இத்தனை எஸ்எம்எஸ்களை
மிக நிதானமாக
ஒன்றன் பின் ஒன்றாக
ஆடைகள் அவிழ்ப்பதைப்போல
அழிக்கிறாள்
மறைகின்றன அவை
போதைகளால் நடனமாகவே
உருவானவள்
நிறங்களோடியபடியிருக்கின்ற
வண்ணமேடையோரமாய்
நகர்ந்துமறைந்ததைப் போல.
ஒரு கோப்பை காபுசினோவையோ
சிறிய மிராண்டாவையோ
நீட்டிய ஒருவனின் அந்நிய விழிகளில்
அவள் அகம்
வெட்டுப்பட்ட குட்டியுடலின்
காத்திருந்த
ரத்தம் சோர்கிறது
துடித்து வாரியணைக்க
தன்னுரிமையை யோசிக்கும் முன்னமே
அவன்முன்
வேறு நிர்வாணத்துக்கான ஒப்பனைகளோடு
நிற்கிறாள் அவள்
பாடலாய் செவிகள்கொள்கின்றன
அலறுதல்கள்.
'ஸிம் கார்டுகளை கழிவறைக்கிண்ணத்துக்குள்
தொலையவிடுங்கள்.
செல்போனை யோனிக்குள்
அலையவிடுங்கள்'
கரகோஷங்களுக்கிடையில்
சிக்குப்பிடித்தது அவள்
அகம் என்று
வேறொருவன் கத்துகிறான்.
கண்டறிந்தது அவன் மனமா கரமா
தன் முடிக்கற்றையை அவன் மூக்குத்துளைக்குள்
நுழைக்கிறாள் அவள்.
அவன் தும்மலை
ஆதிக்கக் கருத்தியல் என்று
நகையாடுகிறாள்.
கூட்டமும் சிரித்தலறுகிறது.
தொலையாத உன் செல்போனுடன்
எத்தனை தொலைவுதான் செல்வாய்
துடித்தல் மேலும் அவனதாய் கேட்கிறான்
கொஞ்சம் முன் அவளுக்கு
மிராண்டா கொடுத்தவன்
அல்லது காபுசினோ கொடுத்தவன்.
வெறுத்து அவன் கேள்வியை
ஒறுக்கிறாள்
ஒரு சீமாட்டியைப்போல
நூறு ரூபாயொன்றை நீட்டி
அவனை ஓடிப்போகச்சொல்கிறாள்.
உன்னை நீயே புணர்ந்துகொள்
என்பது ஏன்
அவள் சொல்ல கெட்டவார்த்தைகளாகக்
கேட்கவில்லை?
பின்னும் வினவுகிறான்.
வேறென்ன,
அவளை அவன் காதலித்திருக்க வேண்டும்.
பௌர்ணமி
அறைகளுக்கு வெளியே
இன்னமும் மிச்சமிருக்கிறது.
வராத வந்துவிட்டிருந்த
எஸ்எம்எஸ்களுக்காக
அவள் தன்னை
மன்னித்துத்தான் தீர வேண்டும்.
வராத வந்துவிட்டிராத
அவள் கண்
நீர்த்துளிகளுக்காக
அவனும் காத்துக்கொண்டுதான்.
வரப்போகுமா?
தளத்தின் வேறொரு மூலையில்
வெயிட்டர்கள்
காத்திருக்கும் வேளையில் அணிந்துபார்க்கும்
கோமாளிக்குல்லாவின் குஞ்சலம்
ஒருவேளை ஒருவேளை
என்றே ஆடியசைகிறது.
(இக்கடல் இச்சுவை தொகுதியிலிருந்து)
2 comments:
நன்றாகவிருக்கிறது.
கொஞ்சம் சுருக்கியிருந்தால் -இன்னும்-நன்றாக இருந்திருக்குமோ போலவும் தோன்றுகிறது.
நன்றி டிசே தமிழன். இக்கவிதையை எழுதிமுடித்துவிட்டு வாசித்தபோது எனக்கும் அப்படி தோன்றியது. சில வரிகளை எடிட் செய்து பார்த்தேன். வார்த்தைகளின் சிக்கனத்தை அடையமுடிந்தது, ஆனால் முந்தைய வடிவம் தந்த உலகமயமாக்கப்பட்ட உலகத்தின் அக-புற அர்த்தம் கலைந்த ‘அலைச்சல்' உணர்வு....அது miss ஆகியிருந்தது. எனவே முதலில் எழுதியவாறே விட்டுவிட்டேன். இதுதான் இக் கவிதையின் கதை.
Post a Comment