(இது விமரிசனம் அல்ல)
7. படம் இனவரைவியலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதும் நவீனத்தின் பிம்பங்களோடு தன்னைத் தொடர்ந்து இணைத்தபடியிருப்பதும் குறிப்பிடப்படவேண்டியவை. சிலபல தமிழ் எழுத்தாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பருத்திவீரன் எனக்குப் பிடிக்கவில்லை. காரணம், இனவரைவியல் எனும் காட்சிப்பரப்பில் அது கட்டியெழுப்பும் லிங்கமைய (phallocentric) மதிப்பீடுகள். பருத்திவீரன் என்கிற பெயரே லிங்கமையச்சார்போடு நிலப்பிரபுத்துவ வாசனை வீசுகிறது. படத்தின் கடைசியில், லிங்கமையங்கள் கதைப்பரப்பிலிருந்து எழும்பி நிஜலிங்கங்களாகி பெண் புண்டையை வன்புணர்த்தி ரத்தம் தெறிப்பது கொடுமை. அந்தக் கொடுமையை மறந்துவிட்டு நம் படத்துக்கு வரலாம். பாட்டொன்றில் கல்லூரியில் தோற்றுப்போகும் வாலிபனாக, ஆட்டோ நிறுத்தத்தில் பங்க்சர் ஒட்டுபவராக வரும் தொந்தி கணபதி நடிகர் ஊர்வலத்தில் நீரில் மூழ்குகிறார். பங்க்சர் கணபதி மூழ்கும்போது நீருக்கு மேல் குவிகிற அவரது கரங்கள்மூலம் வலதுசாரி கணபதி ஊர்வலங்களுக்கு ஜாலியாக உரையெழுதப்படுகிறது. இன்னும் சில காட்சிகளில் சாராயக்கடைக்கு மேல் அமர்ந்து சிவன் நிஜமாகவே அருளாசி வழங்குகிறார். அனுமான் வேடமிட்டவர் குளிர்கண்ணாடியோடு நீலவண்ணத்தில் காட்சியில் இயைகிறார் (என் குட்டிச்சீதை கவிதைவரிகள் நினைவுக்கு வருகின்றன: http://innapira.blogspot.com/2008/06/blog-post_29.html)
8. Life is fart. படத்தின் தொடக்கத்தில் வாழ்க்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையான நான்கு குசு என்று விவரிக்கப்படுகிறது. படமுடிவில், (ஜெயகாந்தனின்?) வாழைப்பழச்சாமி அனுமான் வேடத்தில் நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று பாடி வருகிறார். மண் வனைத்த பானையாக காற்றுகொண்ட வெற்றிடமாக நம் உடல்கள் சுட்டப்படுகின்றன. உடல் பற்றிய தொடர்ந்த வலியுறுத்தல் செய்கிற கதையாடலில் இந்த வெற்றிடத்துக்கு அர்த்தம் தருவது வேகம் வேகம் வேகம் மட்டுமே. (நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளில், ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையில், வாழ்க்கையெனும் போட்டியின் வேகம் அருமையாக இணைகிறது பாடல்களில்.)
8 (ஆ). என் தலைப்பின் பிரகாரம் எட்டுக்கு மேல் எழுதக்கூடாது. என்றாலும் தொடர்கிறேன். சிலகுறைகள் இல்லாமல் இல்லை. ராணியின் கதாபாத்திரத்துக்கு டப்பிங் குரல் பொருந்தவேயில்லை. கேட்டுப் புளித்துபோன elite வகைமாதிரிக் குரல் அது. தொந்தரவு செய்தது. இரண்டாவது, சேட்களையும் அய்யங்கார்களையும் காட்டியிருக்கிறவிதம். வடசென்னையில் எனக்குத் தெரிந்த எல்லா சேட்களும் இட்லி சாப்பிட்டுக்கொண்டு தமிழ் நன்றாகப் பேசுகிறார்கள். பிராமணர்களைப் பொறுத்தவரை--பிராமண உடலை எல்லாம்வல்ல இறை உடலாக அல்லது வல்லமை மிக்க சத்திரிய உடலாக விதந்தோதும் ஷங்கர், கமல் தருவது அருவெறுப்பு என்றால், இப்படத்தில் வருவது போல வேகம் பிடிக்காத தயிர்சாதமாக பிராமணர்கள் காட்டப்படுவது அவர்களைப்பற்றிய சமகாலப் புரிதல் அற்ற போக்கு. ஓரிரு சண்டை, ஒன்றிரண்டு குத்தாட்டம் போல, சூப்பில் ஆங்காங்கே மிளகையும் உப்பையும் தெறிப்பதுபோல இப்படியான 'சரித்தன்மையோடான' அடையாள அரசியலும் இறைக்கப்படவேண்டும் போல.
