Sunday, November 20, 2011

”வால் தெருவை ஆக்கிரமிப்போம்” இயக்கம்: பெண்ணியச் சிந்தனையாளர் ஜூடித் பட்லரின் சிற்றுரை

(தமிழாக்கம்)

எல்லாருக்கும் ஹலோ. நான் ஜூடித் பட்லர். என் ஆதரவைத் தர இங்கே நான் வந்திருக்கிறேன்; முன்னெப்போதுமில்லாத வகையில் இங்கே காட்சிப்படுகிற வெகுசன மற்றும் மக்களாட்சியின் விருப்புறுதிக்கு என் ஒன்றிப்பைத் (solidarity) தர வந்திருக்கிறேன். மக்கள் கேட்கிறார்கள்: இவர்களின் கோரிக்கைகள் தாம் என்ன? கூறுகிறார்கள்: இவர்களுக்குக் கோரிக்கையேயில்லை, இது இவர்களின் விமர்சகர்களைக் குழப்பத்திலாழ்த்துகிறது; அல்லது இப்படிச் சொல்கிறார்கள்; சமூக சமத்துவம் மற்றும் பொருளியல் நீதிக்கான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள், ஆகவே இந்த இயலாத கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையும்கூட.

ஆனால் இதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்! நம்பிக்கை என்பது ஒரு இயலாத கோரிக்கை என்றால், இந்த இயலாத ஒன்றையே நாங்கள் கோருகிறோம். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேலைக்குமான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள் என்றால் இயலாதவற்றையே நாங்கள் கோருகிறோம். பொருளியல் மந்தநிலையால் ஆதாயம்கண்டவர்கள் தங்கள் செல்வத்தை மீள்-பகிர்வு செய்யவேண்டும், தங்கள் பேராசையை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கைகள் இயலாதவை என்றால், ஆமாம், நாங்கள் இயலாதவற்றையோ கோருகிறோம்.

சரிதான், எங்கள் கோரிக்கைகளின் வரிசை நீண்டது. இவை எவற்றுக்கும் எந்த நடுவாண்மையும் செல்லுபடியாகாது. செல்வம் ஒரேயிடத்தில் குவிந்துகிடப்பதை நாங்கள் மறுக்கிறோம். வேலைசெய்யும் மக்கள்திரளை கழித்துக்கட்டக்கூடியவர்களாக ஆக்குவதை மறுக்கிறோம். கல்வியை தனியார்மயமாக்குவதை மறுக்கிறோம். கல்வியை பொதுநலமென்றும் பொதுவிழுமியமென்றும் நம்புகிறோம். பெருகிக்கொண்டேவரும் ஏழைகளின் எண்ணிக்கையை எதிர்க்கிறோம். வீடுகளிலிருந்து மக்களை வெளியேதள்ளும் வங்கிகளுக்கு எதிராகவும், ஆராயவும்முடியாத எண்ணிக்கையிலான மக்களுக்கு மருத்துவ வசதி கிட்டாததற்கு எதிராகவும் ஆத்திரப்படுகிறோம். பொருளியல் இனவெறியை மறுக்கிறோம், அதன் முடிவைக் கோருகிறோம்.

உடல்களாக நாம் பொதுக்களத்தில் வந்தடைவதால் இது முக்கியமாகிறது. உடல்களாக நாம் துயருறுகிறோம், எங்களுக்கு உணவும் உறைவிடமும் தேவைப்படுகிறது, விழைவிலும் சார்பிலும் உடல்களாக ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம். ஆக இது கூட்டுப்பொதுவுடலின் அரசியல், அவ்வுடலின் தேவைகள், அதன் இயக்கம், அதன் குரல். நமது விருப்புறுதியை ஓட்டு அரசியல் பிரதிபலிப்பதாக இல்லை என்றால் நாம் இங்கே இருந்திருக்கமாட்டோம். ஓட்டு அரசியலால் மறக்கப்பட்ட கைவிடப்பட்ட வெகுசன விருப்புறுதியாகத்தான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், நகர்கிறோம். ஆனாலும் இங்கே இருக்கிறோம், மீண்டும் மீண்டும் ”மக்களாகிய நாங்கள்” என்கிற சொற்றொடரை வலியுறுத்தியபடி, கற்பனைசெய்தபடி.

(ஆங்கில மூலம் இங்கே: http://www.autostraddle.com/and-then-judith-butler-showed-up-at-occupy-wall-street-in-solidarity-117911/ )

என் குறிப்பு: தமிழகத்தின் இன்றைய நிலையும் (அணு உலை, விலைவாசி உயர்வு) நம்முன்/நம்மில் காட்சிப்படுவதிலேயே இந்த மொழிபெயர்ப்பின் சாத்தியம் அடங்கியிருக்கிறது.

3 comments:

தமிழ்நதி said...

மக்களுக்கும் மக்கள்விரோத அரசுகளுக்குமான இழுபறி எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருக்கிறது. ”உடல்களாக நாம் துயருறுகிறோம்” என்பது பரமக்குடிப் படுகொலைகளையும் நினைவுபடுத்துகிறது. தாழ்த்தப்பட்டோர் எனச் சொல்லப்படுவோரின் மீதான கொலை வெறித் தாக்குதல், கனதியானதெனக் கருதப்படாத அவர்களின் குருதி.... தமிழகத்தில் Wall Street போராட்டங்கள் துண்டுதுண்டாக நடந்துகொண்டிருக்கின்றன.

Perundevi said...

தமிழ்நதி: ”உடல்களாக நாம் துயருறுகிறோம்” என்கிற வரி பரமக்குடி படுகொலைகளை விட வேறெதற்குப் பொருந்தும்? என்றாலும் ஒன்றைக் கவனிக்கவேண்டும். வால் தெரு போராட்டம் அரசை எதிர்த்து என்பதைவிட அரசையும் மிகுந்த வல்லமை கொண்ட, அரசை ஆட்டைப்படைக்கும் உலகளாவிய முதலீட்டிய கார்ப்பரேட்களை முக்கியமாகக் குறிவைத்து. வால் தெரு ஆரம்பகட்ட போராட்டங்களில் அமெரிக்க ஒபாமா அரசு இவற்றை ஆதரித்ததை (முரணென்றாலும்) இங்கே குறிப்பிடவேண்டும்.

ஒப்புநோக்கும்போது தமிழ்நாட்டில் அணு உலைக் கட்டுமானமும் விலைவாசி ஏற்றமும் தனியாருக்கும் கார்ப்பரேட்களுக்கும் பலத்த ஆதாயத்தையும் அதிகாரத்தையும் தருவதாக இருக்கின்றன. வால் தெரு போராட்டம் இவற்றோடு அதிகம் பொருந்துவதும் இதனால்தான். மாறாக, பரமக்குடி கொலைகளில் அரசின் பங்கு மிகவும் நேரிடையானது, கார்ப்பரேட்களின் நலனை அவாவும் அரசின் விருப்புறுதிக்கும் மேலாக பருண்மையான சாதிவெறிக் கொலைகள் அவை. இதை யோசிக்கும்போது, ஜனநாயகச் சமத்துவத்துக்குக் குறியீடாகி நிற்கும் “மக்களாகிய நாம்” என்னும் சொற்றொடருக்கு முதலில் நாம் வந்து சேர்வதற்கே காலம் பிடிக்குமோ என்று அச்சமேற்படுகிறது.

வினோத் said...

நன்றி..
அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com