Tuesday, October 18, 2016

புதுமைப்பித்தனின் காஞ்சனை



நவீன விருட்சம் நூறாவது இதழில் (2016) வெளிவந்திருக்கிறது. இதழுக்கும் ஆசிரியர் அழகியசிங்கர் அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.  
(புதுமைப்பித்தன் நினைவு தினம் ஜூன் 30, 2015 அன்று சென்னையில் பனுவல் புத்தக நிலையத்தில் பேசியதின் கட்டுரை வடிவம்)

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது காஞ்சனை சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி திரு. நாகார்ஜுனன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது “இதைப் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதவேண்டும்” என்று கூறினார். ஒரு கட்டுரையும் எழுதினேன் அப்போது வந்துகொண்டிருந்த  'வித்யாசம்' இதழுக்கு. நவீன இலக்கியம் குறித்த கட்டுரைகளில் நான் எழுதிய முதல் கட்டுரையே அதுதான். ஆனால்  'வித்யாசம்' தொடர்ந்துவரவில்லை, நின்றுவிட்டது. கட்டுரையும் காலத்தின் காற்றில் எங்கோ அடித்துச்செல்லப்பட்டு ஒதுங்கிவிட்டது. இப்போது எங்கிருக்கிறது என்றுகூட தெரியவில்லை. என்ன கருத்துகளை அந்தக்கட்டுரையில் வைத்திருந்தேன் என்பது நினைவில் நிழலாகக்கூட இல்லை. ஆனால் அதற்குப்பிறகு அதே காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் மற்றும் அகல்யை ஆகியவற்றில் இயல்மொழித்தன்மை குறித்த என் கட்டுரை காலக்குறி இதழில் வெளிவந்தது. இன்றைக்கு, கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பின்னர் செந்திலின் தொலைபேசி அழைப்புக்குப்பின்னர் காஞ்சனையை மீண்டும் எடுத்து வாசித்தபோது அதன் சுவாரசியம் சிறிதும் குறைவுபடாமலிருந்தது. செண்பகமலரின் மணம் போல எண்ணத்தில் பரவிய சுவாரசியம். ஏன் இந்தக்கதை இன்றைக்கும் இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது, அப்படி என்னதான் செய்திருக்கிறார் இக்கதையில் புதுமைப்பித்தன் என்ற கேள்விகளிலிருந்து விளைந்ததுதான் இக்கட்டுரை.
காஞ்சனையை வாசிக்கும்போது உடனடியாகக் கவனத்தில் வந்தது அதன் சட்டகக் கதையாடல்பாணி (framed narrative style). இந்தக்கதையாடல் பாணி நவீனத்துவ இலக்கியப் பண்புகளை முன்னிலைப்படுத்திச் செயல்பட்டிருக்கிறது. இந்தப்பண்புகள் என்ன என்று பேசுவதற்கு முன்னால் இந்தச் சட்டகக் கதையாடல் பாணியை சற்று ஆராயலாம். காஞ்சனை கதையின் நடுவில் நிலைக்கண்ணாடி பற்றிய விவரணையொன்று வருகிறது. கதைசொல்லி வீட்டின் முன்கூடத்தில் அமர்ந்திருக்கிறார். பின்னறையொன்றில் அவரது மனைவியும் அவர்கள் வீட்டில் அன்றைக்கு வேலைக்குச் சேர்த்த வேலைக்காரியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடுக்கூடத்தில் ஒரு கண்ணாடி. அதில் அவர்களின் முகங்களைக் கதைசொல்லியால் காணமுடிகிறது. வேலைக்காரி மனைவிக்குக் கதையொன்றைச் சொல்கிறாள்.
     “அங்கே, காசியிலே ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?” என்றாள்
     “சொல்லேன்; என்ன கதை?” என்று கேட்டாள் என் மனைவி.
     “அஞ்சுநூறு வருசமாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக்கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப்பிடிச்சாலும் கெடக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு, மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை”
“இது அவனுக்குத் தெரிஞ்சுபோச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு?…அந்தக் குருவுக்கு.”


