(ஆத்மாநாம் பெருந்தேவி)
பரபரத்து இலக்கை நோக்கி
நீங்கள் மற்றவர்கள்
முன்னேறிக் கொண்டிருக்கையில் முழிபிதுங்கித் திணறுகையில்
உங்கள் நண்பி வந்தால் உங்கள் அன்பனைக் கண்டால்
எந்தத் தயக்கமும் இன்றி விழி சோர
இறுகக் கட்டித் தழுவி சொல்லும் தடுமாறி
இதமாக பின்னர் ஞாபகமும்
தொடர்ந்து முக்குளிக்க
நீண்டதாக பால்வீதியினும் நீள
முத்தம் கொடுங்கள் அமுதம் பெறுங்கள்
உங்களைப் பார்த்து பொறாது
மற்றவர்களும் பார்த்தும் பாராது
அவரவர் வழிசெல்பவரும்
நண்பிகளுக்கு முத்தம் அன்பர்களுக்கு அமுதம்
கொடுக்கட்டும் கொடுப்பர் அதேபோல்
விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும் அழிவில்லை காண்
மறந்துவிட்டு பிறவாநிலையின்
சங்கமமாகிவிடுவீர்கள் ஒரே புள்ளியில்
பஸ் நிலையத்தில் வெயிலின் ல்லும் உருக
ரயிலடியில் காத்திருப்பின் காலும் பூபூக்க
நூலகத்தில் உதவாப் புத்தகங்களுக்கிடையில்
நெரிசற் பூங்காக்களில் பட்டுப்போன செடிகளின் நடுவில்
விற்பனை அங்காடிகளில் கோயில்களில்
வீடு சிறுத்து டி.வி. பெருத்த அறைகளில்
நகர் பெருத்த மனம்சிறுத்த தருணங்களில்
சந்தடி மிகுந்த தெருக்களில் தனியெனும் பாலையில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி முத்தமே அடைக்கலம்
கைவிடாதீர்கள் முத்தத்தை கைவிடப்படாதீர்கள் முத்தத்தால்
உங்கள் அன்பைத் தெரிவிக்க அன்பிலாத நோய் தீர
ஸாகஸத்தைத் தெரிவிக்க அவநம்பிக்கை சாவு காண
இருக்கும் சில நொடிகளில் தனதற்ற
உங்கள் இருப்பை நிரூபிக்க மரபான
முத்தத்தைவிட முத்தம்போலும்
சிறந்ததோர் சாதனம் தீராத தீர்வு
கிடைப்பதரிது அரிது அரிது
ஆரம்பித்து விடுங்கள் ஆரம்பத்திலேயே
முத்த அலுவலை உதட்டின் கடமையை
இன்றே நந்நாள்
இப்பொழுதே நற்பொழுது
இக்கணமே பொற்கணம்
உம் சீக்கிரம் பார்த்து நழுவ விடாதீர்கள்
உங்கள் அடுத்த காதலி அடுத்தடுத்து
காத்திருக்கிறாள் அன்பின் களப்பணியில்
முன்னேறுங்கள் காலத்தைக் கிடப்பில் போட்டு
கிறிஸ்து பிறந்து ம்
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து ம் தயக்கமேன்
இருபத்தியோறாம் நூற்றாண்டை பல்லாண்டு பாடுவோம்
நெருங்கிக் கொண்டிருக்கிறோம் முத்தமிட்டடைவோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து குத்துப்பாட்டுகளை மறந்து
சுத்தமாக வரமாக
முத்தம் பரமாக
முத்தத்தோடு முத்தம் முத்தங்காண முத்தம்
என்று இப்போதே
முத்த சகாப்தத்தைத் துவக்கலாம்
துவங்குங்கள் துவங்கியாயிற்று.
7 comments:
//விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்//
இந்த வரிகள் அற்புதமானது. குறிப்பாக எங்களது சமூக , பண்பாட்டு நெருக்கடிகளில் இருந்து விடுபடுதலின் ஆழத்தை தொடுகின்றது. ஆபாசமில்லாத முத்தங்கள் மிக அழகானது இயற்கையானது ஆனால் எமக்கு எப்போதும் அது கனவாகவே தெரிகின்றது.
ஆத்மாநாமின் வரி விடுதலை குறித்து. என்னுடையது விடுபட்டவற்றையும் குறித்து. நன்றி நர்மதா சிவா.
wow.. grt.
பெருந்தேவி.. இது வித்யாசதமான வாசிப்பனுபவத்தை தருகிறது.
simply suberb.
கீழ்கண்ட குறிப்புடன் இந்த கவிதையை முகப்பு-நூலில் பகிர்ந்துள்ளேன். {அப்பா சுத்த தமிழில் எழுதிட்டேன். :) }
----------
ஆத்மாநாமின் முத்தம் என்கிற புகழ்பெற்ற கவிதையை பெருந்தேவி மறு-எழுதுதலுக்கு உட்படுத்தியுள்ளார் இக்கவிதையில்.
இடையீட்டு பிரதி என்பதும் மறு-எழுதுதல் என்பதும் நவீன எழுதுதலில் ஒருவகை. பொதுவாக அது உரை-புனைவுகளில் (நாவல், சிறுகதை இப்படி) செய்யப்படும். இங்கு கவிதையில் அதனை செய்து பார்க்கிறார் பெருந்தேவி. ஆத்மாநாம் கவிதையை சிதைக்...காமல் அதனை முழுமையாக ஒரு உரையாடலாக மறுமுறை எழுதிப்பார்க்கிறார். ஆத்மாநாம் கவிதையின் இடைவெளிகளில் நவீன வாழ்விலிருந்து பின்-நவீன வாழ்விற்கு மொழியும், எழுத்தும், வாழ்க்கையும் நகர்ந்துவிட்டதை இந்த முத்தம் நமக்கு சொல்கிறது இப்படி “முத்தங்களாகக் கொடுங்கள்” என்று.
----
ஒரு குறிப்புக்காக இந்த பின்னோட்டம்.
thanks Jamalan, after coming back from the class, i will write more.
வாசு, மிக்க நன்றி.
ஜமாலன், இடையீட்டுப் பிரதியை எழுதிப்பார்க்கும் முயற்சி என்பது சரிதான். ”மறு” வாசிப்பும் இடையீடுகளும் “பேச்சுகளில்” அல்லது பேச்சு-பதிலி-எழுத்தில் மட்டுமே அதிகம் நிகழும் சமூகம் நமது. இச்சூழலில் இக்கவிதை போன்ற “எழுத்து” முயற்சிகள் வாசிப்புக்கவனம் பெறுவது சந்தேகம்தான். :(
கருத்துரைகளை வாசித்தேன்...இடையீட்டு பிரதி,,,மறு- எழுதுதல் ...இவற்றை அறியேன்...கவிதையை படிக்கும்போது பிடித்திருந்தது...
Post a Comment