வெள்ளிக்கிழமையின் காற்பகுதியையும்
திங்கட்கிழமையின் தலைப்பகுதியையும்
அலுவலகத்திலிருந்து வெட்டி
ஒரு வாரவிடுமுறைச் சாற்றில் இட்டு
(உன் துணைவர் நச்சரிக்காதவர் என்றால் மட்டுமே)
தொடர்ப் பகற்கனாவில்
அதை அடுப்பில் வைத்து
(கடிகாரம் பார்க்காதிருப்பது முக்கியம்)
விண்மீன்கள்
ஒன்றிரண்டையும்
(நீ தனித்துக் காணப்போகிறவை)
ஒரு நாவலின் சில பக்கங்களையும்
(ரமணிசந்திரனுடையது அல்ல)
பொடித்துத் தூவி
கொதிக்கையில்
(இப்படியும் அப்படியும்
அறையில் உலாவும் நீ
இதை அதை
ஒழுங்குபடுத்தாதே
இந்நேரம்)
கொஞ்சம்
தாளிப்பைச் சேர்த்து
(இது உன் இஷ்டம்,
ஒன்று மட்டும்,
கவிதை பகுதிநேரமாய்
எழுதிச்சேர்த்தல்
ஆரோக்கியக்கேடு)
பதனமாய்
இறக்கி வைக்கும்வரை
(கவனம் இணையத்தைப்
பார்த்தால் சுவை மாறிவிடும்)
உன் மேல்
தயவுசெய்து
சற்றே தள்ளியிருக்கும்
பிள்ளைகள்
(சுறுசுறுப்பானவார்களா?
ஆம் என்றால்)
சிரிப்புக் கொத்துமல்லிகளை
கிள்ளிப் போட்டதும், அதை
வரும் மாதங்களுக்காக
குளிர்ச்சாதனப்பெட்டியில்
(இப்போது கருவளையங்கள்
நீங்கிவிட்ட உன்
கண்களாகவும் இருக்கலாம்)
பத்திரப்படுத்தியபின்
பகிர்ந்து கொள்
மீதியை யாருடனும்.
14 comments:
படிக்க எளிமையான இந்த குறிப்பு செய்யக்கடினமோ?? :)
என்ன கொடுமைங்க இது :)
கயல்விழி, மனமிருந்தால் மார்க்கமுண்டு, கேள்விப்பட்டிருப்பீர்களே...
ஏன் அய்யனார், ஆண்களுக்கு வேறு சமையல் குறிப்பை எழுதுகிறேன் பின்னர்.
இந்தப் பதிவை புரிந்து கொண்டு கருத்து கூறும் அளவுக்கு எனக்கு விஷயம் போதாது. ஆனால் உங்கள் பதிவில் 'இலைமறை காய்மறையாக'க் காட்டப்படும் பின்னூட்டுபவர்களின் பெயர்களை சரிசெய்ய நானும் ஒரு சமையல் குறிப்பு எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் சமைத்துப் பார்க்கலாம்.
ஒரு பின்னூட்டம் கவிதைபற்றி இல்லாததாக நான் கருதுவதால் நீக்கப்படுகிறது.
வாய்ஸ் ஆன் விங்ஸ், இது கிண்டலா, இல்லை நான் நிஜமாகவே முயற்சிக்கலாமா? நான் பதிவின் டெம்ப்ளேட்-டை மாற்றப்போக, பின்னூட்டம் இடுபவர்கள் பெயர்கள் தென்படாமல் போய்விட்டன. “பிளாக்கர் சொன்னது” என்று மட்டுமே இப்போது வருகிறது.
பெருந்தேவி, வேறு சிலரின் பதிவைப் போல் உங்கள் பதிவிலும் பின்னூட்டுபவரின் பெயரில்லாமல் 'said...' என்று வருவதைத்தான் 'இலைமறை காய்மறை' என்று குறிப்பிட்டிருந்தேன் (அது கிண்டல் போல் உங்களுக்குத் தோன்றியிருந்தால் என்னை மன்னிக்கவும்). அதற்கான காரணமும் கண்டு, தீர்வையும் எனது இடுகையில் சொல்லியிருக்கிறேன். விரும்பினால் நீங்கள் அந்த செய்முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.
பி.கு. - கவிதையைப் பற்றி இல்லாதிருந்தும் எனது பின்னூட்டத்தை நீக்காததற்கு நன்றி :)
மிக்க நன்றி வாய்ஸ் ஆப் விங்ஸ். ”சமையல் குறிப்பு” என்று நீங்கள் எழுதியிருந்ததால் கிண்டலோ என்று தோன்றியது. என் சமையல் குறிப்பைப் போல அதுவும் இருந்து நான் செய்ய முயற்சித்தால் எப்படி இருக்கும்? பின்னர்தான், உங்கள் இடுகையைப் படித்தேன். பயனுள்ளதாக இருந்தது. அதைப் பின்பற்றி சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
இப்போது யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலை டெம்ப்ளேட் மாற்றியதில் வரவில்லை, தமிழ்மணப் பட்டையை இணைத்ததில் தான். சரி, இதற்கும் உங்கள் இடுகையில் சொல்லியிருப்பது உதவும்தானே.
வணக்கம். எனது பதிவில் உங்கள் பின்னூட்டத்தை கண்டேன். இப்போது எனக்குத் தோன்றும் ஒரே வழி, உங்கள் template கோப்பை (அதாவது, 'download full template' என்பதைச் சொடுக்கினால் கிடைக்கும் கோப்பை) எனக்கு மின்னஞ்சல் செய்தீர்களென்றால் (முகவரி என் profileஇல் உள்ளது), அதை என்னால் மாற்றித் திருப்பி அனுப்ப இயலும்.
ஆமாம், தமிழ்மணம் பட்டையை இணைக்கும் பக்கத்தில் பிழை உள்ளது. ஆதன் காரணமாகவே உங்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வாய்ஸ், ரொம்ப தேங்க்ஸ். :)
அனுப்பியிருக்கிறேன் டெம்ப்ளேட்டை இப்போது. யூனிகோட் நிரலை கயல்விழி உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியபடி சரிசெய்தும் பெயர்கள் தெரியவில்லை. அதனாலேயே வல்லுனராகிய உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நன்றி.
பெருந்தேவி, எளிய சமையல் குறிப்பு என்னும் தலைப்பில் ஆரம்பித்து எள்ளல் கவிதை முழுதும் துள்ளி விளையாடுகிறது.
"உன் துணைவர் நச்சரிக்காதவர் என்றால் மட்டுமே"
-எதற்கு நச்சரிக்காதவர் என யோசித்தால் பல விசயங்கள் மனதில் வருகின்றன, உடலுறவுக்கு என யோசிக்கையில் என்னையும் அறியாமல் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை இருந்ததை உணர்ந்தேன்.:)
"ரமணிசந்திரனுடையது அல்ல" :)
"கவிதை பகுதிநேரமாய்
எழுதிச்சேர்த்தல்
ஆரோக்கியக்கேடு":)
- உங்கள் கவிதை படிக்கையில் உங்களின் கவிதைக்கான(முழுநேர ) உழைப்பை உணர்கிறேன். உங்கள் கவிதையை பகுதிநேரமாய் படித்து புரிந்துகொள்ளக் கூட முடியாது. முழுநேர உழைப்பைக் கோரும் கவிஞை{பெண்பால் சரியா?:)}, கவிதை.
-இவ்வளவு பக்குவமாய் சமைத்த மனநிலையை(mood?)\நேரத்தை யாருடன் பகிர்ந்து கொள்வீர்கள்? அந்த நச்சரிக்காத கணவனுடனா? :)
கோநா, கவிஞர் என்றே சொல்லலாம், கவிஞை/கவிதாயினி/பெண் கவிஞர் இந்த அடையாளங்கள் எனக்கு அவ்வளவு உவப்பானதல்ல.
உண்மையிலேயே, இந்த மனநிலை பக்குவமாக அமையக்கிடைத்தால், இந்தப்பிரபஞ்சத்தோடு கலந்திருப்போமோ என்னவோ, அப்படியொரு நிலையில் வேறொரு மனித இணை இல்லாவிட்டாலும் மகிழ்ச்சி குறைபடாது என்றே நினைக்கிறேன்.
கோநா, நச்சரிப்பு பாலுறவுக்காக வேண்டி மட்டுமில்லை. நம் ஊர்களில், பெரும்பாலான ஆண்களுக்கு தண்ணீர் குடிக்க கொண்டுவருவதிலிருந்து தலைவார சீப்பு எடுத்துத்தருவது வரைக்கும் அம்மாவோ/மனைவியோ/பெண்ணோ வேண்டும். Highly dependent beings.
Post a Comment