கதையின் இந்தக்கட்டத்தில் நிலைக்கண்ணாடி குரூரமான அச்சுறுத்தும் முகத்தைக் காட்டுவதாக வருகிறது. புராணத் தொன்மம், நாட்டார்கதை வகைப்பட்டது இந்தக்காசி இளவரசியின் கதை. காஞ்சனையில் முக்கியமான கதையாடல்கூறாக, உள்சட்டகமாக வருகிறது இக்கதை. நடுக்கூடத்திலிருக்கிற நிலைக்கண்ணாடி விவரணையிலிருந்து இந்த இளவரசிக்கதை தொடங்கினாலும், இக்கதையே ஒருவகையில் கதையாடல்மொழியில் நடக்கும் பிம்ப விளையாட்டுதான். ஏனெனில் இந்தக்கதையை வேலைக்காரி சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் கதைசொல்லி இதே கதையை தன் கையிலிருக்கும் ஆங்கிலச் சரித்திரப் புத்தகத்தில் வாசித்துக்கொண்டுமிருக்கிறார்.  “அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது” என்ற வாக்கியத்தை வாசிக்கும்போது அதையே தெரிவிக்கும் வாக்கியத்தைக் கேட்கவும் செய்கிறார். செவிப்புலனும் கட்புலனும் ஒரேநேரத்தில் எதிர்கொள்கிற தகவலாக இருக்கிறது அது.
நாட்டார் கதை அல்லது புராணமாக கதைக்குள் கதையாக வருகிறது வேலைக்காரியால் சொல்லப்படுகிற காசி இளவரசியின் கதை. இந்த உள்சட்டகத்துக்கு அடுத்த சட்டகம் கதைசொல்லி வாசிக்கிற சரித்திர புதினம். இந்தச் சட்டகத்துக்கும் அடுத்த உள் சட்டகமாக அவர் மனைவி, வீடு இவையெல்லாம் வருகிற everyday life என்கிறோமே அப்படியான எழுத்தாளக் கதாபாத்திரத்தின் தினவாழ்க்கை பற்றிய புனைவு பின்னப்படுகிறது. ஆக, இந்தப் புனைவு மூன்றாவது சட்டகம்.
இந்தச் சட்டகங்கள் அவற்றுக்கேயுரிய சொல்லாடல் மரபுகளோடும் சுட்டுதல்களோடும் கதையில் வருகின்றன. நாட்டார் கதை தனக்கே உரித்தான வழக்கமான தொடக்கத்தோடு இருக்கிறது. ”காசியிலே ஒரு கதையைக் கேட்டேன். உனக்குச் சொல்லட்டா?” என்பது அந்தத்தொடக்கம். “முன்னொரு காலத்திலே” அல்லது “அந்தக்காலத்திலே” என்பதுபோன்ற நாட்டார் கதைகூறு முறையின் மரபான தொடக்கம் அது. Signature beginning of folk narrative என்று இதைச் சொல்லலாம். இந்தத்தொடக்கம் இக்கதையை அடுத்த வெளிச்சட்டகமான வரலாற்றெழுத்திலிருந்து வேறுபடுத்துகிறது, பிரித்துக்காட்டுகிறது.
அடுத்ததாக வரலாற்றெழுத்து. இது தெளிவாகவே புத்தகப் பெயரோடு அடையாளப்படுத்தப்படுகிறது. “சரித்திர சாசனங்கள்” என்கிற புத்தகத்தை கதைசொல்லி முன்னறையில் உட்கார்ந்தபடி வாசிப்பதாக வருகிறது. வாய்மொழிப்புராணம், சரித்திர எழுத்து, இவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக இவையெல்லாம் புழங்குகிற எழுத்தாளரின் தினவாழ்க்கை. பலரும் வாழ்வதைப்போன்ற சாதாரண வாழ்க்கைதான் அது என்பதுபோல எழுந்திருத்தல், பல்துலக்குதல், காப்பி குடித்தல், சமைத்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுகின்றன.
ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்படுகிற சட்டகப்புனைவுகள் அப்படியே விட்டுவைக்கப்படுவதில்லை. இந்தச் சட்டகங்கள் எல்லாம் ஒன்றோடொன்று பின்னியும் ஏன் கொஞ்சம் குழம்பியும் வாசகரிடத்தில் தரப்படுகின்றன. உதாரணத்துக்கு இப்படிக் கற்பனை செய்யுங்கள். ரோஜா வண்ணத்தில் வரையப்பட்டிருக்கும் ரோஜா மலரின் ஓவியம் போல ஒரு வடிவ வண்ணம் தெரிகிறது. கூடவே அடுத்து நீலம், வயலட் நிறக் கோலங்களும் கண்ணுக்குப்படுகின்றன. இந்த ஓவியத்தின் அடுத்தடுத்த சட்டகங்களாக இவை இருக்கலாம். போலத் தெரிகிறது, இருக்கலாம் என்றுதான் யோசிக்கிறோம். ஏனெனில் மலரின் நிறமும் வடிவமும் சட்டகங்களின் நிறங்களிலும் வடிவத்திலும் ஊடுருவி, சட்டகங்களின் வடிவங்களிலும் நிறக்கோலங்களிலும் இயைந்து கலந்துவிடுவதைப்போல ஒன்றை நான் குறிப்பிடுகிறேன். இப்படி வடிவங்களும் வகைமைகளும் கலந்தும் குழம்பியும் உருவான அழகியலின் வார்ப்பு காஞ்சனை.
 “காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதலெ வர்ற காஞ்சனை மாதிரி” என்று கூறுகிறாள் வேலைக்காரி. கதையின் கடைசியில், மந்திரவாதி “காஞ்சனை இனி மேல் வரமாட்டாள்” என்று அவள் காஞ்சனைதான் என்று அவள் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறான். புராணச் சொல்லாடல், சரித்திரத்தின் பக்கங்கள், தற்கால வாழ்வு. இவை அனைத்திலும் ஒரே நேரத்தில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்கள் காஞ்சனையும் மந்திரவாதியும். அல்லது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு கணத்தில் சென்றுவிடக்கூடியவர்கள். புராணம், சரித்திரம், தற்கால வாழ்வு இவை எல்லாவற்றின் எல்லைகளையும் இந்தக் கதாபாத்திரங்கள் கலைத்துப்போட்டுவிடுகிறார்கள். கூடவே இவற்றை இவ்வாறெல்லாம் பிரித்துப்பார்க்கிற நம் அறிதல் அணுகல்முறைகளையும்தான்.
சொல்லப்போனால் சட்டகக்கதைகள் தமிழ் மரபுக்கோ சம்ஸ்கிருத மரபுக்கோ அல்லது பிற இந்திய மொழிகளின் மரபுகளுக்கோ புதிதல்ல. உதாரணமாக, குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோ சேரல் இளங்கோ அடிகளின் வாழ்க்கை வரலாறு சிலப்பதிகாரத்தில் சுட்டப்படுவதைச் சொல்லலாம். அதேபோல ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வால்மீகியால் கற்றுத்தரப்பட்ட ராமாயணத்தை ராமனின் பிள்ளைகள் அவனிடமே பாடிக்காட்டுவது சட்டகக்கதைக்கு ஒரு சான்று. கதையாடல்கள் தம்மைத் தாமே பரிசீலித்துக்கொள்ளல், பிரதிபலித்துக்கொள்ளல் என்று சட்டகப்பாணியைக் குறித்து அறிஞரும் கவிஞருமான ஏ.கே. ராமானுஜன் குறிப்பிடுவார். புதுமைப்பித்தனின் கதையில் கதாபாத்திரமான காஞ்சனை அவள் கதையை அவளே சொல்வதாக விவரிக்கப்படுகிறது.
இங்கே இந்தச் சிறுகதையில் நவீனச் சொல்லாடலின் பங்கு என்ன என்று பார்த்தால், பொதுவாக மரபார்ந்த கதையாடல்களில் நாம் காணும் தொடக்கம், ஒரு சிக்கல் அல்லது பிரச்சினை, அதன் உச்சக்கட்டம், அதற்கான தீர்வு என்கிற பாணி என்பது இச்சிறுகதையில் இல்லை என்பதுதான். இந்தப் பாணியை சிறுகதை தெளிவாக மீறுகிறது. யோசித்துப்பாருங்கள். காசி இளவரசியின் கதையின் முடிவு சிறுகதையில் சொல்லப்படுவதேயில்லை. “அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது” என்கிற வாக்கியத்தோடு உள்சட்டகக்கதைகூட முடிந்துவிடுகிறது. சிக்கலின் உச்சகட்டத்தில் என்ன நடந்ததென்று தெரியாத ஓர் ஓட்டை, ஒரு குழப்பம் ஓர் அந்தரம். இளவரசியின் காதலை அறிந்துகொண்ட மந்திரவாதி என்ன செய்தான்? காதலர்களுக்கு என்னதான் ஆனது? கதையில் இவைகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. சரி, இரவில் சேமக்கலம் முழங்க எழுத்தாளரின் வீட்டுக்குவந்த அந்த மந்திரவாதி. யார் அவன்? காசியில் இளவரசியின் குருவா? அல்லது வேறொருவனா? காஞ்சனை தப்பித்தபடியே இருக்கிறாள் என்பது காதலின் நிரந்தரத்தைக் காட்டுகிறது என்றால் அவள் பிடிபட்டபடியே இருப்பது அதன் கையறுநிலையைக் காட்டுகிறதா? ஏன் சேமக்கலத்து விபூதி சுடுகிறது? சுடலைச்சாம்பலோ அது? தன்னிடமிருந்து தப்பித்த காஞ்சனையை தேடிவந்த மந்திரவாதியா அவன்? அந்த வீட்டிலிருந்து காஞ்சனையை அப்புறப்படுத்துவது எங்கே கொண்டுசெல்ல? ஒருவேளை தற்காலத்திலிருந்து அப்புறப்படுத்தி புராணத்துள்ளும் சரித்திரத்துள்ளும் இக்கதாபாத்திரங்களைச் சிறைப்படுத்திவைக்க புதுமைப்பித்தனால் கையாளப்பட்டிருக்கும் கதையாடல் உத்தியா இது? இப்படிப் பல கேள்விகள். இவற்றையெல்லாம் நாமே யோசித்துக்கொள்ள வேண்டியதுதான்.
புதுமைப்பித்தன் மணிக்கொடியில் 1932- ஆம் ஆண்டு வெளிவந்த “சிறுகதை” என்று தலைப்பிட்ட சிறு கட்டுரையில் இப்படி எழுதுகிறார்: ”வேறொரு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்ற ஒன்றுகூட கிடையாது. அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். இப்படிப்பட்ட கதைகள் முடிந்தபிறகுதான் ஆரம்பமாகிறது என்றால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை. இம்மாதிரியாகக் கதை எழுதுகிறவர்கள் இந்த முறையின் சார்பாகக் கூறும் வாதம் ஒன்று: வாழ்க்கையில் முற்றிற்று, திருச்சிற்றம்பலம் என்று கோடு கிழித்துவிட்டு ஹாய்யாக நாற்காலியில் சாய்ந்துகொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா?” புதுமைப்பித்தன் கூறுவதற்கொப்ப காஞ்சனையின் கதை வாசிக்கையில் வாசித்தபின்னும் எழுப்பும் கேள்விகளை கதை நம்முள் தொடர்வதாகவே புரிந்துகொள்ள முடியும். இவை போன்ற கேள்விகளின் வாயிலாக முடிவற்ற பிரதியாக இச்சிறுகதை வாசகர் மனதில் உருவாகியபடி இருப்பதே இந்தக்கதையின் ஆகப்பெரிய வெற்றி.
காஞ்சனை சிறுகதை கதை நிகழ்வுகளைத் தாண்டியும் நம் சிந்தனையின் சலனத்தைத் தூண்டுவதாகவே உள்ளது. சுற்றியிருக்கும் புற உலகைத் தொடர்ந்து கவனித்து கணக்கிட்டு, அதன்மூலம் தன்னை, தன் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் மனித சுயத்தை, தெகார்தே போன்ற தத்துவ அறிஞர்கள் முன்வைத்த அத்தகையதொரு மனித சுயத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது இந்தச் சிறுகதை. சுருக்கமாகச் சொன்னால், இந்த யதார்த்த அல்லது புற உலகை, இங்கே நேர்கிற அனுபவங்களை, மனித சுயத்தை அதன் அறிதலை மையமாக வைத்து ஒரு எண்ண ஒழுங்குக்குள் அல்லது தர்க்க ஒழுங்குக்குள், ஒரு சேர்மானத்துக்குள் கொண்டுவர முடியும் என்பதைச் சந்தேகிக்கிறது. தன்னுறுதி (self affirmation) குறித்த இத்தகைய சந்தேகமே இந்தக்கதை ஏற்படுத்துகிற முதன்மையான சிந்தனைச் சலனம்.  கதையில் ஓரிடத்தில் இப்படி வருகிறது:
என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் ஒருவன் “ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது; அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?” என்று கேட்டால் நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது?
கதாபாத்திரத்தின் இந்த அல்லாட்டம் நவீனத் தன்னிலையின் அல்லாட்டமும்கூட. சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் நமக்குப் பழக்கமான, முறைப்படுத்தப்பட்ட பார்வைக்குள் கொண்டுவரமுடியாத அல்லாட்டம், அவற்றை தன்னிடம் தானே பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள முடியாத அல்லாட்டம் அது. புதுமைப்பித்தனிடம் வாசகர் ஒருவர் எழுப்பிய காஞ்சனை பற்றிய கேள்வியொன்றுக்கான பதிலிலும் இந்த அல்லாட்டம் அங்கதச்சுவையோடு வெளிப்படுகிறது: ”என் கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக்காஞ்சனைக் கதையைப் படித்துவிட்டு என்னிடம் வந்து ’உங்களுக்கு பேய்ப்பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?’ என்று கேட்டார். நான், ‘பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே’ என்றேன்.” என்று காஞ்சனை உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பு நூல் முன்னுரையில் எழுதுகிறார் புதுமைப்பித்தன்.

