குருதிகாய்ந்த தம் குதத்தை
இரவுபகல் பாராது
கழுவிவரும் வேசிகளின்
தொழில் அது அல்ல.
காலைமாலை கணக்கின்றி
ஆசைகளின் வியர்வை
ஆறோடி நனைக்கிறது
யாஹ¤ அரட்டை அறைகளை.
நல்ல கணவர்கள்
வெப்காம் பயன்படுத்தமாட்டார்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில பெண்கள்.
நல்ல பெண்மணிகள்
குழந்தையைப் பேணுபவர்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில ஆண்கள்.
நல்ல குழந்தைகள்
கைகளால் எழுதமட்டுமே செய்வார்கள்
என்று
பல ஆண்களும் பெண்களும்.
தொலைக்காட்சித்திரை
அத்தாட்சி வழங்கிய
நல்ல குடும்பத்தின்
ஒரு உறுப்பினர்
கடன்வாங்கப்பட்டவர்
என்று
எய்யப்பட்டு விட்டது
பொறாமைக் கடிதாசி.
எது எப்படியோ
உன் என் மனச்சுவர்களில்
ஒட்டி நகராத பல்லியை
யாரும் இன்னும் நேர்காணவில்லை.
3 comments:
உங்கள் எல்லாக் கவிதைகளின் பேசுபொருள்களும் மிகவும் வித்தியாசமானவை என்பதுடன் இன்றைக்கான அனுபவங்களைக் கொண்டவை. முக்கியம் ரொமான்ஸை தூக்கி எறிந்துவிட்டு ஒரு இயல் கவிதைக்கான பார்வை உங்கள் கவிதைகளின் தனிச்சிறப்பாக உள்ளது.
//காலைமாலை கணக்கின்றி
ஆசைகளின் வியர்வை
ஆறோடி நனைக்கிறது
யாஹ¤ அரட்டை அறைகளை.//
அரட்டைகளின் இந்த புழுக்கத்தை அற்புதமாக சுட்டியுள்ளீர்கள். நம்பிக்கைகள் பற்றிய ஒரு இணையம்-காலத்துக் கவிதை.
நேர்காணப்படாத பல்லிகள் பல சிந்தனைக்களை கெவுலியடித்துக் கொண்டுதான் உள்ளது.
நன்றி ஜமாலன். நவீனத்தின் வாழ்வுப்பின்னணியோடு ஊடாடும் எழுத்து romantic ஆக மட்டுமே இருக்கமுடியாதல்லவா? யாஹ¤ அறையின் புழுக்கம் நிஜக்கலவியின் வியர்வையை virtual ஆகி மாற்றிவிடுகிறது என்று தோன்றுகிறது. உங்கள் பின்னூட்டத்தை வாசித்தபின்.......நேர்க்காணப்படாத பல்லி சிந்தனையை மட்டுமா கவுலியடிக்கிறது, இப்படி நிஜம் virtual ஆகவும், virtual நிஜமாகவும் குழம்பி விட்டிருகிற உலகத்தில் 'எப்படியும்' ஆசைகள் 'நிறைவேறிவிடுவதையும்' தானே.
“ஆறோடி“ என்கிற சொல்லின் விசையில் இதனை புரிந்து கொள்ளமுடிகிறது
//யாஹ¤ அறையின் புழுக்கம் நிஜக்கலவியின் வியர்வையை virtual ஆகி மாற்றிவிடுகிறது என்று தோன்றுகிறது . //
இணைய அரட்டைகள் எற்படுத்தும் இந்த virtual space பற்றிய உளவியல் ஆய்வுகள் வழியாக இன்றைய பாலியல் தளத்தின் erotic space ஆக அவை மாறியிருப்பது ஆராயாப்பட வேண்டிய புள்ளிதான். ஆடல் மகளிரின் அரஙகுகளைப்போல ஆகிவிட்டன இந்த அரட்டை அரங்குகள். இந்த அரட்டைகளில் “பெயர்” என்பதன் அரசியல் பலரையும் படுத்தும்பாடு ரொம்ப அதிகம். உடல் ஒரு பெயரடையாளமாகவும் பால் அடையாளமாகவும் மாறி நிகழும் கலவிகள். பெயர்களை உடல்களாக பாவிக்கும் ஒரு பிம்ப-வெளி இது. உங்கள் காலச்சுவடு கட்டுரையில் உள்ள பிரிவுத்துயர் பற்றியதான ரியல்டோல்களும் கூட இத்துடன் இணைந்து சிந்திக்க வேண்டிய புள்ளிகள்தான்.
Post a Comment