப்பேச்சை ஆதரிக்கும் பார்ப்பனியம் என்று நீங்கள் குரல் கொடுக்கலாம். ஆனால் அப்படிக் குரல் கொடுப்பது, நாகரிகத்தை பார்ப்பனியத்துக்குப் பட்டா போட்டு தந்ததாகிவிடும்.
//வினவு, கீற்று இன்னும் புற்றீசல் போல பதிவுலகில் பொறுக்கித் தின்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் வைரஸ்களுக்கான உங்கள் விசுவாசத்திற்கு நீங்கள் விளக்கம் தந்தாக வேண்டும். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி, ஆனால் அவர்கள் மற்றவற்றில் நியாயமாகப் புரட்சி செய்துவிடுவார்கள் என்றெல்லாம் நியாயம் பேசினால் நீங்கள் பேசும் அரசியல், கோட்பாடு,நம்பும் எழுத்து எல்லாவற்றையும் கைவிட்டு விடுங்கள்.//
கீற்றில் இதுவரை நான் பின்னூட்டம் இட்டதில்லை. வினவைப் பொறுத்தவரை என் நிலைப்பாட்டை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஒருசில ஆதரிப்புப் பின்னூட்டம் “விசுவாசம்” என்று அறியப்படுமானால், எக்கச்சக்கமாய் இருக்கும் இத்தகைய “விசுவாசிகளால்” புரட்சி சீக்கிரமே சாத்தியப்பட்டுவிடும்.
மேலும், இதை செய்யுங்கள், அதை பண்ணுங்கள் என்கிற உங்கள் அதிகாரத்தொனியை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.
//உங்கள் புராதன வார்த்தைகளையெல்லாம் தாண்டி தமிழ் நவீனக் கவிதை வேறு இடத்திற்கு நகர்ந்துவிட்டது.நீங்கள் நலம் பேணும் சொற்களை வரிசைப்படுத்தினால் அதன் நுண்ணரசியல் உங்கள் அடையாள விடுபடலின் உண்மை நிலவரத்தை தோலுரிக்கும்.//
தாராளமாக வரிசைப்படுத்தலாம். நீங்கள் என் கவிதைகளைப் பாராட்டி எஸ். எம். எஸ் கொடுத்தபோது, முகப்புத்தகத்தில் கமெண்ட் போட்டபோது, பிறகு என், ஜமாலன் கட்டுரைக்கான உங்களின் பதிலில், ”பார்ப்பனியச் சொற்களையும்” தாண்டி என் “பெருவாரியான கவிதைகளை” நீங்கள் ”விரும்பி வாசித்ததாக” எழுதியபோது, என் கவிதைகளின் புராதன சொற்களும் நுண்ணரசியலும் உங்களுக்குத் தெரியவில்லைபோலும். நல்லது.
//தலித்திய அரசியல் எழுச்சிக்குப் பின்னால், எழுத வந்த பார்ப்பனரல்லாத பெண்ணெழுத்து மிகப் பெரிய ஒடுக்குமுறைக்கும், அதை மீறிய விவாதத்திற்கும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த கொந்தளிப்பு நீள்கிறது. தமிழ்க் கலாசார அசைவுகளில் இது மிக முக்கியமான சலனம். இதைப் புனைவு என்று நீங்கள் சொல்வதிலேயே உங்கள் ஆதிக்க கருத்தியல் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. என்னங்க ஒரு பத்து வருடமிருக்குமா? இதற்கே இப்படி காய்கிறீர்களே? ஆயிரமாயிரம் வருடமாக அறிவு மரபிலிருந்து ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்கள் எப்படி காய்ந்திருப்பார்கள்?//
நான் முந்தைய பதிவில் சொல்லியிருப்பது தமிழ் இலக்கியச்சூழலில் உடல்மொழி என்கிற ஒன்று (இது என்ன என்பதைத் தனியே ஆராய வேண்டியிருக்கிறது), கவிதைச்சூழலில் கொண்டிருக்கிற கருத்து மேலாண்மையைப்பற்றி. பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் அல்லாத பல பெண் கவிஞர்கள் (வெண்ணிலா, இளம்பிறை உட்பட) உடல்மொழி அற்ற பெண்ணியத்தளங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கியச்சூழலில் உடல்மொழி பெறுகின்ற கவனிப்பு, இக்கவிதைகள் பெறுகிறமாதிரி எனக்குத் தெரியவில்லை. கவிஞர் ரிஷி பார்ப்பனப் பெண் கவிஞர்கள் ஒதுக்கப்படுதலைச் சொல்லியிருக்கிறார். அதைவிட, பொதுவாகவே பெண்களின் உடல்மொழி சாராத கவிதைகள் கவனப்படுத்தப்படவில்லை என்று நான் அவதானிக்கிறேன். உடல்மொழிக் கவிதைகளின் வரலாறாக மட்டுமே தமிழ் பெண்ணிய வரலாறு இலக்கியத்தில் எழுதப்படுமானால் அத்தகைய வரலாறு புனைவு என்கிறேன். இதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். ஆனால் நான் பார்ப்பனர் அல்லாதோரின் எழுத்துக்கு எதிரி என்பதுபோல நீங்கள் பொய் சொல்கிறீர்கள், திரிக்கிறீர்கள்.