இத்தகைய அல்லாட்டத் தருணங்களை நாமே கூட எதிர்கொண்டிருக்கலாம். சிலவருடங்களுக்குமுன் இதே போன்ற ஒரு அல்லாட்டம் எனக்கு ஏற்பட்டது. காஞ்சனை போலவே வீட்டில் வேலைசெய்ய வந்த ஒருவரால், ஒருவரோடு வினோதமான அனுபவங்கள் எனக்கும் என் தந்தைக்கும் ஏற்பட்டது. அந்தச் சில மாதங்களில் காஞ்சனை மீண்டும் மீண்டும் மனதிலோடாத நாளே இல்லை எனலாம். பயமும் புரியாமையும் சூழந்த அந்த நாட்களை நகைச்சுவை உணர்வோடும் அடக்கத்தோடும் கடந்து மீள காஞ்சனை எனக்கு உதவியது. அந்தக்காலகட்டத்தில் உற்ற நண்பராகவும் துணையாகவும் இருந்தது இச்சிறுகதை என்பதை நான் குறிப்பிடவேண்டும். எனக்கேற்பட்ட இந்த வாழ்வனுபவம் ஒரு வாசகராக காஞ்சனையை நான் அர்த்தப்படுத்திக்கொள்ளும்வகையில் பிரதியோடு உணர்வுபூர்வமான ஒரு நெருக்கத்தையும் உருவாக்கித்தந்தது. புதுமைப்பித்தன் மீதான எழுத்துக்காதல் மேலும் மேலும் ஆழமாக என் எண்ணத்தில் அந்நாட்களில் வேர்விட்டது எனலாம்.  இந்தக் கட்டுரை ஒருவகையில் என் உணர்வுகளின் பிரதிபலிப்பும் ஆகும். 

Sunday, September 4, 2016

நான் யார் நான் யார் நீ யார்


என் கவிதையில் வருகிற
நானை நானென்று
நினைத்துவிட்டீர்கள் பாவம்
அது சும்மா
நான் ஒரு கவித்துவ வசதி
அல்லது உயர் சித்தப்பிரமை
உண்மையில்
நான்
காற்று தள்ளிவிட்ட
ஒரு சுரைக்காய்க் குடுவை
இல்லையில்லை
சுரைக்காய்க் குடுவையின்
தொன்ம ஆச்சார
மதிப்பெல்லாம் எனக்கில்லை
இப்போது சரியாகச் சொல்கிறேன்
கேளுங்கள்
நான்
ஒரு வழிப்போக்கன்
விசிறியடித்த
காலி கோகோகோலா டின்
ஆமாம் டின்
இப்படியே உருண்டோடுவேன்
சொச்சநாளும்
மிச்ச மீதியாய்
ஆமாம், நீங்கள்?
காலி பெப்சி டின் என்றால்
தள்ளிப் போங்கள்
முள்புதர் நோக்கிச் சரிந்து
மண்ணில் மட்காமல்
புதையுண்டு கிடப்பதிலும்
போட்டிக்கு வந்துவிடாதீர்கள்



