Sunday, June 22, 2008

தோன்றிய போக்கில்

(இது கட்டுரை அல்ல)

முதல்

மொழி ஒழுங்குக்கும் கலாச்சார ஒழுங்குக்கும் இடையே பிரதிபலிப்புத் தொடர்பு இருப்பது தெரிந்ததே. சில சமயம் கலாச்சார ஒழுங்கைக் கலைக்கும் பிரதிகளில் கூட சொற்களின் அதிகாரப் படிவரிசை (hierarchy) செயல்படுகிற விதம் குறித்து யோசித்தேன். குறிப்பாக, நான் விரும்பிப்படிக்கும் நாகார்ஜுனனின் வலைப்பதிவு (www.nagarjunan.blogspot.com) யூரேக்காவின் மொழிபெயர்ப்பில் பதிவிடப்பட்டிருக்கும் ழார் பத்தேயின் "விழியின் கதை." பகுதி ஒன்றிலிருந்து இங்கே:


"முட்டிமறைக்க கறுப்புநிற பட்டு ஸாக்ஸ் அணிந்திருந்தாள். ஆனால் அவள் #?*# வரை என்னால் பார்க்க முடியவில்லை (அல்குல்-யோனி என்பதற்கெல்லாம் மிக அழகான பெயர் இதுதான் என்பதால் ஸிமோனுக்கென இதையே பிரயோகித்தேன்).

...

என்மீது வைத்த விழி வாங்காமல் அவள் ஸ்கர்ட்டுக்கடியில் எரியும் தன் பிருஷ்டங்களை நான் பார்க்க முடியாதபடி, குளிர்ந்த பாலில் அமிழ்த்தியவாறு அமர்ந்தாள்."


அல்குல்-யோனி போன்ற "அழகான" பெயர்களை கதையே விட்டதில் சந்தோஷம். ஆனால் அது என்ன புxx என்று யோசித்தேன். (இப்போது அவரது பதிவில் புxx வேறு புரியாத குறியீடுகளோடு தென்படுகிறது) ஒருவேளை இணையத்திலும் எதிர்கொள்ளக்கூடிய எழுத்துத்தணிக்கை காரணமாக இந்த xx பதிவிடப்பட்டிருக்குமோ என்று நினைக்கிறேன்.

ஆனால், நெருடுவது இன்னொரு வார்த்தை--"பிருஷ்டம்." (என்னவோ, இதைக்கேட்கையில் "கஷ்டம்" என்ற சொல் முந்திக்கொண்டு மனதில் வருகிறது. :) குண்டி என்கிற வார்த்தைக்கும் "பிருஷ்டம்" என்கிற வார்த்தைக்கும்தான் சொற்களின் படிவரிசையில் எத்தனை தூரம்? இலக்கியத்துக்கும் போர்னோவுக்கும் இருக்கும் தூரம் என்று அது தோன்றவில்லை. "பிருஷ்டம்" என்கிற சொல் பேசுபொருளை செவ்வியதாக மாற்றி விடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. குண்டி என்கிற சொல் தந்திருக்கக் கூடிய "கவித்துவம்" அற்ற tangible ஆன உணர்வு ஏன் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்? எனக்கு ப்ரென்ச் தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் நான் பத்தேயைப் படித்தவரை, செவ்வியலுக்கு எதிர்ப்புள்ளியில் அவர் எழுத்து செயல்படுவதாக நான் பார்க்கிறேன்.

நிச்சயமாக நாகார்ஜுனன் இதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார். தெரிந்துகொள்ள ஆவல்.


இரண்டு


போர்னோவுக்கும் போர்னோ இல்லாத இலக்கியத்துக்கும் ஆன வித்தியாசம் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் என் முதல் கேள்வி, போர்னோ இலக்கியமாக, இலக்கியத்தின் ஒரு வகைமாதிரியாக (genre) ஆக இருக்க முடியாதா என்ன? போர்னோ vs. இலக்கியம் என்று எதிர்ப்புள்ளிகளில் கட்டமைப்பதே நவீனத்தின் குரலாக இருக்குமோ? கோயில்களில் பார்க்கும் சிற்பங்களைக் கலையாகவும், அசைபடத்துடனான இன்றைய கதைகளை குப்பையாகவும் ஏன் பார்க்கிறோம்? இக்கேள்வியை மதம்/நிறுவனம்/நம்பிக்கை/அங்கீகாரம் சார்ந்தோ, கொச்சைப்படுத்தியோ நான் கேட்கவில்லை.

