இப்போது செய்துகொண்டிருப்பது: சலிக்காமல் Ph.D ஆய்வேடு எழுதுதல், ஆய்வேடு எழுதுதல், ஆய்வேடு எழுதுதல். உடல்-தன்னிலை தொடர்பு, அம்மை, காலனீய நவீனத்துவம், மாரியம்மன் திருவிழாக்கள்-சரித்திரங்கள், மானுடவியல் மற்றும் மருத்துவ வரலாற்றுப் பிரச்சினைப்பாடுகள் சம்பந்தப்பட்டது ஆய்வு. இருவருடங்களாக கவிதை எழுதும் தருணங்களின் பெரும்பானவற்றை இந்த வேலை சாப்பிட்டுவிடுகிறது. பொதுவாக, எழுதாத நேரத்தில் எல்லாவகையான தமிழ்ப்பாடல்கள் கேட்டல், சமைத்தல், வேலை தேடுதல் (இது பற்றி தனியாக எழுத வேண்டும். American academia-ல் adjunct ஆக இருப்பது கொத்தடிமைக் கொடுமை, அமெரிக்காவின் தலைநகரத்தில் 600 டாலர்கள் மாத வருமானத்தில் சுய இரக்கமின்றி வாழ்வது குறித்து வழிவகைகளை இன்னும் சில காலம் கழித்து என்னால் பகிர்ந்துகொள்ள முடியும்), வாசித்தல்,வகுப்பறையில் கற்பித்தல்-கற்றுக்கொள்ளல் ("ஹிந்து நவீனம்", "உலகின் பெண்தெய்வங்கள்", "சிலப்பதிகாரம்," "பக்தி இலக்கிய மரபுகள்," "பிரபஞ்சம்சார் மதக்கற்பனைகள்"), இன்ன பிற. தேவி மகாத்மியம் தந்த வகுப்பறை அனுபவம் பற்றியும் தனியாக எழுதவேண்டும்.
இதுவரை கடந்து வந்திருப்பவை: வாழ்க்கையில் பதினாறு வருடங்களை அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிய அரசு அலுவலகப்பணி அனுபவம் (சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் இதுபற்றி எழுதியவை சத்தியமானவை), ஆழமான பல நட்புத்தருணங்கள்-உரையாடல்கள், மறக்கமுடியாத, ஏன் 'பகுத்தறிவால்' விளங்கிக்கொள்ள முடியாத ஆய்வுக் களப்பணி அனுபவங்கள், மகளிர் சுயசேமிப்புக்குழுக்களில் கிடைத்த பட்டறிவுப் பாடங்கள், தமிழ் கூத்து, நாடக நடிகர்களோடான நெகிழ்ச்சியான சிநேகிதங்கள், இன்னமும் நினைத்து மகிழும் நவீன நாடக ஒத்திகை நாட்கள் மற்றும் நிகழ்த்துதல்கள், சிலபல அபத்தப் பொழுதுகள், மற்றும் பலரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய துரோகங்கள், அவமானங்கள், பெருமிதங்கள், காதல்கள், உணர்ச்சிப்பெருக்குகள், முட்டாள்தனங்கள் எல்லாமும்.
14 comments:
உங்கள் கவிதைகளை சக்தி ஓடையில் பார்த்து வியந்திருந்தேன். வாருங்கள். நன்றாய், தெளிந்த ஓடையாய் எழுதுகிறீர்கள். இன்னும் எழுதுங்கள்.