(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

ஞானக்கூத்தன் கவிதைகள்: எழுத்தின் கலகமும் தத்துவ அடித்தளமும்

உயிர்மை, செப்டம்பர் 2016-இல் வெளிவந்திருக்கும் கட்டுரை
(ஞானக்கூத்தன் கவிதைகளின் பகடி, நவீனத்துவ, பின்நவீனத்துவ செயற்பாடுகள், தனிமனித சுயம் பற்றிய எள்ளல், மற்றமை குறித்த நோக்கு ஆகியவற்றினூடே அவரது கவிதை உலகின் தத்துவ அடிப்படையைக் காணும் முயற்சி)
மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு நினைவஞ்சலி எழுதுகிற இந்தச் சந்தர்ப்பத்தை அவர் கவிதைகளின் சில இன்றியமையாத அம்சங்களை எடுத்துக் கூறப் பயன்படுத்த நினைக்கிறேன். ஞானக்கூத்தனின் வாழ்க்கை வரலாறு, அவர் கவிதைகள் பதிப்பிக்கப்பட்ட வரலாறு, அவரது இலக்கிய வட்டாரம் உருவான வரலாறு போன்றவற்றைப் பற்றி அவரோடு தொடர்பிலிருந்த பல நண்பர்கள் அஞ்சலிக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாணியிலிருந்து சற்று நகர்ந்து என் கட்டுரை ஞானக்கூத்தனின் கவிதைகளில் இயங்கும் நவீன உலகம், வாழ்க்கை சார்ந்த கரிசனைகளையும் தத்துவ அடிப்படையையும் தொட்டுச் செல்ல விழைகிறது. படைப்புகளின் பரிமாணங்களைப் பேச விரும்புவதும் அஞ்சலி கூறுதலின் தவிர்க்கவியலாத ஒரு பகுதிதானே!
ஞானக்கூத்தன் கவிதைகளில் நவீன வாழ்க்கை குறித்த கரிசனைகள் பொதுவாக இரண்டு தளங்களில் செயல்படுகின்றன. ஒன்று, சமூக வாழ்வு சார்ந்தது. சமூகத் திரளாக நாம் கொள்கிற பெருமிதங்களுக்கும் கள எதார்த்தத்துக்குமான, நம் சொல்லுக்கும் செயலுக்குமான பொருண்மையான இடைவெளிகளைச் சுட்டிக்காட்டுவதாக அவர் கவிதை மொழி இயங்குகிறது. இன்னொரு தளத்தில், தன்னுறுதியும் இறையாண்மையும் (sovereign autonomous self) கொண்டதான நவீன மனித சுயம் கவிதைகளில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ”கீழ்வெண்மணி” என்கிற கவிதையிலிருந்து தொடங்குவோம். இந்தக் கவிதையில், நாம் நாகரீகமானவர்கள் என்று கொண்டிருக்கும் பெருமிதத்துக்கும், சூழலில் நிகழும் சாதி வெறுப்புச் செயல்களுக்குமான இடைவெளி, இந்த இடைவெளியில் நழுவி மரித்த உயிர்கள் பாடுபொருள்களாகின்றன. “மல்லாந்த மண்ணின் கர்ப்ப / வயிறெனத் தெரிந்த கீற்றுக் / குடிசைகள் சாம்பற் காடாய்ப் / போயின” என்று தொடங்குகிறது கவிதை. கீழ்வெண்மணி ஊர்க்காரர்கள் திரண்டு வந்து சாம்பல் குவியலைப் பார்ப்பதைக் கூறுகிறது: ”குருவிகள் இவைகள் என்றார் / குழந்தைகள் இவைகள் என்றார் / பெண்களோ இவைகள்? காலி / கன்றுகள் இவைகள் என்றார்.” குருவிகளுக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கன்றுகளுக்கும் வேறுபாடு காண முடியாத கருகிய நிலை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மானுடத் தன்மை என்பதே மறுக்கப்பட்டிருக்கிற நிலையைக் கவிதை விவரிக்கிறது. சாதி வெறுப்பின் தீயில் மனித நாகரிகம் என்பது மதிப்பிழந்து, உள்ளீடற்று எஞ்சி நிற்கிறது எனும் விமர்சனத்தைக் கவிதை வைக்கிறது.
அதேபோல அவரது “மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்” கவிதை சமகால மேடைப் பேச்சை முன்னிறுத்தி நம் பாசாங்கை எடுத்துரைப்பது. சொல்லும் செயலும் மாறுபட்டிருப்பதை இதனால் கைவிட்டுப்போன மதிப்பீடுகளைப் பேசுகிறது இக்கவிதை. கவிதையில் “வழுக்கையை சொறிந்தவாறு வாழ்க நீ எம்மான்,” என்கிற அரசியல்வாதி “பெண்களை நோட்டம் விட்டு பாழ்பட்டு நின்ற” என்கிறார். “‘வாழ்விக்க வந்த’” என்னும் எஞ்சிய பாட்டைத்” தெருவில் வீசுகிறார். காந்தி போன்ற பெருந்தலைவர்கள் முன்வைத்த தேசியவாதம், பெண்ணைச் சகஜீவியாகக் கருதுதல் போன்ற விழுமியங்கள் மட்டும் வீழ்ச்சியுறவில்லை, அந்தத் தலைவர்களே இன்று வெறும் மேடைப் பேச்சுப் பொருள்களாக மாறியிருப்பதை, தெருக் குப்பையாக எஞ்சிவிட்டிருப்பதைக் கவிதை காட்டுகிறது.
ஞானக்கூத்தனின் கவிதைகளின் ஒரு முக்கிய நவீனத்துவ எழுத்து உத்தியெனப் பகடியை நாம் கருதமுடியும். இலக்கிய விமர்சகர்கள் நவீனக் கவிதைமொழியில் பகடியைக் கொண்டுவந்த முன்னோடியாக அவரைச் சரியாகவே அடையாளம் கண்டிருக்கிறார்கள். சமூகத்தில் மேலாண்மை பெற்றிருக்கும் அழகியல், பண்பாட்டு, அரசியல் போக்குகளை விமர்சிக்க இந்த உத்தி அவருக்குப் பெரிதும் பயன் தந்தது. பகடி என்பதற்கு நவீன ஐரோப்பியக் கலையில் ஓர் எளிய உதாரணமாக மார்சல் தூஷாம்-இன் ”L.H.O.O.Q” (1919) என்கிற ஓவியத்தைச் சிந்தனையாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தூஷாம்-இன் தாதாயிச ஓவியம் பதினாறாம் நூற்றாண்டு ஓவியரான லியனர்டோ டாவின்ஸியின் மோனாலிசா ஓவியத்தின் பகடியாக உருவாக்கப்பட்டது. அழகு என்பதற்கு இலக்கணமாக, ஆதரிசமாக ஐரோப்பியச் செவ்வியல் கலையில் முன்வைக்கப்பட்ட மோனாலிசா-வை மீசையோடும் ஆட்டுத்தாடியோடும் ’போலச்செய்து’ பகடி என்கிற வரையறைக்குள் கொண்டுவந்தது நவீன ஓவியம். மேலும், ”L.H.O.O.Q” என்கிற பிரெஞ்சு வழக்காற்றின் பொருள் ”கவரும் குண்டியைக் கொண்டவள்” என்பது. புன்னகைக்குப் பெயர்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் சமூக-பண்பாட்டு மதிப்பை, அதன் அழகியலைத் தகர்த்த நவீனத்துவக் கலகச்செயல்பாடு தூஷாம்-இன் ஓவியம் எனலாம். இத்தகைய வகையில் சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மேன்மையாகவும் புனிதமாகவும் கருதப்படுவனவற்றைக் கலைத்துப்போடும் பகடியை ஞானக்கூத்தனின் கவிதைகளில் நாம் காண முடியும். பகடி எழுத்து தமிழ் அல்லது சம்ஸ்கிருத மரபார்ந்து அவரிடம் செயல்பட்டது என்பதைவிட ஐரோப்பிய நவீனத்துவப் பாணிகளிலிருந்து அவர் பெற்றுக்கொண்டது என்பதே பொருந்தும். பகடி அவரின் பல கவிதைகளில் விமர்சனத் தனித்துவத்தோடும் அமைகிறது. எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே பலரும் குறிப்பிட்டிருக்கிறபடி, “காலவழுவமைதி” கவிதை திராவிட அரசியல் மேடைப் பேச்சைப் பகடி செய்கிறது. தமிழ் மொழிப்பற்றை முன்னிறுத்தி எவ்வாறு திராவிட இயக்க அரசியல்வாதி கௌரவம் பெறுகிறார் (“வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ”) என்பது ஒருபுறம்; புறநானூற்றைச் சுட்டிப் பேசுகிற அவர் மேடைப் பேச்சு என்கிற பெயரில் தமிழ் எவ்வாறு உருக்குலைக்கப்படுகிறது என்பது மற்றொரு புறம் (“பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமோ? / தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பொணக்குவ்யல் காண்போ மின்றே”) தமிழ்மொழிப் பற்று, அக்கறை இவையெல்லாம் அர்த்தமிழந்த வெற்றுப் பேச்சாய்த் தமிழகத்தில் எஞ்சிவிட்ட நிலை விமர்சனமாகக் கவிதையில் மேலெழுகிறது.
திராவிட, தேசிய இயக்கங்கள் போன்ற அரசியல் விசைகள் என்றில்லை, அவர் பகடி சமூக-பண்பாட்டுத் தளத்தில் நவீன கல்வி, இன்றைக்கும் மக்களிடையே செல்வாக்கோடு திகழும் புராணங்கள், வழிபாடுகள் போன்றவற்றையும் விட்டுவைப்பதில்லை. “வகுப்புக்கு வரும் எலும்புக் கூடு” கவிதையில் நவீன வகுப்பறை விவரிக்கப்படுகிறது. மாணவர்கள் கண்டு பயில வருடாவருடம் தவறாமல் வகுப்பறைக்கு வருகிறது ஒரே எலும்புக்கூடு. மாணவர்கள் அதைக் கண்டு சிரிக்கிறார்கள் விலா வெடிக்க. பல வருடங்கள் கழிந்தாலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாத கல்விமுறை விமர்சிக்கப்படுகிறது.
ஞானக்கூத்தனின் இன்னொரு புகழ்பெற்ற கவிதை நரியைப் பரியாக்கிய சிவனின் திருவிளையாடற் புராணத்தை நினைவுகூர்கிறது. பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தூஷாம்-இன் மோனாலிசா ஓவியத்தில் திடீரென முளைத்த மீசையையும் தாடியையும் போல, ஞானக்கூத்தனின் இந்தத் திருவிளையாடற் புராண மறுவாசிப்பில், திடீரென ஒரு பரியாக மாறாத நரி முளைக்கிறது. சிவனைப் பார்த்து தான் விடுபட்டதைக் குறைசொல்லி நீதியோ இது என முறையிடுகிறது. திருவிளையாடல் முடிந்துவிட்டது போய்வா என்று அதை அனுப்பிவிடுகிறார் சிவன். “திருவருட் திட்டம் பொய்த்ததற்கு ஊளைச் சான்றாம் நரி” என்று இறைவனின் திருவிளையாடலின் புனிதத்தைக் கவிழ்த்துப்போடுகிறது கவிதை. “நஷ்டக் கணக்கு” என்கிற இன்னொரு சிறு கவிதையைப் பார்ப்போம்: “வாகனம் தூக்கிக்கொண்டு / தீவட்டி பிடித்துக்கொண்டு / வாத்தியம் இசைத்துக்கொண்டு / பலூன்கள் விற்றுக்கொண்டு / தெருக்காரர் ஊர்வலத்தில் / இருப்பதால் நஷ்டப்பட்டார் / எங்களூர் அரங்கநாதர்” என்கிறது கவிதை. அச்சு அசலாக சாமி ஊர்வல விவரணை. ஆனால் ஊர்வலத்தில் இவ்வாறு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்த ஊர்க்காரர்கள் தெய்வத்தை மறந்ததால் எதையும் இழக்கவில்லை. மாறாக அவர்களின் ஈடுபாடு மாறிவிட்டதால் நஷ்டப்பட்டார் அரங்கநாதர் என்கிறது. உண்மையில் யாருக்கு யார் அவசியம்? பக்தர்களுக்குக் கடவுளா, கடவுளுக்குப் பக்தர்களா என்றால் கடவுளுக்குத்தான் பக்தர்கள் தேவைப்படுகிறது என்று கடவுளின் முக்கியத்துவம் காணாமல் போயிருப்பதைக் கூறுகிறது கவிதை.
ஞானக்கூத்தனின் வேறு சில கவிதைகளில் பின்நவீனத்துவக் கதம்ப நடையும்கூட பகடி எள்ளலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கதம்பநடை என்பது பல்வேறு இலக்கிய வகைமைகளை (genre), பாணிகளை (style), அல்லது புராணம், அறிவியல், செவ்வியல் இலக்கியம் போன்ற பல்வேறு புலங்களின் (fields) சொல்லாடல்களைக் கலந்துகட்டி வைக்கப்படுகிற நடை எனலாம். கதம்ப நடைக்கு ஓர் எடுத்துக்காட்டாக முன்னர் குறிப்பிட்ட “மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்” கவிதையைச் சொல்லலாம். அந்தக் கவிதையில் மேடைப்பேச்சும் பாரதியாரின் தேசியகீதமான மகாத்மா காந்தி பஞ்சகம் “வாழ்க நீ எம்மான்” பாடலிலிருந்து சில சொற்றொடர்களும் கலந்துகட்டி வருகின்றன. இந்தக் கதம்பப் பாணி கவிதைகூறு முறையில் மட்டுமன்றி சில கவிதையின் பாடுபொருள்களிலேயே இருப்பதையும் காண்கிறோம். “மேசை நடராசர்” கவிதையில் எழுதாத பேனா, மூக்கூடைந்த கோணூசி, பூணூல் உருண்டை, மெழுகு, கவிழ்த்துவைக்கப்பட்ட நாவல், செய்தித்தாள், கழுத்து நீண்ட எண்ணெய்ப்புட்டி முதலியவற்றோடு மேசை மீது நின்று ஆடிக்கொண்டிருக்கிறார் நடராசர். இப்படி ஒன்றோடொன்று தொடர்பின்றி, பொருத்தமற்றுக் குவிக்கப்பட்ட பொருள்களில் கடவுளும் ஒரு பொருளாகக் காட்சியளிக்கும்போது, கடவுளுக்கும் உலகத்துக்குமான, கடவுளுக்கும் மனிதருக்குமான உறவுப் படிநிலையின் சட்டகமே மாறிவிடுகிறது. கூத்தாடுகிற இறைவனின் அதிகாரம் கேலிக்கூத்தாகிவிடுகிறது.