எனக்குப் புரிந்தவரை: இந்த வித்தியாசத்தை நிறைய சமயங்களில் நாம் படைப்பாளியின்/எழுதுபவரின் "நோக்கத்தோடு" குழப்பிக்கொண்டு விடுகிறோமோ என்று தோன்றுகிறது. பணம்/வியாபாரத்தை முன்வைத்தால் போர்னோ, அறிவு/கலையுணர்வு ஊட்டுவதாக இருந்தால் கலை என்பதுபோல. இல்லாவிட்டால் வாசிப்பவரின் நோக்கத்தோடு சம்பந்தப்படுத்தியும் குழப்பிக்கொள்கிறோம். நேரம் போக்குவதாக இருந்தால் போர்னோ, நுட்பமான உணர்வைப் பெறுவதற்காக வாசித்தால் கலை, இலக்கியம் என்பதுபோல.

இங்கே பிரதியின் செயல்பாடு என்று ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். வாசிக்கும்போது கட்டமைக்கப்படுவது பிரதி என்று கொள்வோமானால், இத்தகைய வாசிப்பு "நோக்கம்" என்பதைக் கருத்தில்கொள்ளாமல் செயல்படவேண்டும் என்பது என் எண்ணம். செயல்படமுடியுமா?


மூன்று

மூன்றாவது "ஆணாதிக்கம்" பாலியலைப் பேசும் பிரதியில் செயல்படும் முறை. (என் கவிதையொன்றில், தந்தைமை என்ற சொல்லின் பிரயோகத்தைப் பற்றி, அதற்கும் ஆணாதிக்கத்துக்குமான வேறுபாடு பற்றி என் நண்பர்-வாசகர் ஒருவரோடு நான் விவாதித்திருக்கிறேன், அது பின்னொரு பதிவில்)

ஒரு செய்முறைப் பரிசோதனை. இணையத்தில் ஜ்யோவ்ராம்சுந்தருடைய பதிவின் "காமக்கதைகள் 45(6)" அதன் பின்னூட்டங்களும் படிக்கக்கிடைத்தன. http://jyovramsundar.blogspot.com/

சுவாரசியமான கதை. செறிவான பின்னூட்டங்களில் வைக்கப்பட்ட கருத்துகள் கதையில் "ஆணாதிக்ககக்கூறுகள்," "காமத்தின் அதிகாரம்," "சமூகம் அனுமதிக்கும் போர்னோ/சமூகம் விலக்கிய இலக்கியம்" போன்றவற்றைப் பேசுகின்றன. அந்தக்கதையை வாசிக்கும்போது, பாலியல் அதிகாரம் செயல்படுகிறது என்றே எனக்கும் தோன்றியது. ஆனால் எப்படி? என் வாசிப்போடு ஜ்யோவ்ராம்சுந்தரோ மற்றவர்களோ உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிக்கொண்டு விளையாட்டாக இதை முன்வைக்கிறேன்.

கதையில் முக்கியமான கட்டம் "தெய்வீகக்காதலை" முற்றாக expose செய்யும் "உனக்குத் தங்கத்துலயா செஞ்சிருக்கு, அவ்வளவு கொடுக்க" என்று அதீதன் (என்ன பெயர் இது?) வனஜாவிடம் கூறுமிடம். (பின்னூட்டமிட்டிருக்கும் லக்கிலுக் கூட இந்த இடத்தைக்குறிப்பிட்டிருக்கிறார்.) வனஜா இதைக்கேட்டு அடித்துவிரட்டி விடுகிறாள். ஒருவேளை, கேள்விகேட்கப்பட்ட வனஜா முந்திக்கொண்டு அதீதனைக் கேட்டிருந்தால்: "உனக்குத் தங்கத்துலயா செஞ்சிருக்கு, இந்தப் பணம் கூட வாங்காம நான் உன்கூடப் படுக்க." கதையில் வனஜா தன் ஆட்டத்தை அடித்து ஆடியிருந்தால், கதையின் வாசிப்பு எப்படி மாறியிருக்கும் என்று யோசிக்கிறேன். தங்கத்தில் செய்யப்பட்ட பாலியல் உறுப்புகளின் பொருண்மை சந்தைப்பொருளாதாரத்தோடு அருமையாகப் பொருந்துகிறது.