கருத்தரங்கு ஒன்றுக்காக சென்ற வாரம் மான்செஸ்டர் சென்று திரும்புகையில் ஏர் கத்தார் புண்ணியத்தில் ஓரம் போ- வைப் பார்த்தேன். என் அருகே அமர்ந்திருந்த, இதே படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பதின்மவயதுக் குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். தீம் பாடலில் ப்ளேஸ்-ன் குரல் கேட்டவுடனேயே எங்கள் கால்கள் தாளம்போட ஆரம்பித்தன. எப்பேர்ப்பட்ட பாடகர் அவர். ஊருக்கு வந்தவுடன் இப்படத்தைப் பற்றிச் சிலநண்பர்களிடம் கேட்டேன். யாருமே இதைப் பார்த்திருக்கவில்லை என்று தெரிந்ததும் ஆச்சரியமும் விசனமும் ஒருங்கே வந்தன. மீண்டும் இப்படத்தைப் பார்க்கவேண்டும். படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்.
7 comments:
போரடிக்குது, ஏதோ படம் பாக்கணும் என்று தோன்றி, போய் பார்த்துவிட்டு அத்துடன் மறந்து விட்ட படத்தில், இத்தனை விஷயம் இருக்கிறதா என்று ஆச்சர்யம் தோன்றியது உங்கள் இடுகைகளைப் படித்ததும்.
bloggable அம்சம் இருக்கிற படம் என்றால், படத்தில் எல்லாரும் புதியவர்களாக இருக்க வேண்டும், செபியா டோனில் சில காட்சிகள், 'யதார்த்தமான பாடல்கள் [ முரண்தொடை :-)], 'அபாரமான ஒளிப்பதிவு ( என்னதது?), நல்ல / அல்ல படம் என்று கட்சி கட்டிக் கொண்டு விவாதம் செய்கிற ஸ்கோப்' எல்லாம் இருக்கவேண்டும் என்று எங்களைக் கெடுத்து வெச்சிருக்கும் மாடேர்ன் இயக்குனர்களைத் தான் குத்தஞ்சொல்ல வேண்டும்.:-)
எது எப்படியோ, பார்த்ததுமே பிடித்துப் போன படம். இன்னொருமுறை பார்க்கலாம் என்று நினைப்பதற்குள் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது.
இந்த இவ்விரு இடுகைகளுக்கும் நன்றி!
நன்றி பிரகாஷ். இப்படத்தைப் பார்த்த வெகுசிலர் உங்களைப்போல இன்னொரு முறை பார்க்க நினைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் பல நண்பர்கள் பார்க்கவே இல்லை. வருத்தம்தான்.
என் பதிவைப் படித்தபின் சில நண்பர்கள் தொலைபேசினார்கள். மீண்டும் பதிவில் வார்த்தைப் பிரயோகம் பற்றிய ஒரு பதிவு அரங்கேறும்.
//பிராமணர்களைப் பொறுத்தவரை--பிராமண உடலை எல்லாம்வல்ல இறை உடலாக அல்லது வல்லமை மிக்க சத்திரிய உடலாக விதந்தோதும் ஷங்கர், கமல் தருவது அருவெறுப்பு என்றால், இப்படத்தில் வருவது போல வேகம் பிடிக்காத தயிர்சாதமாக பிராமணர்கள் காட்டப்படுவது அவர்களைப்பற்றிய சமகாலப் புரிதல் அற்ற போக்கு.//
நுட்பமான பார்வை. அடையாள அரசியலற்ற ஒரு எழுத்துமுறை முன்பே நான் சொன்னதுபோல. பயிலவேண்டிய ஒரு நடைதான் என்றாலும்... இந்த எழுத்திலும் அடையாளம் இல்லை என்று அறுதியிடமுடியுமா? தெரியவில்லை.
மற்றபடி உங்கள் படம் பார்ப்பதற்கான மையமற்ற வாசிப்பு முறை அருமையாக உள்ளது. இப்படம் நானும் பார்க்கவில்லை. என்றாலும், உங்கள் பார்வையை ஒட்டி அப்படத்தை தேடித்தான் பார்க்க வேண்டும்.
படம் பற்றியதைவிட இந்த எழுத்தின் வசீகரம் கவர்ச்சியாக உள்ளது.
//மீண்டும் பதிவில் வார்த்தைப் பிரயோகம் பற்றிய ஒரு பதிவு அரங்கேறும்.//
எங்க? சொல்லவேயில்ல?
நன்றி
//இந்த எழுத்திலும் அடையாளம் இல்லை என்று அறுதியிடமுடியுமா? தெரியவில்லை.//
ஜமாலன், எல்லா எழுத்திலும் அடையாளம் தேடித்தான் ஆகவேண்டுமா என்ன? அடையாளம் வாசிப்பில் உறுத்தினால் சொல்லலாம்.
//மற்றபடி உங்கள் படம் பார்ப்பதற்கான மையமற்ற வாசிப்பு முறை அருமையாக உள்ளது.//
நன்றி ஐயா. பாராட்டு தரும் உத்சாகமே அலாதிதான்.
//எங்க? சொல்லவேயில்ல?//
சீக்கிரம் சிறுபதிவு அதுபற்றி வரும்.
நன்றி பாஸ்டன் பாலா. பாஸ்டனின் மும்மாரி மழை பெய்கிறதா?
Post a Comment