ஞானக்கூத்தன் கவிதைகளில் இயங்கும் ஓர் இன்றியமையாத அம்சம் ஓர்மையெனக் (coherent) கருதப்படுகிற மனித சுயத்துக்கு அவை விடுகிற சவால். இறை அதிகாரத்தின் நீக்கத்தைக் கூறுவது மட்டுமல்ல, ஓர்மையான சுயத்தைக் கவிதைச் சொல்லாடலில் மையத்திலிருந்து நகர்த்துகிற, கலைக்கிற தத்துவச் செயல்பாட்டையும் அவர் கவிதைகளில் நாம் பார்க்க முடியும். ஞானக்கூத்தனின் பல கவிதைகளில் மனித சுயம் உடலை மையமாகக் கொண்டிருப்பதாக இருக்கிறது; ஆனால் துண்டுண்டதாக, உருச் சிதைந்ததாக அல்லது சப்பட்டையாக இருக்கிறது. சில கவிதைவரிகளைப் பார்ப்போம்: “விழிக்கிறான் / முழங்காலொன்று / காணலை / பொசுக்கப்பட்டு / சதைகளும் எலும்புமாகக் / கிடைப்பதைத் தெரிந்து கொண்டான், வைக்கின் கூறுகட்டி” (“எட்டுக் கவிதைகள்”); “என் தலையை திறந்து / பார்த்தேன் / திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின் / சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்” (“மண்டையைத் திறந்தால்”); “தலைமேல் விழுந்தலை தோளில் விழும் தலை / இடுப்பில் விழும்தலை / காலிடுக்கில் தலை” (“அழிவுப் பாதை”); “வள்ளிக் கிழங்கின் / பதமாக / வெந்துபோன / அவள் உடம்பைப் / பிட்டுத் தின்னத் / தொடங்கிற்று / ஒவ்வொன்றாக / அவையெல்லாம்” (“எட்டுக் கவிதைகள்”); “கண்டதுண்டா நீ முன்பு / என்னைப் போல் சப்பட்டை / யான மனிதன்” (“எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்”).
அந்நியமாதலும், இயந்திரமைய உலகப்பார்வையும் (mechanistic worldview), உலகப்போர்களும், அறிவியல், கல்வி முதலியவற்றை வளர்ச்சிக்கான, முன்னேற்றத்துக்கான கருவிகளாக மட்டுமே பார்க்கிற பார்வையும் கூடிச் சேர்ந்து நம் நவீன வாழ்வைக் கட்டமைத்திருக்கின்றன. இவ்வாழ்வில், மனித சுயம் சிக்கல்களையும் வாழ்நிலை மாற்றங்களையுமே தொடர்ந்து சந்திக்கிறது; அதனால் அதன் ஓர்மை (coherence) குலைந்து அது பிளவுற்று துண்டங்களாகி விடுவதை சார்லஸ் டைலர் உள்ளிட்ட நவீனம் பற்றிச் சிந்தித்த அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் பிளவுற்ற அல்லது துண்டான சுயம் ஐரோப்பிய நவீனத்துவ எழுத்துவெளியிலும் காணப்படுகிறது. ஞானக்கூத்தனின் கவிதைகளின் விரிந்த பரப்பில், திராவிட இயக்க, தேசிய இயக்க அரசியல்களின் மதிப்பீடுகளின் வீழ்ச்சி, அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் தோல்வி, சாதிய சக்திகளின் வெறுப்பரசியல், கேளிக்கையாகிவிட்ட பக்தி, அந்நியமாகிவிட்ட உழைப்பு (“வேலையெனும் பூதம்”) போன்ற பலவும் வெவ்வேறு வகைகளில் நவீன மனிதருக்கு அக, புறச் சிக்கல்களைத் தருபவை. எனவே பிளவுபட்ட, உருக்குலைந்த உடல்மைய மனித சுயம் அவர் கவிதைகளில் நமக்குக் கிட்டுவது எதிர்பார்க்கக்கூடியதே. அதே நேரத்தில், அவர் கவிதைகளில் இப்படிப் பகுதி பகுதிகளாக பிளவுண்டு கிடக்கிற உடல்கள் மீண்டும் ஒருமை ஒன்றை நோக்கி நகர்வதில்லை, சிதைந்த, பிளவுபட்ட பகுதிகள் மட்டுமாகவே அவை விடப்படுகின்றன, அவற்றின் ஒருமை மீட்கப்படுவதில்லை. ஞானக்கூத்தனின் கவிதைகளின் பின்நவீனத்துவப் பண்பை இத்தகைய துண்டுபட்ட சிதைந்த கருகிய உருக்குலைந்த உடல்களும், இந்த உடல்மைய, ஓர்மையற்ற சுயங்களுமே கட்டமைக்கின்றன.
ஐரோப்பியப் புத்தொளிக் காலத்திலிருந்தே உருவாகிவந்த நவீன தனி மனித சுயம் என்கிற புனைவைச் சந்தேகிப்பது, அந்தப் புனைவைக் கலைப்பது ஆகியவற்றை ஞானக்கூத்தனின் கவிதைகள் பின்நவீனத்துவக் கலகச் செயற்பாடுகளாக முன்வைக்கின்றன. ஆனால் சந்தேகம் அல்லது கலைத்தல் ஆகியவற்றோடு கவிதைகள் நின்றுவிடுவதில்லை. மனித உடல்சார் சுயத்துக்கான முனைப்பை அவர் கவிதைகள் மறுக்கிறபோது, மனிதர்களைத் தாண்டிய அமனித மற்றமைக்கு (non-human Other) முக்கியத்துவம் தருவனவாக அவை உள்ளன. நத்தை, மரவட்டை, கம்பிளிப்பூச்சி, நாய், மீன்கொத்தி, காக்கை, பன்றி, குதிரை எனப் பல உயிர்களை அவர் கவிதைகளில் நாம் எதிர்கொள்கிறோம். மனிதர்களுக்கும் அமனித உயிர்களுக்கும் இடையிலான படிநிலையற்ற சரிசமமான தொடர்பையும், உறவுத் தொடர்புறுத்தல்களையும் அவருடைய பல கவிதைகளில் காண்கிறோம். உதாரணமாக, “மரவட்டை” கவிதையில் “துக்குணிக் கால்களோடு” செல்கிறது ஒரு மரவட்டை “பரபரப்பாய்.” அதைத் தொடாதே, தொட்டால் சுருண்டு நீளும்போது அது தன் வழியை மறந்துவிடக்கூடும் என அதன் வழியிலிருந்து அதைத் தொந்தரவுபடுத்தாமல் நிற்க மனிதருக்குப் போதிக்கிறது கவிதை. இன்னொரு கவிதையில், தன்பாட்டுக்குப் புல்லைத் தின்றுகொண்டிருந்த குதிரையை குதிரை குதிரை என்று சீண்டுகிறான் ஒருவன். குதிரை அவனுக்கு ஒரு உதை விடுகிறது. “காக்கை” கவிதையில், கவிதைசொல்லியோடு “பேசவந்தாற் போலப் பரபரப்பில்” இருக்கும் ஒரு காக்கை காட்டப்படுகிறது. அவர் குடும்பத்தோடு பழக்கம் கொண்டதாக, ஒரு நண்பனைப் போல அது கவிதையில் வருகிறது. அந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்வதுபோல அவர்கள் வீட்டில் சின்னக் கரண்டியை எங்கேயோ எடுத்துக்கொண்டு போட்டுவிட்டு, வேறு எங்கிருந்தோ பெரிய கரண்டியொன்றை எடுத்துக்கொண்டு வந்து இங்கே போடுகிறது. ஆனால் கவிதைசொல்லிக்கு அந்தக் காக்கையை முழுக்கத் தெரிந்துகொள்ள முடிந்ததா? கவிதை வரிகள் இவை: “இந்தக் காக்கை / எனக்கு நேரே வந்தமர்ந்தால் / தெரிந்துகொள்ள முடியுமா என்னால்? / முடியும் என்பது சந்தேகந்தான் / ஏனெனில் காக்கையை யாரும் / முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.” உலகத்தை முழுக்க அறிந்துவிட முடியும், அறிவால் ஆள முடியும் என்கிற நவீன மனிதரின் நம்பிக்கைகளில் சம்மட்டியால் அடிக்கிறது கவிதை. காக்கையை முழுக்க மனிதரால் பார்க்க முடிவதில்லை என்பதற்கு அர்த்தமென்ன?
அதைப் பேசுவதற்குமுன், ’பார்வை’ என்பது முக்கியத்துவம் பெறுகிற ஞானக்கூத்தனின் ஒரு கவிதையைப் பார்ப்போம். “யார் யார் என்னை பார்க்கிறார்கள்? பார்க்கிறார்கள் என்கிற உயர்திணை முடிவு கூடத் தவறுதான் எது எவரால் பார்க்கப்படுகிறேன் என்பதே சரி” என்று தொடங்குகிறது ”பார்க்கப்படுதலன்றி வாழ்க்கை பிறிதென்ன?” என்றொரு கவிதை. கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும் கடைக்காரரிலிருந்து நாய்கள், சிறுவன், சிறுமி, பெருமாள் மாடு, பெருமாள் மாட்டுக்காரர், ஆடுகள், தபால்காரர், பன்றிக்கூட்டத்திலிருந்து காக்கை வரை பலரும் பலதும் கவிதை சொல்லியைப் பார்க்கின்றன பார்க்கிறது. தன்னை எல்லோரும் பார்ப்பதாகக் கருதுவது பிரமை போலவும் கவிதைசொல்லிக்குத் தோன்றுகிறது கடவுளைப் பதிலீடு செய்து தன்னையே இறையாகப் பாவித்துக்கொண்ட நவீன மனிதனின் ஒரு முக்கியமான அதிகாரம் செலுத்தும் புலன், கட்புலன். நோக்கல் (gaze) என்பதற்கும் இயற்கை உலகின் மேல்நிலையில், பிறவற்றின் மேல்நிலையில் இருப்பதாக மனிதர்கள் தம்மைக் கருதிக்கொண்டு செலுத்தும் அதிகாரத்துக்கும் பெரும் சம்பந்தம் உண்டு. சமயச் சொல்லாடல்களில் கிடைக்கும் கடவுள் உலகத்தைப் பார்த்தல், அதன் மூலமாக கடாட்சித்தல், அதன் ஒழுங்கைத் தீர்மானித்தல், அதை ஆளுதல் இவையெல்லாம் நவீன உலகில் கடவுளைப் பதிலீடு செய்திருக்கும் மனிதருடையதாக இருக்கின்றன. நவீனத்தின் இந்த மனித அதிகாரப் போக்குக்கு எதிராக இந்தக் கவிதை, மற்றவற்றின் மீதான மனித நோக்கல் என்பதை மாற்றிவிடுகிறது. மனிதர்கள் நோக்குபவர்கள் மட்டுமல்லர், அப்படி எண்ணிக்கொள்கிற உயர்திணை முடிவு தவறு என்று அறிவிக்கிறது கவிதை. காக்கை கவிதையில் காக்கையை முழுக்கப் பார்க்க முடிவதில்லை என்று கூறுவது, மனிதர்கள் ‘நோக்கல்’ என்பதே குறைபாடுடையது என்பதை எடுத்துக்காட்டுவது. மற்றமையை மனிதர்களால் பார்க்கக்கூட முடியாதபோது, அதைப் புரிந்துகொண்டதாகக் கருதுவது, அல்லது அதைவிட உயர்ந்ததாகத் தன்னை எண்ணிக்கொள்வது இவையெல்லாம் கற்பிதங்களன்றி வேறென்ன?
தற்கால உலகில் அறம் சார்ந்து வாழ்தல் என்பது மற்றமையை அங்கீகரித்து, மற்றமையால் அங்கீகரிக்கப்பட்டு வாழ்தல், அத்தகையதொரு வாழ்தலுக்கு நம் பங்குக்கு நாம் பொறுப்பேற்றல். இங்கே மற்றமை என்பது மனிதர்கள் மட்டுமல்லாத மற்ற உயிர்களையும் இருப்புகளையும் உள்ளடக்கிய சொல். அமனித மற்றமையோடு கூட சேர்ந்து, அவற்றைச் சமமாகக் கருதி வாழும் அறத்தை, தத்துவ அறிஞர் இமானுவல் லெவினாஸ் சொல்வது போல intersubjective responsibility-யை (மற்றமை தொடர்பான மனிதரின் பொறுப்புணர்வு) முன்வைக்கின்றன ஞானக்கூத்தன் கவிதைகள். உலகில் மனித மையத்தை மறுத்து, மற்றமையின் இருப்பை மதித்து, அங்கீகரிக்கிற பரந்த அறமே ஞானக்கூத்தனின் கவிதைகளின் இன்றியமையாத ஒரு தத்துவ அடிப்படை. எந்த மனிதனும் தத்துவவாதியாக இல்லாதபோது மகா கவிஞனாக இருக்க முடியாது என்று சாமுவேல் டைலர் கோலரிஜ் கூறியிருப்பது மனதிலாடுகிறது. ஞானக்கூத்தன் பெருங் கவிஞராகத் திகழ்வதில் அவர் கவிதைகளில் தத்துவ விசாரணைகளுக்கு, தத்துவ அடித்தளங்களுக்கு இருக்கும் பங்கைப் புரிந்துகொள்ள முயல்வது அவர் எழுத்துக்கு வாசகர்கள் செய்கிற நியாயமாகவும் நவீனக் கவிதைகளின் வாசிப்புக்கு வளம் சேர்ப்பதாகவும் இருக்கும்.
உதவிய நூல்கள் / கட்டுரைகள்
தமிழ் ஞானக்கூத்தன். ஞானக்கூத்தன் கவிதைகள். சென்னை: விருட்சம், 1998. ஞானக்கூத்தன். பென்சில் படங்கள். சென்னை: விருட்சம், 2002. ஆங்கிலம் Davy, Barbara Jane. “An Other Face of Ethics in Levinas.” Ethics & The Environment, 12(1): 2007. Taylor, Charles. Sources of the Self: The Making of the Modern Identity. Cambridge: Harvard University Press, 1989. (பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Friday, August 26, 2016

உடைமை



என் லேப்டாப்பில் அமர்கிறது
குட்டிப் பூச்சி
ஒரு கீ-யின் பாதிகூட இல்லை
L-லிருந்து O-வுக்கு
நடக்கிறதா தத்துகிறதா
அதற்காவது தெரியுமா
குந்துமணிக் கண்
முழித்துப் பார்க்கிறது
அதன் பார்வையில்
நான் பொருட்டேயில்லை
என் விரல்நுனியில்
ஒரு நொடி பட்டுத்தாவுகிறது
இந்த உலகமே
அதனுடையதாக நகர்கிறது
நான்தான்
எங்கிருந்தோ வந்து
குந்தியிருக்கிறேன்





(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

பகல்தூக்கத்திலும் என் கனவில் வருகிறீர்கள்



இரவுக்காகக் காத்திருக்காத
பாவனையன்றி
வேறொன்றும் நான் செய்வதற்கில்லை
ஒரு ஆட்டோ பிடித்தாவது
வீடுபோய்ச் சேருங்கள்
வெயில் கொளுத்துகிறது






(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன


சாட்டில் பேசிக்கொண்டே
ட்விட்டரில் தகவலைத் தேடுகிறேன்
ட்விட்டரின் தகவல் கண்ணொளிர்கிறது 
மின்மடல் இன்னும் காணோம்
மடல் வந்துவிட்டது ஆனால்
ஏன் இந்தச் சாட் ஜன்னலில்
அன்புக்குச் சில நொடிகள்
ஒளிவருடத் தாமதம்?
சாட்ட்விட்டர்மடல்சாட்ட்விட்டர்
மடல்சாட்ட்விட்டர்மடல்சாட்ட்விட்

சில விளம்பரச் சுட்டிகள்
கண்ணை மறைக்கின்றன
நடுநடுவே
திடீரென சில tabகள்
முளைக்கின்றன மலர்கின்றன
முகப்பரு கிரீம்கள் பிராக்கள்
தள்ளுபடி அழகிகள்
சின்னக் கண்சிமிட்டல்கள்

தொடும் அரவணைக்கும்
தடவும் பிடிக்குள்வைக்கும்
கைகள்
யாருக்கு வேண்டும்?
எழுத்துகள்
இடைப்புள்ளிகள்
இமோஜிகள்
ஸ்மைலிகள்
பூனைகள்
உடையும் சிதறும் படபடக்கும்
சிவப்பிதயங்கள்
இன்னுமின்னும்
என் திரை நிறையவேண்டும்
அங்கே கூடவேண்டும்
அந்த இரண்டு கைகளின்
தொழில்நுட்ப வேகம்




(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

பெயர்க் கதம்பம்


என் முகநூல் முகப்புப்படம் பார்த்திருக்கிறீர்களா
வெளிர் ரோஸ் உங்கள் பக்கம் தலை சற்றே
சாய்க்குமே அதேதான்
என் முகநூல் பெயர் பட்டுரோஜா (பட்டூஸ் என்றழைக்கும் தோழிகள் உண்டு)
ட்விட்டரில் என் பெயர்
டர்ட்டி பூட்ஸ்
கூட ஒரு கசமுசா எண்
டிவிட்டர்கொஞ்சம் ஸ்டைலிஷ்
சிலபல இமெயில்கள் உண்மை
பொய்ப் பெயர்களில் உண்டு
சிப்பி இனிப்பு என்றொரு பெயர்
எரிமலைக் கண் இன்னொன்று
ஒரு பிடித்த ரோபோ பெண் நடிகப் பெயரிலொன்று
ஆன்லைன் வங்கிக்கணக்குக்கு
ஒரு தனி அட்டுப்பெயர்
மின்சாரக்கட்டணம் தொலைபேசி நிலுவை
அதற்கெல்லாமும் அதே அட்டு

வீட்டில் என் பாட்டியின் பெயர்
வெளியில் அரை நவநாகரீகப் பெயர்
அம்மா கூப்பிட்டதொன்று
அவள் எனக்கு வைக்க நினைத்து
பெருமூச்சிட்டப் பெயரொன்று
அப்பா கூப்பிடுவதொன்று
எனக்கென நின்றுவிட்ட யாரோ வைத்த பெயர்
காதலன் நல்ல மூடில் கூப்பிடுவதொன்று
சண்டைகளில் அவன் கூப்பிடும்
பெயர்களின் வினோதங்களை
இனிதான் கடவுள் படைக்கவேண்டும்

என் மனதில் எனக்குச் சில பெயர்களுண்டு
ஏனோ அத்தனை பிடிக்கும் இஸபெல்
அதற்காகவே
சும்மா ஒரு தும்மலுக்குக்கூட
அந்த பழம் ஆஸ்பத்திரிக்குப் போவதுண்டு
சாண்டில்யன் நாவல்களில்
அத்தனைப் பெண் பெயர்களும் பிடிக்கும்
ஆனால் அதெல்லாம் எனக்கல்ல
வளைவு நெளிவு சுழிவு
பெண்ணுக்கேப் பொருந்துமவை

ஒரு முறை
திருப்பரங்குன்றத்துக் குரங்கொன்று
ஙீயுற்யுற்ஹ்
என அருகில் வந்தெனைக் கைத்தொட்டு
அழைத்தது
என் கையில் வாழைப்பழமில்லை
தேங்காயில்லை
ஒரு கட்டைப் பைகூட இல்லை
நான் அதைக் கண்டுகொள்ளாமலே
அந்த அழைப்பு
அத்தனை மென்மை
அத்தனை நிச்சயம்
அத்தனைப் பரிச்சயம்
அதன்பின் அவ்வப்போது
நான் என்னை அந்தப் பெயரால்
அழைத்துக்கொள்வதுண்டு
அதாவது
அருகில் யாருமில்லாதபோது
அதாவது
பல சமயம்









(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

குட்டி ஸ்டூல்



எங்கள் வீட்டிலும் 
ஒரு குட்டி ஸ்டூல் உண்டு
காலை வைத்துக்கொள்ள ஹாயாக இருக்கும்
காப்பித் தம்ளரை வைக்க
வாகாய் ஷூலேஸ் கட்ட
கைப்பேசி கழற்றிய பாசிமணி டிவி ரிமோட்
பவுடர் டப்பா கள்ளிப்பெட்டி எதுவும் வைப்போம்
பிள்ளையார்ச் சதுர்த்திக்கு பிள்ளையார்
பாட்டி செத்த அன்று அகல்விளக்கு
மின்பணியாளர் வந்தால் அவர்
மெயின் ஸ்விட்சுப் பெட்டிக்கு எம்ப
வீட்டுக்கு வரும் சின்னக் குழந்தை
உருட்டிக் கவிழ்த்து விளையாட
ஏன்
வீட்டிலேயே உயர ஸ்டூல்
மீது ஏறக்கூட
இந்த ஸ்டூல் வேண்டும்
அத்தனை உதவி
அத்தனை பதவிசு
ஆனால் வீட்டில்
எல்லோரும் சொல்வதோ
அந்தக் குட்டியை எடுத்தா
அந்தக் குட்டியைக் கொண்டுபோ
குட்டி ஸ்டூல்க்குக் காதில்லை
நல்ல வேளை
ஸ்டூலில் ஆண் பெண்
பேதமில்லை என்பதும்
எத்தனை ஆறுதல்




(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

என் இருப்புக்கென்ன பொருள்?



