ஒவ்வொரு சிறுவனின் வீட்டின் பின்புறத்திலும்
ஆகாயவிமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு சிறுமியின் காதுகளும்
புகழுரையின் காதணிகளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்மகனும் கலவியின் இன்பத்தில்
உயரப்பறத்தலை மனதில் கொள்கிறான்.
ஒவ்வொரு பெண்மணியும் அப்போது தன்
யோனியும் காதாகி வளரப் பிரார்த்திக்கிறாள்.
சிறுவன் ஆண்மகனாக சிறுமி பெண்மணியாக
மட்டுமே வளர்வதாக
தப்பபிப்பிராயம் கொண்டவர் அனேகம்.
சிறுமி ஆணாக வளரும்போது
விமானம் கட்டப்பெறாத
வலிய தன் துளைகண்டு எரிச்சலடைகிறான்.
சிறுவன் பெண்ணாக வளரும்போது
புகழுரையின் ஓடுதளத்தைக் கண்ட அவசரத்தில்
தன் விமானத்தை இறக்குகிறாள்.
சிறுமி சிறுவனாகவும் சிறுவன் சிறுமியாகவும்
வளர்வதுமுண்டு.
அதி
காலையாகவும்
அந்தி
மாலையாகவும்
தெரிந்த பொழுதுகளோடு கூடவும்
வேறு ரம்மியங்கள் சேர
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
காதுகளை உடலோடு இணைத்தும்
விமானங்களை உயரத்திலிருந்து பிரித்தும்
காணத்தெரிந்தவர்களும்கூட.
(”இக்கடல் இச்சுவை”, காலச்சுவடு பதிப்பகம், 2006)
2 comments:
வரி யெங்கும் திறந்து கொண்டே இருக்கிறது கவிதை
இக்கடல் இச்சுவை தேட வேண்டும்
சிறுமி எரிச்சலடைகிறான்...சிறுவன் இறக்குகிறாள்...கவிதை கலக்குகிறார்
Post a Comment