சில வாரங்களாக ஆத்மாநாமின் இந்தக் கவிதை மனதில் வந்தபடி இருந்தது. கொண்டுவந்த அவர் கவிதைப்புத்தகத்தைக் காணோம். கடைசியில் கூகிள் செய்து, ரவி ஆதித்யா-வின் வலைப்பதிவில் (http://raviaditya.blogspot.com/2009/04/blog-post_08.html) இக்கவிதை மீள்பதியப்பட்டிருப்பதைக் கண்டேன்.
அழைப்பு
இரண்டாம் மாடியில்
ஓற்றைச் சன்னல் அருகில்
நான் என்னோடு
உணவருந்திக்கொண்டு
அருகில் வேப்பமரக்கிளை
மீதிருந்த காகம் அழைத்தது
பித்ருக்களோ தேவர்களோ
என எண்ணி
ஒரு சிறு கவளச் சாதத்தை
வெளியே வைத்தேன்
சாதம் சாதமாக
காகம் பறந்து விட்டது
யாருடைய பித்ருக்களோ
நானறியேன்.
*****
யாரின் அல்லது எதன் அழைப்பு? நவீனயுகத் தனிமனிதத் தனிமை “ஒற்றைச் சன்னல்,” “என்னோடு நானே உணவருந்துதல்” என்று குறிக்கப்படுகிறது. தனியாகப் படுப்பதிலும் தனியாக உணவருந்துதல் இன்னும் கொடுமை. ஆனால், தனிமை என்பதுதான் என்ன? நிகழில் யாருமற்றுப் போகலாம். ஆனால், சந்ததியாக மூதாதையரோடு ஒரு கண்ணியில் இணைக்கப்பட்டிருக்கிறோம். தன்னந்தனிமையில் மனம் குவியும் மருட்கணம், அதைச் சிதறடிக்கும்வகையில் காகத்தின் வழியாக இந்த அழைப்பு.
பித்ரு ரூபமாகத் தெரியும் காகம் ஒற்றைசன்னலருகே அமர்ந்திருப்பவரின் குடும்பத்தின் மூதாதையர் என்பதாகமட்டும் தெரியவில்லை. சாதம் சாதமாகக் காகம் பறக்க, உலகில் தெரிந்த தெரியாத யாரோ மனிதர்களின் எல்லா மூதாதையரோடும் கொள்ளும் தொடர்பின் அழைப்பாகவே தொனிக்கிறது.
உடலே அன்னமயக் கோசமாக, அன்னத்தால் ஆகியிருக்கிறதென்றால், காகத்துக்கான சாதத்தின்மூலம் நம்மையே நாம் மூதாதைகளுக்குத் தருகிறோமா? அல்லது அன்னமயமாக உருவகிக்கப்படுகிற உடல் நாம் பின்னொருநாள் வேறு யாருக்கோ பித்ருக்களாக இருக்கப்போவதன் முன்வரைவா?
(பித்ரு: வடமொழிச்சொல், ‘பிதா’வை முன்நிறுத்தி தந்தைமைக் கருத்தியலை நிறுவும் சொல். என்றாலும் கவிதையில் மூதாதையர் பலராகத் தெறிக்கும் அர்த்தங்கள் இக்கருத்தியலை கொஞ்சம் நகர்த்திவைத்துப் படிக்கவும் தூண்டுகின்றன.)
வின்னிபெக்-கில் உண்ண சாதமும் இன்றி வரக் காகமுமின்றி ஒற்றைச் சன்னலைப் பார்த்துக்கொண்டே இதை எழுதுகிறேன். என் கவிதை ஒன்றும் நினைவில்:
அண்டசராசரம்
மடிப்பில் மாமிச
வெயில் விரித்தெனைக்
கொத்தும் தனிமையோர் காகம். (தீயுறைத்தூக்கம், 1998)
சாதம்சாதமாக எழுத்துகளே இப்போது கண்முன் பறக்க ஆத்மாநாமும் மற்ற தெரிந்த தெரியாத கவிஞர்களே அன்றி வேறு யார் எனக்கு மூதாதை என்று எண்ணியபடி.
1 comment:
நன்றி பெருந்தேவி.
//ஆனால், தனிமை என்பதுதான் என்ன? நிகழில் யாருமற்றுப் போகலாம். ஆனால், சந்ததியாக மூதாதையரோடு ஒரு கண்ணியில் இணைக்கப்பட்டிருக்கிறோம். தன்னந்தனிமையில் மனம் குவியும் மருட்கணம், அதைச் சிதறடிக்கும்வகையில் காகத்தின் வழியாக இந்த அழைப்பு. //
இவரின் புரியாத கவிதைகள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கின்றன.
Post a Comment