//அமெரிக்காவின் தலைநகரத்தில் 600 டாலர்கள் மாத வருமானத்தில் சுய இரக்கமின்றி வாழ்வது குறித்து வழிவகைகளை...வாசித்தல்,வகுப்பறையில் கற்பித்தல்-கற்றுக்கொள்ளல் ("ஹிந்து நவீனம்", "உலகின் பெண்தெய்வங்கள்", "சிலப்பதிகாரம்," "பக்தி இலக்கிய மரபுகள்," "பிரபஞ்சம்சார் மதக்கற்பனைகள்"), இன்ன பிற... தேவி மகாத்மியம் தந்த வகுப்பறை அனுபவம் பற்றியும் ....பட்டறிவுப் பாடங்கள், தமிழ் கூத்து, நாடக நடிகர்களோடான நெகிழ்ச்சியான சிநேகிதங்கள், இன்னமும் நினைத்து மகிழும் நவீன நாடக ஒத்திகை நாட்கள் மற்றும் நிகழ்த்துதல்கள், சிலபல அபத்தப் பொழுதுகள், மற்றும் பலரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய துரோகங்கள், அவமானங்கள், பெருமிதங்கள், காதல்கள், உணர்ச்சிப்பெருக்குகள், முட்டாள்தனங்கள் /// எல்லாம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கெக்கேபிக்குணி. ஏன் இந்தப் பெயர்? :)
பெயர்க்காரணம்... சும்மா கூலாவும் இருக்கும்னு நானே (அப்பா அம்மா வச்ச பேரை விட) வச்சுக்கிட்டது.
நீங்க பரீக்ஷா நாடகக் குழுவில இருந்தீங்களா?
பரீக்ஷாவிலும் நடித்திருக்கிறேன். முதலில் அறிமுகமானது நிஜந்தனின் அரூபம் நாடகக்குழுவின் "சாட்சியின்மையைத் தோண்டியெடுத்தல்" என்ற நாடகம். அப்புறம் ஐக்யா, யவனிகா, பூமிகா நாடகக்குழுக்களோடும் பயணம் தொடர்ந்தது. நீங்கள் இக்குழுக்களின் நாடகங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
பரீக்ஷாவில் நடித்த பெருந்தேவியோடு அறிமுகம் செய்து கொண்டு (சென்னையில், நாரத கான சபா மினிஹால்?) இல் பேசிய அனுபவம் '90-களின் தொடக்கத்தில். நாடகம் பெயர் நினைவில்லை. தொடர்ந்து பரீக்ஷா நாடகங்கள் பார்த்ததுண்டு. ஐக்யா, யவனிகா, பூமிகா குழு நாடகங்கள் பார்த்ததில்லை. பல வருடங்களாக இங்கே இருப்பதால், இவற்றோடு பரிச்சயமில்லை (வேற எக்ஸ்க்யூஸ் கொடுக்கத் தெரியலங்கறது தான் உண்மை). நீங்களாயிருந்தால் உங்களுக்குக் கட்டாயம் என்னை நினைவிருக்க சான்ஸில்லை;-) "ஹலோ, நாடகம் பார்க்கறதில் விருப்பமுண்டு, என்னவாயிருக்கீங்க" என்ற பேச்சோடு அவ்ளோதான்.
//ஆய்வுக் களப்பணி அனுபவங்கள், மகளிர் சுயசேமிப்புக்குழுக்களில் கிடைத்த பட்டறிவுப் பாடங்கள், தமிழ் கூத்து, நாடக நடிகர்களோடான நெகிழ்ச்சியான சிநேகிதங்கள், இன்னமும் நினைத்து மகிழும் நவீன நாடக ஒத்திகை நாட்கள் மற்றும் நிகழ்த்துதல்கள், சிலபல அபத்தப் பொழுதுகள், //
பெரும்பாலும் இலக்கியம் என்கிற பொதுப்பரப்பில் இது சகஜமான அனுபவங்கள்தான். அவை ஏற்படுத்தம் மகிழ்சிக்கு இணையான ரணங்களும் அதிகம்தான்.
//மற்றும் பலரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய துரோகங்கள், அவமானங்கள், பெருமிதங்கள், காதல்கள், உணர்ச்சிப்பெருக்குகள், முட்டாள்தனங்கள் எல்லாமும்//
உங்களுக்க்(அழுத்தம் கூட்டத்தான்)குமா?
//ஆழமான பல நட்புத்தருணங்கள்-உரையாடல்கள், மறக்கமுடியாத, ஏன் 'பகுத்தறிவால்' விளங்கிக்கொள்ள முடியாத//
அது என்ன ”பகுத்தறிவால் விளங்கிக் கொள்ள முடியாத”? கண்டிப்பாக உலகை பகுத்தறிவைக் கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது அது ஒரு அடிப்படை அளவுகோலா?
வாழ்க்கையில் பதினாறு வருடங்களை அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிய அரசு அலுவலகப்பணி அனுபவம் (சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் இதுபற்றி எழுதியவை சத்தியமானவை), //
பொய்யானவை.
ஒரு சிலருக்கு சத்தியம் என்றால் உண்மையாகி விடுமா?
அரசுப்பணீயிலிருந்தே இலக்கியம் மற்றும்பல துறைகளில் சாத்தித்தவர்கள் ஏராளம், அம்மணி!!
நாயர்,
சத்தியம் என்பதும் உண்மையென்பதும் ”என்னைப்பொறுத்தவரை” மட்டுமே. எப்படி இதற்கு பொதுவான அளவுகோல் கிடையாதோ, அதே போல நீங்கள் “பொய்” என்று இதையெல்லாம் தீர்மானிப்பதற்கும். அரசுப்பணி அலுவலகங்களில் பணி செய்பவர்கள் அனுபவிக்கக்கூடிய துன்புறுத்தல்களை நானும் அனுபவித்ததால் இதை எழுத நேர்ந்தது. இலக்கியத்தில் “சாதித்தல்” என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகவே, அதற்கு பதில் இல்லை. நன்றி.
எப்படி இருக்கிறீர்கள்?
உங்கள் முகப்பு சுவாரஸ்யமாக இருக்கிறது. இன்னும் எழுதுங்கள்..அது என்ன வேலைக்கு போவதும்/அதன் அபத்தங்களையும் பிறர் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
”ஓரம் போ” படம் பத்தின விமர்சனம் ஏதாச்சிலும் நெட்டில் கிடைக்குமான்னு தேடிக்கிட்டு இருக்கும் போது, எதேச்சையா உங்க ப்ளாக் பக்கம் வந்தேன். சூப்பரா எழுதுறீங்க பெருந்தேவி.
நன்றி சிவகுமார். ஓரம்போ விமரிசனத்தில் எழுத வேண்டிய பின்னூட்டத்தை இங்கே வைத்துவிட்டீர்களோ?
அரசு அலுவலகப் பணி உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியதாகக் கூறியுள்ளீர்கள். அதில் சில நல்ல நண்பர்கள் கூடவா இல்லை? இதை எழுதுவது உங்கள் நண்பன் சுப்ரமணியன். (அதே அலுவலகத்தில் இன்னும் இருப்பவன்.)
சுப்ரமணியன், நண்பரே, நலமா? உங்கள் துணைவியும் மகள்களும் எப்படியிருக்கிறார்கள்?
அலுவலகப் பணி நிச்சயமாக உங்களைப் போல நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்தது. ஆனால் வேறொரு தளத்தில் அலுவலகக்கோப்புகளி்ல் வருடம்பல சந்தடியின்றி புதைபட்டதும், ஆண்டைகளாய் இருந்த அதிகாரிகளால் கொஞ்சம் கசப்பு எஞ்சியிருந்ததும் நிசம்தானே.
பிறகு கடிதம் எழுதுகிறேன். அன்புடன் பெருந்தேவி
American academia-ல் adjunct ஆக இருப்பது கொத்தடிமைக் கொடுமை, //
எழுதுங்கள்..இது பற்றியும்..
//வாழ்க்கையில் பதினாறு வருடங்களை அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிய அரசு அலுவலகப்பணி அனுபவம்//
அரசு வேலை மட்டுமல்ல எல்லா நெருக்கடி வேலையுமே னு நினைக்கிறேன்.. 20 வருடம் வெட்டியா போனதாக நானும் எண்ணுவதுண்டு..
Post a Comment