Saturday, July 19, 2008

சுருட்டை முடிக்கற்றைகளோடான

அந்தக் குழந்தைக்கு
இருவயது இருக்கலாம்
முதல் மொட்டை அடிக்கவில்லையாம்
மடியில் வைத்துக்கொண்டு
முடிவளையங்களில்
விரலை
விட்டுவிட்டு அலைந்தவர்
அசப்பில் சிவன் வேஷம் போட்ட
சிவகுமார் மாதிரியே இருந்தார்
ஏனோ எனக்கு
யானைமுடி மோதிரம்
நினைவில் வந்தது
எல்லாமறிந்த குழந்தையின் தாய்
ஓடோடி வந்து
குழந்தையை
வாரி எடுத்துச் சென்றுவிட்டாள்.

4 comments:

கோநா said...

பெருந்தேவி,
கடைசி இரண்டு வரிகளில் உள்ள தாயின் பதட்டம், முதலில் படிக்கையில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அதிர்வுகளை எழுப்பியது, ஆனால் அதற்கு ஆதாரம் மற்ற வரிகளில் எவ்வளவு யோசித்தும் கிடைக்கவில்லை.
எனவே அதை ஒதுக்கிவிட்டு இவ்வரிகளுடன் ஒருவாரமாக ஜல்லியடித்ததில் :) இது சிவன், பார்வதி, விநாயகன் புராணக்கதையை எள்ளலுடன் மாற்றி சொல்வது போல் உள்ளது. சிவன் விநாயகர் தலையை வெட்டவிடாமல் எல்லாமறிந்த பார்வதி தாய்ப்பாசத்துடன் தடுத்துவிடுவதாக.
இதில் நுண்மையாக குழந்தையின் தந்தையே அதன் தலையை வெட்டி விடுவதான புராணக் கதையின் முட்டாள்தனத்தைத் தவிர்த்து அவரை மூன்றாவது மனிதனாக கவிதைசொல்லி ஆக்கியுள்ளதாக என் வாசிப்பில் படுகிறது.
வேறுவிதமாக தாங்கள் எழுதியிருந்தால் சொல்லவும்,எனது வாசிப்பை விரிவுபடுத்த உதவும். நன்றி.

Perundevi said...

கோநா, சிவன் தான், ஆனால் சிறுத்தொண்டர் வீட்டுக்கு வந்து பிள்ளைக்கறி கேட்டவர். இக்கவிதைக்கு இன்னொரு சின்ன சுவாரசியமான பின்னணி இருக்கிறது. நண்பர் தேவிபாரதி சிவகுமார் முருகன் வேஷம் தான் போட்டிருக்கிறார், சிவன் வேஷமே போட்டதில்லை என்று என்னிடம் சொன்னார் (சிவகுமார் நிசமாகவே படத்தில் சிவன் வேஷம் போட்டாரா இல்லையா என்பது கவிதைக்கு ஒருவகையில் முக்கியமில்லை என்பதும், இது தேவிபாரதிக்கும் தெரியும் என்பதும் வேறு விஷயம்....).தேவிபாரதி சொன்னதை நான் மறுத்தேன். விவாதத்தில் மதிய நேர சிறுதூக்கத்திலிருந்த சிவகுமாரை எழுப்பிக் கேட்டோம். :) அவர் பெருந்தேவி சொன்னதுதான் சரி, நான் காரைக்காலம்மையார் படத்தில் சிவன் வேஷம் போட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். :)

கோநா said...

இக்கவிதைக்குப் இத்தனை கதை இருக்கிறதா, விளக்கத்துக்கு நன்றி பெருந்தேவி.

கோநா said...

மன்னிக்கவும் முன்னையது "பின்" பிழைத்த பின்னூட்டம். {தப்பக்கூட எப்டியெல்லாம் பின்நவீனத்துவமா சமாளிக்க வேண்டியிருக்கு}:)

"இக்கவிதைக்குப் பின் இத்தனை கதை இருக்கிறதா, விளக்கத்துக்கு நன்றி பெருந்தேவி" என்று திருத்தி வாசிக்கவும்.