சரி, உங்கள் கட்டுரைக்கு வருகிறேன். http://www.lumpini.in/a_punaivu-005.html
மஹாஸ்வேதாதேவியின் திரௌபதி கதையின் வன்புணரப்படுத்தப்பட்ட திரௌபதிபோல பாதிக்கப்பட்டவள் என்பதாக உங்களை உங்கள் கட்டுரையில் முன்நிறுத்திக்கொள்கிறீர்கள் நீங்கள். அப்படி நிறுத்திக்கொள்ளும்போது, எதை நீக்கம் செய்கிறீர்கள் என்று பார்க்கலாம். திரௌபதி (அவளின் மறுபெயர் தோப்தி) ஒரு சந்தால் ”பழங்குடி”ப்பெண், நக்ஸல்பாரி போராட்டத்தில் ஈடுபட்டவள். தலைமை தாங்கியவள், நக்ஸல்களை ஒடுக்கும் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய ராணுவத்தலைமை, அவளின் அரசியல்செயல்பாட்டுக்கான தண்டனையாகவே அவளைப்பிடித்தபின் ஆட்களைவிட்டு வன்புணரச்செய்கிறது. மகாபாரத, மரபுசார்ந்த திரௌபதியின் வேறொரு நவீனவடிவமாக வருகிறாள் தோப்தி, முக்கியமாக ஐவரை மணந்த திரௌபதிக்கு நேர்மாறாக ஒரே கணவனோடு. கணவனோடு ஒத்த புரட்சிச்சிந்தனை கொண்டவளாக இருக்கிறாள் தோப்தி. ராணுவத்தால் வன்புணர்ந்து நிர்வாணமாக்கப்பட்ட அவள் உடல் பாலியல் விடுதலையைக் கோருவது அல்ல. ஏற்றுக்கொண்ட ஆட்சி-அதிகார மறுப்பு அரசியலுக்காக குரூர வன்புணர்ச்சித் தண்டனையை ஏற்ற உடல் அது, அதுவே தன் குருதிபடிந்த நிர்வாணத்தால் ராணுவத்தலைமையை அச்சுறுத்தவும் செய்கிறது.
பாலியல் விடுதலையைப் பேசும் பெண்ணியத்தை ஒருவர் பேசலாம். அது அவரது தேர்வு. ஆனால் அதே நேரத்தில், அப்படிப்பேசும்போது வேறுபிரதிகளின் படிமங்களை உபயோகிக்கும்போது நேர்மை வேண்டும். மஹாஸ்வேதா தேவியின் இந்தக் குறிப்பிட்ட பிரதியிலிருந்து, தோப்தியின் “பழங்குடி” அடையாளத்தையும் ”போராளி” அடையாளத்தையும் நீக்கிவிட்டு, உங்களை வன்புணரப்பட்ட திரௌபதியின் வடிவமாதிரியாக கட்டுரையில் உங்களைக் காட்டிக்கொள்கிறீர்கள். மஹாஸ்வேதாதேவியின் கதை தமிழ்நாட்டில் யாருக்குத் தெரியும் என்கிற அலட்சியம்தானே.
உரையாடலைச் செய்யும்போது பொய்சொல்லாத நேர்மை மட்டுமல்ல, ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடும் பயனில சொல்லா பண்பும் வேண்டும்.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லரகத்து.
இரண்டும் உங்களிடம் இல்லை. இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன். வேண்டுமானால் நீங்கள் தனிமொழியாக உங்கள் வசைபாடலைத் தொடரலாம்.
பெருந்தேவி
2 comments:
Anthamma murpokkena kaattikollum pirpokki enpatharku veru engum uthaaranam theda vendam,than oru pathivar alla,blog enpathe achu pirathikalukkana kidangu ena perumaiyaga solli kolkirar.
Varungkalathil printed media enpathe kaanamal poi inaiya/digital media mattume irukkum enpathai kooda unaratha makkattaiyaga ullar.
Avarai Romba perusa eduthukolla thevai illai.
இரு பின்னூட்டங்களை மறுத்திருக்கிறேன். காஞ்சி ஜெயேந்திரஸ்வாமி சீடர்களுக்கு இவ்விவாதம் பிடிக்காததுதான். அவர்களின், என் பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment