Friday, July 18, 2008

கடலும் கைப்பை அளவும்

உன் விழிகள்
காண்புலனின் வெறும் கொள்கலமல்ல
முத்துக்களின் பொக்கிஷமே
என்றறிவேன்.
என்னிடம் உருண்டோடி வந்த
இரண்டு முத்துக்களை
வேறு பெண்களுக்குச்
செய்த துரோகங்கள்
என மறுத்து
மீட்டெடுத்துக்கொண்டாய்.
துரதிர்ஷ்டக் காற்றின் இரவென்றால்
திறம்பெற்ற மூழ்குபவருக்கும்
முத்து கிடைப்பதில்லை.
கடல் அதற்குப்
பொறுப்பெடுப்பதில்லை ஒருபோதும்.
தங்கள்
கைப்பைகளில்
கடல்களையே அள்ளிவந்துவிடுகிறார்கள்
சில பெண்கள்.(அவர்கள் கைப்பைகளில்
மணல்திவலைகள் வேறெப்படி வந்ததாம்)
கடல் அதற்கும்
கோபப்படுவதில்லை ஒருபோதும்.
கடலிடமிருந்து நீ கற்க இருக்கின்றன
ஓராயிரம்
பொறுப்பின்மையும் பொறுமையும்.
இப்பெண்களிடமிருந்து
நான் பெற்றுக்கொள்ள இருக்கின்றன
ஓராயிரம் பேராசைகள்.

No comments: