Saturday, July 19, 2008

கடிதங்கள்

நண்பர் கார்த்திக் எழுதியது:

July 7, 2008

"பெயர் தரும் தேவி". நல்ல அங்கதம் :)
உங்கள் இரு கவிதைகளை (என்ன பருவம் இது, அவா) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். "என்ன பருவம் இது" invocative ஆகவுள்ளது. (பிரபு என்ன கொடுமை சரவணா என்பது போல சொல்லிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை). "கேசவா" யாரோலோ ஏற்கெனவே எழுதப்பட்ட மாதிரி படித்துவிட்ட மாதிரி உள்ளது.

E.E. Cummings மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் கடைசி வரி கம்பீரமாக. ("மன்னியுங்கள் எங்களை, வாழ்வே, மரணத்தின் பாவமே.")
"அண்டசராசரம்" மிக அடர்த்தியாகவும் கச்சிதமாகவும். திரும்பத் திரும்ப அதைப் படித்தேன். எந்தக்காரணத்தினாலோ பிரமிளை நினைவுபடுத்தியது.

"அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது."
இதை அப்படியே உணர்ந்தேன்.....சமீபத்தில். நம்பிக்கையின்மை, ஏமாற்றம் குறித்த பயம், சந்தேகம். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்து வேரூன்றியிருப்பது தன்னை உள்குவித்த சுயத்தில் அல்லவா?
Kate Chopin-ன் "The Awakening" வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கும் நடுவில் நிறைய எழுதுகிறீர்கள். நல்லது.

June 26, 2008

உங்கள் சமீபத்திய கவிதைகள் intense ஆக இருக்கின்றன. சொற்கள் புடைத்து உடைபட்டு எப்படி பருத்தி வெடிக்கிறதோ அதைப்போல.

"மெகாசீரியல் காட்சியில்
வருத்தம் தோய்ந்த
ஒரு கணவன்
உருண்டுபடுக்கக்
கற்றுத்தந்தான்
இப்படி இப்படி"
Could not stop smiling after reading this. It is a kind of teasingly funny.

கார்த்திக்

*****

அன்பின் கார்த்திக்,

முதலில் ஒரு விஷயம்: நண்பர்களைக் கலாய்த்த பதிவை நீக்கி விட்டேன். என்னுடைய "Statcounter" தந்த விவரப்படி, குறிப்பிட்ட அந்தப்பதிவுக்கு நிறைய வருகைகள் இருந்தன. பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் சட்டென்று கூடியிருந்தது. கொஞ்சம் வருத்தம் கொள்ளச்செய்த தனி உரையாடலும் நிகழ்ந்தது. என் பதிவை இலக்கிய, தத்துவப் பிரதிகளின் வாசிப்புக்காகவும் விசாரணைகளுக்காகவும் கவிதைகளைப் பகிரவுமே தொடங்கினேன். இந்த நோக்கத்திலிருந்து என்னைப் பிறழவைக்கும் அபாயம் அந்தப் பதிவின் பிரதியில் இருந்தது என்று உணர்ந்து விலக்கிக்கொண்டேன்.

"என்ன பருவம் இது": பிரபுவைப் போலத்தான் சொல்ல வேண்டும். சரிதான். "அவா"-வை கவிஞர் ரிஷி ஏற்கெனவே மொழிபெயர்த்திருக்கிறார். "கேசவா" எளிமையான கவிதை. ஏற்கெனவே படித்ததுபோல் தோன்றியதில் அதிசயமில்லை.

"அண்டசராசரம்" எனக்கும் பிடித்த கவிதை. ஆனால், பிரமிள் ஏன் உங்கள் நினைவுக்கு வந்தார் என்று புரியவில்லை. என் கவிதைமொழி பிரமிளிடமிருந்து மிகவும் மாறுபட்டது என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி. என்னையும் பிரமிள் பெரிய அளவில் பாதித்ததில்லை. ஏன் என்று பின்னர் ஒரு பதிவில் எழுதுகிறேன்.

"அவநம்பிக்கையின் கல்" பற்றி இன்னொரு நண்பரும் பேசிக்கொண்டிருந்தார். கல் வெளியிலிருந்தும் எறியப்படலாம், நமக்குள்ளிருந்துதான் என்றில்லை. மேலும் சுயமும் தன்னிலையும் பிறரால் பிறவற்றால் கட்டப்படுவதும் சுட்டப்படுவதும் தானே. நாம் கழிவிரக்கப்படத் தேவையில்லை சில சமயங்களில் என்றே சொல்லுவேன்.

கேட் சோபின் அமெரிக்கப் பெண்ணிய எழுத்தாளர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இனிமேல்தான் வாசிக்கவேண்டும். நீங்கள் வாசித்துவிட்டு எழுதுங்கள்.
பெருந்தேவி

No comments: