ஒருபோதும்
கவிதைபற்றிக் கவிதை எழுதாதே
சிலகோடி கவிதைகளின் பாடுபொருளாக
நீ இருந்தாலொழிய.
ஒருபோதும்
காதலில் தோற்றதை வென்றதை அல்லது
இடையில் தின்னப்பட்டதை எழுதாதே.
சிலகோடிப் பேர்களை காதலுக்காக
நீ சாகடித்திருந்தாலொழிய அல்லது
சிலகோடி பேர்களாவது உன்னைச்
சாகடிக்கத் தேடிக்கொண்டிருந்தாலொழிய.
ஒருபோதும்
மழையை பூவை குழந்தையைப் பற்றி எழுதாதே
மொழிநடைக்கு அலங்காரமாக இருக்கக்கூடிய
அபாயத்தை அளிக்காதே அவைகளுக்கு
ஒருபோதும்
சொந்தக்கதையை எழுதாதே
உன் வாழ்க்கையை உன் கண்களிலிருந்து
நீ பார்க்கும்போதே
கண்டங்களுக்கப்பால்
அந்நியப்படுத்திவிடும் கவிதை
ஒருபோதும்
அரசியல்சரிக்காகக் கவிதை எழுதாதே
பாலுறவை வென்றெடுக்க கவிதை எழுதாதே
தினசரிக்கடமையில் ஒன்றாய்க் கவிதை எழுதாதே
கவிதையாக உருக்கொள்ளாத கவிதை
அரசியல் சரித்தன்மையைக் கோமாளித்தனமாக்கிவிடும்
வென்ற பால்துணையைப் பிசாசாக மாற்றிவிடும்
மேலும் கடமையில் ஒருநாள் தவறிவிட்டால்
மனச்சிக்கலில் தற்கொலை செய்துகொள்வாய்.
ஒருபோதும்
கவிதை எழுதாதே
கவிதை எழுதநினைத்துக்கொண்டு
அல்லது எழுதுவதாக நினைத்துக்கொண்டு.
பிடிச்சாம்பலிலிருந்து
எழும்பும் ஒரு தடம்
பிடியற்ற ஒரு கூர்
சாம்பலாகும்முன்.
7 comments:
பாலுறவை வென்றெடுக்க கவிதை எழுதாதே
வென்ற பால்துணையைப் பிசாசாக மாற்றிவிடும்
பிடிச்சாம்பலிலிருந்து
எழும்பும் ஒரு தடம்
பிடியற்ற ஒரு கூர்
சாம்பலாகும்முன்.
~ These lines are very poetic..
Am sorry that i do not know how to write the comments using Tamil fonts.
It is my humble suggestion that you can be much more subtle in your expressions and try to be a little less verbose. It seems you're doing your doctoral (or is it post-doctoral?) research abroad. You would be getting ample chances to meet interesting persons (who need not have to be necessarily Tamils), go places, watch wonderful movies and read great books. Happy discovering the vistas of your inner and outer self..
Your ability to bring out profound human experiences in your poems is astoundingly beautiful. Keep it up.
Looking forward to hearing much more from you. Take Care. Ciao!
Thanks Sathyu for your resourceful comments. If you have a chance, go through my other poems as well. I am trying to engage different styles of writing and depending upon the context the "text" may turn out to be a bit verbose. :) Also, when I go for print publication, I do kill the poems which do not satisfy me as a reader. Blog-to-book gives me time to go back and reflect. I am not sure what fate awaits this poem though.
making me to think!
கவிதையென்பது காட்சியா? அல்லது கருத்தா?
ஹேம்கன், இரண்டுமில்லை. கவிஞர் ஒருவர் சொன்னதுபோல சூடான அடுப்பின்மேல் வைக்கப்பட்டிருக்கும் பனிக்கட்டியைப்போல கவிதை தன் உருகலிலேயே ஓடவேண்டும், சொன்மையிலிரும் சரி, பொருண்மையிலும் சரி. (இந்தக் கவிதை அப்படி ஓடுகிறதா என்று கேட்டால், ஆம் என்று என்னால் சொல்லமுடியாது, நீரோடி, ஒருவருமற்று, மந்தை போன்ற இந்த வலைப்பூவின் மற்றசில கவிதைகளைப்போலன்றி.)
விளக்கத்துக்கு நன்றி.துல்லியமான, தெளிவான விளக்கம். எனக்கு இந்த கவிதை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆசிரியனுக்குப் பிடிக்காத்து வாசகனுக்கு பிடிக்கலாமல்லவா?என் சிற்றறிவில்”மந்தை”யை புரிந்துகொள்ள சிரமப்பட்டேன்.
கணேஷ்
பி.கு : முகனூலில் உங்கள் நிலைமாற்றங்கள் எனது காலவரிசையில் சில நாட்களாக வருவதில்லை. முகனூலில் இருந்து விலகிவிட்டீர்களா?
ஹேம்கன்: முதலில் இரு திருத்தங்கள்: “சொன்மையிலும்” என்று இருக்கவேண்டும். இரண்டாவது, ”சூடான அடுப்பின்மேல் வைக்கப்பட்டிருக்கும் பனிக்கட்டியைப்போல கவிதை தன் உருகலிலேயே சவாரி செய்யவேண்டும்.” வெறும் ஓட்டமல்ல, சவாரி செய்தல் முக்கியம். இச்சவாரியை அடையாளம் கண்டுகொள்ள முடியும்போது பிரகடனங்கள், லிஸ்ட் போடுகிற வாக்கியக்கோர்ப்புகள், கடைசிவரி திருப்புமுனை எழுத்து போன்றவை ஏன் நல்லகவிதைகள் அல்ல என்பது புரியும். சிலசமயம் சவாரி வழுக்கிவிட்டுவிடும், இந்தக்கவிதையிலும் சில சறுக்கல்கள் இருக்கின்றன.
முகநூலில் நானில்ல, ஆக நிறைய நேரம் கிடைக்கிறது இப்போதெல்லாம். கூடநிம்மதியும். :)
Post a Comment