Tuesday, July 22, 2008

காத்திருந்தவள்

இச்செடி துளிர்க்கும்போது
வந்தாள் அவள் மொட்டரும்பி
அவிழ்ந்து
பூக்கள் கண்ணை நிறைத்து
உதிரவும்
தொடங்கிவிட்டன
காத்திருந்ததன் அடையாளமாக
இனி இங்கேயே நிற்கும் செடி.
துரோகத்தின் அடையாளமாக
ஒரு பூச்சருகை மட்டும்
எடுத்தவள்
தன் பெட்டிக்குள்ளே
போகிறாள்.

1 comment:

கோநா said...

பெருந்தேவி, இக்கவிதையை

"இச்செடி துளிர்க்கும்போது
வந்தாள் அவள்\
மொட்டரும்பி அவிழ்ந்து பூக்கள் கண்ணை நிறைத்து\
உதிரவும் தொடங்கிவிட்டன\
காத்திருந்ததன் அடையாளமாக
இனி இங்கேயே நிற்கும் செடி..."

-என வாசிக்க, புறவயமாக கல்லறை அருகே உள்ள ஒரு செடி துளிர்த்து, பூத்து, உதிரும் வரை அப்பெண் காத்திருந்ததாக கருதலாம்.

"இச்செடி துளிர்க்கும்போது வந்தாள்\
அவள் மொட்டரும்பி அவிழ்ந்து\ பூக்கள் கண்ணை நிறைத்து\
உதிரவும் தொடங்கிவிட்டன\
காத்திருந்ததன் அடையாளமாக
இனி இங்கேயே நிற்கும் செடி..."

என வாசிக்க அப்பெண் மலர்ந்து, பூக்கள் கண்ணை நிறைத்து(வயதாகி, கண்ணில் கேட்ராக்ட் வந்து) இறக்கும் வரை என வாழ்நாள் முழுதும் காத்திருந்து இறந்ததாகவும் கருதலாம்.
மேலும் செடி என்பது அப்பெண்ணின் அகவயமான உருவகமாகவும் விரிந்து கற்பனையின் சாத்தியங்களை அதிகரிக்கிறது.
துரோகம் என்ன, யார் யாருக்கு செய்தது? அப்பெண் துரோகத்துக்கு ஆளானவளாகவும் அல்லது நேரெதிராக துரோகம் செய்துவிட்டு யாருடைய மன்னிப்புக்காகவேணும் காத்திருந்து இறந்தவளாகவும்,
மேலும் இன்னொருவர் காதலன், நண்பன்,கணவன்,தோழி,அம்மா,
அப்பா,... என எல்லா சாத்தியமான உறவுகளுக்கும்,எல்லா சாத்தியமான துரோகங்களுக்கும் கவிதை பொருந்தி விரிந்துகொண்டே போகிறது.