கடைத்தெருவில் குட்டிச்சீதை
குரங்குப்படைகளும்
சீதையும் லட்சுமணனும்
இல்லாமல்
தகர வில்லோடு
ராமன் வேஷமிட்ட குழந்தையைப்
பார்த்தேன் ஒருநாள்
கடைத்தெருவில்.
நீலநிறத்துக்கும்
அட்டைக் கங்கணத்துக்குமிடையே
சொறிந்துகொண்டிருந்தவனுக்கு
காசு கொடுத்துவிட்டு
சீதையைப் பற்றிக் கேட்டேன்.
அம்மாவோடு முறுக்கு சுற்றிக்கொண்டிருப்பதாகச்
சொன்னான் அவன்.
அதே வழியில் அடுத்த நாள்
சீதை வேஷமும்
அனுமானும் எதிரே.
மட்கிய பாவாடை கமகமத்தவளிடம்
ராமன் எங்கே என்றேன்.
இஸ்கூலுக்குப் போய்விட்டானாம்.
ராவணனை விசாரித்ததும்
தெரியலை
என்றுவிட்டு நகர்ந்தாள்.
குச்சிமிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தது
அனுமான் அப்போது.
சீதை இலங்கையை மறந்தே விட்டாளா
அல்லது
ராவணன் அவர்கள் கதைக்குள்
இன்னும் நுழையவே யில்லையா
என்றெல்லாம் விசாரித்தறிய
வாடா உறுதியோடிருந்தும்
ராவணக் குழந்தையை
இன்றுவரை நான்
பார்க்கவேயில்லை.
********
ஒரு கொள்ளை அன்புக்கும்
சின்னச்சின்ன அன்புகளுக்கும்
வித்தியாசம்
ஒரு மலைமுகட்டிலிருந்தும்
சிலபல உரையாடல்களிலிருந்தும்
குதிப்பதுதான்.
*******
அவா
ஒவ்வொரு கோபத்தையும்
கழற்றி
சலவை செய்து
அலமாரியில் வைத்துவிட வேண்டும்
உடனுக்குடன்.
பிணக்குகளின் மூட்டுகளில்
கால்களாய் பொருந்துபவற்றை
விபத்துகளின் நல்லெண்ணம்
பார்த்துக்கொள்ளட்டும்.
*******
(இந்த மூன்று கவிதைகளும் ”இக்கடல் இச்சுவை” தொகுதியிலிருந்து. காலச்சுவடு வெளியீடு, 2006)
6 comments:
Good one!
//ராவணன் அவர்கள் கதைக்குள்
இன்னும் நுழையவே யில்லையா //
அனுமன் வந்தும் ராவணன் வராத சிறுவர் கதைக்குள் நானும் வாழ விருப்பம்:-)
//விபத்துகளின் நல்லெண்ணம்
பார்த்துக்கொள்ளட்டும்.//
இதை மிக ரசித்தேன்.
எடுத்து வந்த சில புத்தகங்களுள் 'இக்கடல் இச்சுவை'யும் ஒன்று. அதனாலும் பல தடவைகள் வாசிக்க வாய்த்தது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாய் பன்முகத்தன்மையுடைய கவிதைகள். நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தீர்கள். நன்றி.
நன்றி நரசிம், கெகேபிக்குணி, தமிழ்நதி. மான்செஸ்டரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்குக்காக கட்டுரை தயார்செய்து கொண்டிருந்ததால் உடனே பதில் அளிக்க இயலவில்லை. தமிழ்நதி, உங்கள் டொரண்டோ கருத்தரங்கம் எப்போது?
ராவணன் என்னமோ குழந்தையாகவும் இருந்திருப்பான். குழந்தை ராவணன் கிடைப்பது கடினம். ராவண உருவம் ஏறும்போதே குழந்தை அதனின்று இறங்கி விடும்.
இரண்டாவது கவிதை அபாரமாயிருக்கிறது. awesome.
'அவா' ஒவ்வொருமுறையும் வெவ்வேறாகத் தெரிகிறது. நல்ல கவிதை எல்லாமே அப்படித்தானோ!
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா. எனக்கும் 'அவா' மிகவும் பிடித்த கவிதை. குழந்தை ராவணனை ஏன் தெருவில் காணமுடிவதில்லை என்பது யோசிக்க வேண்டிய விஷயம். கருத்தியல், தொன்மம் சம்பந்தப்பட்டது இது.
Post a Comment