காலையிலெழுந்து மடிக்கணினியைத் திறந்தால்
நான்கு கட்டெறும்புகள் 
ஒரு டஜன் சின்னச் சிவப்பெறும்புகள்
பிள்ளையார் எறும்புகள் ஒரு மூட்டை
கலைந்தோடுகின்றன
சந்தேகமேயில்லை
பிள்ளையார் எறும்புகளின் கூட்டம்
நேற்றிரவு நடந்திருக்கிறது
கணினியின் கீபோர்ட் அடியில்
சிறப்பு அழைப்புப்
பேச்சாளர்களாகக் கட்டெறும்புகள்தாம்
இருந்திருக்கவேண்டும்
அவைதான் தலையுயர்த்தி
வெளிவருகின்றன கம்பீரமாக
எதிரிச் சிவப்பெறும்புகள்
கூட்டத்தில் கலகம் செய்ய வந்திருக்கும்
அயோக்கிய எறும்புகள் அவை
கடித்து வைக்கும் எனக்குப் பிடிக்காது
பிள்ளையார் எறும்புகள்
பாவம் அப்பாவிகள்
என் கைகளும் கால்களும்
அவற்றுக்காகவே கட்டி வைக்கப்பட்ட
நெடுஞ்சாலைகள் என்றெண்ணி
டோல் கட்டணம்கூட தராமல் ஊர்பவை
ஊர்வதைத் தவிர
வேறெதுவும் அறியாதவை
எதற்குக் கூட்டம் நடத்தியிருக்கும் இவை
என்ன தீர்மானங்கள் இயற்றியிருக்கும்
இப்போது
மண்டைக்குள் இவை
நுழைந்துவிட்டன குடைகின்றன
என்னை அழைக்கவில்லை
என் கணினிக்குள் கூட்டம் நடத்தியிருக்கிறீர்கள்
என்றால்
என் இருப்புக்கென்ன பொருள்?












(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Wednesday, April 27, 2016

ஒரு ஷூவின் கதை


இங்கே ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனியில் சறுக்கி விழுதல் என் வாடிக்கை. மாணவியாக இருந்த ஆறுவருடமும் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கவேண்டியிருந்தது. அடியில் முட்கள் வைத்த ஷூ வாங்கவேண்டுமென்கிற என் பலநாள் கனவு வேலை கிடைத்து இவ்வாரம்தான் நிறைவேறியது. எல்.எல். பீன் இணையதளத்தில் ”டோஸ்டி ஷூ” என்று விளம்பரம் செய்திருந்தான். சுளையாக நூத்துப்பத்து டாலர். இன்று காலை அணிந்த முதல் மணி நேரத்தில் என் பாதம் சுடச்சுட வெங்காய பஜ்ஜி. அலுவலகத்துக்குச் சென்றவுடன் முதல்வேலையாக ஷூவைக் கழட்டி பிய்த்துத் தின்றேன். 

மலைப்பாம்பு

 தினத்தந்தியில் அந்த மலைப்பாம்பையும் ஒரு பெண்ணையும் பற்றிப் போட்டிருந்தது. பத்தடி நீளம், முக்காலடி தாட்டி. கரும்பச்சை மஞ்சள் வளையங்கள் தோல் அலங்காரம் கொண்ட பாம்பு அது. சாதுப்பிராணியென்று அந்தப் பெண் வளர்த்து வந்தாள். சிலநாட்களாக சோர்ந்திருந்த பாம்பு இரவில் மெதுவாக ஊர்ந்து அந்தப் பெண்ணருகே அவள் படுக்கையில் நெருங்கிப் படுத்துக்கொண்டதாம். படுக்கையென்பதால் இங்கே படுத்தல் வினை. பெண் மன ஆதுரத்தோடு அதை அழைத்துக் (எடுத்துக்?) கொண்டு அதன் மிருக வைத்தியரிடம் காட்டியிருக்கிறாள். சோர்வெல்லாம் ஒன்றுமில்லை, உங்களை அளவெடுத்துக்கொண்டிருக்கிறது எப்போது திங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது என்றாராம் வைத்தியர். செய்தியைப் படித்த அன்று இரவில் படுக்கையில் படுத்தபடி பக்கத்தில் ஒருமுறை பார்த்தாள். தன்னை அளவெடுத்தால் ஒரு போடு போடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தபின் அவளுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது.

Wednesday, April 6, 2016

ஜேம்ஸ் டேட்-டின் குரங்குக்குக் கவிதையெழுதக் கற்றுத்தருவதைப் பற்றிய கவிதை பற்றிய கவிதை


ஜேம்ஸ் டேட்-டின் கவிதையில்
அந்தக் குரங்குக்கு அவர்கள் கவிதையெழுத
கற்றுக்கொடுத்தபோது
பெரிய சிக்கலொன்றும் இல்லை
குரங்கை நாற்காலியில் கட்டிப்போட்டார்கள்
ஒரு பென்சிலை அவன் கையைச் சுற்றிக் கட்டினார்கள்
(காகிதம் ஏற்கெனவே வைக்கப்பட்டுவிட்டது)
டாக்டர் புளூஸ்பைர் குரங்கின் தோளின் மேல் சாய்ந்து
அவன் காதுக்குள் கிசுகிசுத்தார்
”அங்கே அமர்ந்திருக்கையில்
கடவுளைப்போலிருக்கிறாய்
ஏன் நீ ஏதாவது எழுத முயற்சிக்கக்கூடாது?”
மன்னியுங்கள் ஜேம்ஸ் டேட்
(எனக்குத் தெரிந்த)
அந்தப் பூனைக்குட்டியை
நாற்காலியில் கட்டிப்போட்டார்கள்
மடிக் கணினியை அவள்முன் வைத்தார்கள்
நாற்காலியின் பின்னால் ஏற்கெனவே
வந்துநின்றுவிட்ட வாசகர்
அவளிடம் கோரிக்கை வைத்தார்
”அங்கே அமர்ந்திருக்கையில்
அச்சுஅசலாகச் சூனியக்காரி நீ
ஏதும் செய்வினை செய்யக்கூடாதா?”
பூனைக்குட்டி தட்டச்சு செய்யுமென்பது
உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
(James Tate, "Teaching the Ape to Write Poems")

Sunday, April 3, 2016

எழுத்து


போட்ட வட்டத்திலேயே
உங்கள் கடவுள்களையும் தூக்கிக்கொண்டு
இப்படி எத்தனை சுற்றுகள் 
ஓடப்போகிறீர்கள்?
வட்டத்தைச் சதுரமாக்குதல்
கண்கட்டிப் பாம்பாக்குதல்
எத்திக் கலைத்தல்
ஒன்றும் சுவாரசியமில்லை
வட்டத்தை வழித்தெடுத்து
சுண்டிவிரலால் ஒரு சுண்டு
சுருளாகி எட்டுகள் சுழன்று
ஆட்டம் ஆடுவோம்
பூமியை பால்வெளியை
தொட்டுத் தொட்டு

Friday, April 1, 2016

ஒரே போடு


ஒரு மனம் ப்ளீஸ்
கடனட்டைகளில்
சாம்பார் ருசியில்
மனங்களில்
மண்டையோட்டில்
ஒரு மனம் ப்ளீஸ்
(பொடிப்பொடியாகவாவது)
காலம் கடந்தும்
பிணம் (என்றால்)
பூக்களின் கெட்டவாசனை
யூகங்களின் கொடுநிழலில்
ஓடிக்கொண்டிருத்தல்
சதுரமான மனம் போலிஸ்
முழுவட்டமான மனம் தாய்மை
கோணலான மனம் நோய்
வரையறைகளுக்கு அப்பால்
சுயபெருமித மனம்
கலகம் ஒரே புனைவுச் சிக்கு
ஆயிரமாயிரம் எண்ணங்களில் மனம்
கடவுளாக சிலைத்துவிட்டது
நேர்த்திக்கடன்களைக்
கோருகிறது கவிதையிலும்
என் கைகள் சுத்தியலைத் தேடுகின்றன
ஒரே போடு

Thursday, March 31, 2016

பூவுடன் உரையாடல்


உன்னிலிருந்து நீ எப்போது வெளியேறப்போகிறாய்
நடைபாதையில் ஓர் அங்குல நீளச்செடியின்
வயலட் பூ என்னைக் கேட்டது
ஒவ்வொரு வசந்தத்திலும் இப்படி
எடக்குமடக்காக கேட்பது அதன் வழக்கம்தான்
எப்படி வெளியேறுவது என்றேன் சின்னப் பூவிடம்
எங்களைப் பார் என்றது தலையை ஆட்டி ஆட்டி
பக்கத்திலிருந்த இன்னும் குட்டிப்பூக்களெல்லாம்
என்னைப் பார்த்துச் சிரித்தன
ஒரே அவமானமாகிவிட்டது
இனிமேல்
தடுக்கிவிழுந்தாலும் சரி
அண்ணாந்து பார்த்து
நடக்கவேண்டியதுதான்.