ஒருவேளை, அதீதன் தங்கம் என்பதற்கு பதிலாக செவ்விலக்கிய கதாபாத்திரம் ஒன்றை வைத்து, உதாரணமாக, வனஜாவிடம் "சத்யவதி மாதிரி உனக்கும் அங்கேயுமா மணக்குது?" என்று கேட்டிருந்தால்?

இது இலக்கியமா, வெறும் "அனுபவ எழுத்தா," கொஞ்சம் பிசகியிருந்தால் போர்னோவகையாக "குறைந்துவிடும்" எழுத்தா.....இக்கேள்விகளுக்கு புறத்தே, வாசித்தபின்னும் விளையாட்டில் ஈடுபடவைத்திருக்கிறது பிரதி என்றுமட்டும் சொல்லுவேன்.

****

8 comments:

மஞ்சூர் ராசா said...

எங்கும் எதிலும் பரவி வருகிறது.

அய்யனார் said...

/பிருஷ்டம்" என்கிற சொல் பேசுபொருளை செவ்வியதாக மாற்றி விடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. குண்டி என்கிற சொல் தந்திருக்கக் கூடிய "கவித்துவம்" அற்ற tangible ஆன உணர்வு ஏன் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்?/

மிக முக்கியமானதொரு கேள்வி விழியின் கதை 2 ல் இதை காபி பேஸ்ட் செய்துள்ளேன்..அவரின் விளக்கத்திற்கான இன்னொரு காத்திருப்பு..

Perundevi said...

Thanks Ayyanar.

மோகன்தாஸ் said...

//அதீதன் (என்ன பெயர் இது?)//

அதீதமானவன் என்பதற்காக அதீதன்.

ரமேஷ் - ப்ரேம் படிக்கிறதில்லையா நீங்க?

Perundevi said...

subjective ஆன பதில்: "அதீதமானவன்" என்கிற அர்த்தம் தருகிற பெயர் எனக்கு உவப்பாக இல்லை. எது சாதாரணம், எது அதீதம், என்ன அளவுகோல் இதற்கெல்லாம் என்பது காரணமாக இருக்கலாம். மிகை என்ற நாமே ஒன்றை எழுத்தில் சுட்டுவது தேவையில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ரமேஷ்-பிரேம் படித்திருக்கிறேன். நன்றி.

மோகன்தாஸ் said...

பெருந்தேவி,

நான் சொன்னது ஒரு விளக்கத்துக்காகத்தான்.

'சொல் என்றொரு சொல்' நாவலில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் அதீதன். அவனுடைய செயல்கள் அவன் பெயருக்கு ஏற்றது போல் இருக்கும்.

நானெல்லாம் ஆத்மார்த்தி என்று அப்படியே ரமேஷ் - ப்ரேமின் கதாப்பாத்திரங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ஜ்யோவ்ராம் எப்படிச் செய்தார் என்று தெரியாது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை அதீதன் directly proportional to ரமேஷ் - ப்ரேம்.

தமிழ்நதி said...

உங்கள் கவிதைகளைப் போலவே இதிலும் வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். சந்திக்க முடியவில்லை. மன்னிக்கவும். இப்போது கனடாவில்தான்.

Perundevi said...

மோகன் தாஸ், என்ன பெயர் இது என்று நான் கேட்டதும் கிண்டல் தான்.
தமிழ்நதி, உங்களைச் சந்திக்க முடியாமல் போனது வருத்தம். பிறகொரு முறை பார்க்கலாம்.