Wednesday, June 11, 2008

நலம்

முத்தாய்ப்புகள் நிரப்பி வழிகின்றன.
இழப்புக்குத் தயார்செய்யும் விவேகம்
காந்தாரியின் வயிற்றில்
கல்லெனக் கிடக்கும் குழந்தை.
இன்னும் பிறக்கவேயில்லை.
கண்ணாடிகளே சுவரான
காபி ஷாப்பில்
வெகுநேரம் காத்திருந்த
தலைநரைத்துவிட்ட
நட்புக்கு
ஆயுள் இனி அவசியமில்லை
என்று
கோலோடு வந்த குறிக்காரி
சொல்லிவிட்டாள்.
சாமானாக
வாழ்த்து அட்டை
சேர்ந்துவிடுகிறது.
ரோஸ் நிறங்கள்
வடியும் தொண்டையில்
கசப்பு சுவைக்கவில்லை.
நீண்டதொரு
காரிடாரைப் போல
செல்கிறது
ஆரோக்கிய மாலை.

3 comments:

ஜமாலன் said...

//சாமானாக
வாழ்த்து அட்டை
சேர்ந்துவிடுகிறது.//

என்னங்க இது? ”சமாதானமாகவா”

Perundevi said...

சுவாரஸியமாக இருக்கிறது உங்கள் சந்தேகம். தட்டுமுட்டுச்சாமான் கேள்விப்பட்டிருப்பீர்களே. "பொருள்" என்கிற சொல்லை விட "சாமானில்" இன்னும் ஜடத்தன்மை அதிகம் இருப்பதாக ஒரு பிரமை. திட்டமிட்டு எழுதாத கவிதையில் இந்த பிரமை வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், வாழ்த்து அட்டைக்கும் "சமாதானத்துக்கும்" எந்த அளவுக்கு ஆழ்மனத் தொடர்பு இருக்கிறது பாருங்கள். சமாதானம் சாமானாகி விட்ட இடத்தில் காலத்தில் நாம் இருக்கிறோமோ?

ஜமாலன் said...

“சாமானா“-க என்பது வழக்குச்சொல் (அது இந்தி என நினைக்கிறென்) தமிழ் அல்ல என்பதாலும் அதனை “சாமானா“க என்பதாக பயன்படுத்தியிருந்தால் இந்த ஐயம் வர வாய்ப்பில்வை. இருந்தாலும் சமாதானம் “சாமானா“-கிவிட்ட காலம் பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது.

இந்த இடத்தில் “பொருளை“விட “சாமான்“ என்பதே பொறுத்தமான சொல். இருந்தாலும் இணையத்தில் தட்டச்சுப்பிழை சகஜம் என்பதால்தான். :)