தெளிவற்றவள்



கையிலிருக்கும் கோப்பையில்
சர்க்கரை போட்டோமா
சந்தேகம் வருகிறது
நேற்று சாலையை
சிவப்பில் கடக்கவேண்டுமா ஆரஞ்சிலா
சந்தேகம் உயிரைக் குடித்திருக்கும்
தூங்கியெழுந்தவுடன்
கைப்பேசியில்
கிழமையைத் தெரிந்துகொள்கிறேன்
அன்றாடம்
மேகம் மறைத்த சூரியன்
முழுநிலாவாகத் தோன்றி மறைகிறது
கழுத்தை நெறிக்கிறாள்
என்று கத்துகிற முதியவர்
யாரைச் சொல்கிறார்
அவரருகே நான்
எனக்கொரு
கண்ணாடி வேண்டும்
இப்போது

















(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Sunday, March 27, 2016

குளிர்க்கண்ணாடி போட்டிருந்த பூனைக்குட்டி



ஏன் குளிர்க்கண்ணாடி போட்டிருக்கிறாய்
என்று பூனைக்குட்டியிடம் நான் கேட்கவேயில்லை
ஆயிரம் ரகசியம் அதற்கு இருக்கும்
அதுவேதான் பீத்திக்கொண்டது
பாரேன் பாரேன் ரேபான் டுவெண்டி தௌசண்ட் ருபீஸ்
ஒரு பிரபல இளம் நடிகரைப் போல
என் மேசையில் புத்தகங்களை
அலேக்காக தாண்டி
இருகால்களில் நின்று
முகத்தைமட்டும் திருப்பிக்காட்டியது
கொஞ்சம் பொறாமையில்
எங்கே கிடைத்தது இருபதாயிரம்
என மெதுவாய்த்தான் கேட்டேன்
உன் விசாரணையை
உன் புருஷனிடம் வைத்துக்கொள்
என்றது நாக்கை நீட்டி அழகுகாட்டி.
எதற்கும் பாராட்டிக் கைதட்டிவைத்தேன்
எந்தப் புற்றில்
எந்தக் குளிர்க்கண்ணாடியோ

Saturday, March 26, 2016

ரில்கேயின் சிறுத்தையின் விழித்திரைக்குள் பிம்பமாய் நுழைந்து மீண்ட நாள்


என் விழிக்கெட்டிய தூரமெல்லாம்
புலனாகாத முள்வேலிகள்
வேலிகளுக்குப்
பின்னால்
அவையே இருக்கும்
முள்வேலிகளின் உலகத்தில்

சின்ன வட்டத்தை தன் நடையால்
சிறுத்தை அதன் கூண்டுக்குள்
வரைந்துகொண்டிருந்தபோது
அதன் விழித்திரைக்குள்
நோஞ்சானாக நுழைந்தேன்
அதன் இதயத்திலிருந்து
வெளியேவந்தபோது
இன்னும் மெலிந்திருந்தேன்

நளினம் ஓரடி வலிமை இணையடி
அதன் ஆட்டம்
குறைவற்றது கூண்டுக்குள்ளும்
என் கால்களோ வலுவிழந்த
வாழைத்தண்டுகள் எந்நேரமும்
தாக்குதல்களுக்கு ஒப்புக்கொடுப்பவை

எப்போதும் அமர இறைஞ்சுகின்ற என்
கால்களை வெறுக்கிறது மனம்
என் விழித்திரையோ
ஒரு பிம்பத்துக்காகக்
காத்துக்கிடக்கிறது
காடு மட்டுமே
நினைவான நிஜமான கனவான
சிறுத்தையின் பிம்பத்துக்கு
இமை திறந்துமூடும்
நொடிக்கும் குறைய
என் விழித்திரைக்குள்
அது நுழைந்து
என் இதயத்தை அதன்
குகையாக்கிக் கொள்ள.
  










(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Friday, March 25, 2016

சொற்கலவி



உருவழி விளையாட்டு
உணர்வழி உன்மத்தம்
புனையாத புனைவெளி
கண்கட்டுக் காட்டுவழி
அறியாத் திருமுகத்தின்
கண்ணிமை இரக்கம்
சொற்கலவி ஆகாசம்
அர்த்தம் வண்ணபலூன்
தொலைவானிலென்
தயங்கும் கிறுக்கும்
தாரகைத் துணுக்கு
துளி ஒளியுமிழ்ந்து
உத்வேகம் மனோவேகம்
தலை சுக்குநூறு கோடி
தரைதட்டிச் சிதறும்
தானெனும் தடாகம்
அலையலையலை
அலைநிலைகுலை
என்தேர் அதிர்ந்தால்
பிரதி என் பிரதி



















(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

கவித்துவம்


மெல்லிடைக் கோப்பையில்
மல்லிகை நிலவை
மிச்ச மதுவில்
விளிம்பு நசுங்காமல்
அலுங்காமல்
அமிழ்த்திக் கொல்லல்

Monday, March 14, 2016

அழுக்கு சாக்ஸ்


அதன் ஜோடியைக் காணோம்
டிரையர் தின்றிருக்கும்
இயந்திரத்தின் பசிக்கு வரலாறுண்டு
இல்லாவிட்டால்
காக்கா தூக்கிக்கிட்டுப் போயிருக்கும்
என்ற சொலவடையில்
தன்னிருப்பை உறுதிசெய்ய
காகம் தூக்கிக்கொண்டு போயிருக்கும்

ஒருவேளை சாக்ஸ் அணிந்த காகத்தைப் பார்த்தால்
எனக்குத் தெரிவியுங்கள்
சாக்ஸின் விவரம் சாக்ஸ்
காகத்தின் விவரம் ஒருவருக்குக் கருப்பாக
இன்னொருவருக்கு மஞ்சளாகத் தெரியும்
கண்ணைப் பொறுத்தது
ஒருவரும் இன்னொருவரும் பார்த்தால்
என் சாக்ஸைத் திருப்பிக்கொடுத்துவிட்டு
வைத்துக்கொள்ளுங்கள்
நிறம்பற்றிய உங்கள் சண்டையை.


 (பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Friday, March 11, 2016

திட்டம்


மனதைக் கொண்டு செல்ல புறாவை அனுப்புவது பழைய ஏற்பாடு காற்றோ கோஷத் துவேசமாகிவிட்டது பூக்களைக் கவிதைகளே கைவிட்டுவிட்டன மேலும் உண்மையிலேயே மனதை அனுப்பவேண்டும் சொல்லுக்கும் பொருளுக்கும் அல்லது பொருளுக்கும் உருவகத்துக்குமான இடைவெளிகளில் துரோகங்கள் ஓடோடிவந்து கைக்குட்டைகளைப் போட்டுவிடுகின்றன நாகரீக நாசூக்கு முளைக்கும்முன்பே மொட்டையடிக்கவேண்டும் ஒரு பிளேடு அதிக செலவில்லை அப்புறம் ஒரு வாசனை தடவப்பட்ட கடித உறை நடுகல்வீரனின் கையில் தலை வான்கோ செய்துபார்த்த கலை இதையெல்லாம் நிரூபிக்க ஒரு மனதை தள்ளுபடியிலாவது வாங்க வேண்டும்.
















(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Wednesday, March 9, 2016

நடை பாதை


குதித்துக் குதித்து நடந்த
நான்காம் பிறை நிலவு
நின்றது
தொடர்ந்த
நானும் நின்றேன்
இது ஒன்றும் புதிதல்ல
கையாட்டிய நத்தை,
தன்னோடு உரையாடியபடி
உருண்டுகொண்டிருந்த
எண்ணெய் டின்,
ஒரு நாள்
காணாத தெய்வத்தின் கொலுசொலி,
பின்னால் போனதெல்லாம் 
இப்படித்தான்
திரும்பிவந்துவிடுவேன்
முணுமுணுத்தபடி
"
என் கால்
என் நடை
என் சதுரம்."



(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

(தனித்) துவம்


பூங்கொத்து புது நூல்கள்
அவ்வப்போது
பீர் அருந்தியபடி தடவுதல்
அவ்வப்போது
வாட்ஸ் அப் (மொக்கை)
எப்போதும்
இவையா
நம் கதைத் தருணங்கள் 
சாகசக் கப்பல் பயணம் மேற்கொள்வோம்
கப்பல் மூழ்கி கதறலோடு
தரையில் பவளப்பாறைகளைத்
தட்டுவோம் அங்கோர்
அரண்மனை நமக்காகத் திறக்கும்
அதில் ஒரு பூதம் (தமிழ்ப்படங்கள் அதற்குப் பிடிக்கும்)
சிறையில் கொடுந்துயரில் நம்மைத் தள்ளும்
அதை நான் (எப்படியோ) கொன்று
உன்னை முதுகில் சுமந்து விரைவேன்
ஆம் மேலே மேலே
திமிங்கிலம் வழிகாட்ட கடற்குதிரைகள் பாட
அலைகளின் ஆலோலத்தில்
ஆம் நீந்தி நீந்தி
கரையல்லாத கரை சேர்வோம்
நம்மைப் போலிருவர்
நம்மைக் கண்டு
அதே கப்பல் அதே பூதத்தோடு 
அதே சாகசம் செய்யும்வரை



(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)