Tuesday, December 6, 2011

நேற்று வெப்காமின் நீலச்சுடர் முன்னிலையில்

இருபத்தோரு வயது இளைஞன் பொறியியல் மாணவன்
ஒரு அம்மா ஒரு அப்பா
இரண்டே காதலிகள்
மற்றும் முகப்புத்தகம், மைஸ்பேஸ், ஆர்குட்
நேற்று மதியம் சரியாக ஒன்றரைக்கு
இணைய அரட்டையறைக்கு நண்பர்களுக்காக வந்தவன்
அமிலம் நிறைந்த ஒரு சின்னப் புட்டியை
கேமரா முன் முதலில் நீட்டினான்
அடுத்து நீளக்கயிறொன்றை
கழுத்தில் சுற்றி விறைத்து நாக்கை நீட்டி தலை தொங்கச்சாய்ந்து
நாற்காலியைப் பின்தள்ளி விழுந்தான்
ஒரு சீனத்தயாரிப்பு குறுங்கத்தியை
வெப்காம்முன் நீள குறுக்கே நீட்டி
அதை மார்பில் அடித்துக்கொண்டான்
வலது உள்ளங்கையில் கொஞ்சம் அதால் கீறினான்
யுவன்சங்கர் ராஜாவின் புதுப்பல்லவியை முனகியபடி
இணையப்பக்கச் சன்னலை
ரத்தத்துளிகள் ஒளிர்ந்த
கத்தியின் பகுதியால் அடைத்தான்
மாத்திரைகள் நிரம்பிய இன்னொரு புட்டியை உயர்த்தி
கவிழ்த்து மாத்திரைகளை வலக்கைக்கும் இடக்கைக்கும்
மாற்றி விளையாடி ஒவ்வொன்றாக
வாயிலிட்டு
பெப்ஸியில் விழுங்கி
(வெப்காம் தொடர்ந்து காண)
படுக்கையில் ஏறி
தலையணையைக் கழுத்துக்கும் தலைக்குமிடை சரிசெய்து
படுத்து
போர்த்தி
இறந்து
போனான்.
நிகழ்ச்சியைக்கண்ட காணாத
அவன் நண்பர்கள்
எனப்படுவோர்
அவனது முகப்புத்தகச் சுவரில் எழுதியவை:

LO: சிரிக்கிறேன்

LOL: உரக்கச் சிரிக்கிறேன்

Loser: தோற்றாங்குளி

OMG: அட என் கடவுளே

Sick: நோய்த்தன்மை

OMFG: அட என் புணரும் கடவுளே

காலத்தின் கோலம் தோழர்

உலகமயமாக்கத்தின் தீய விளைவு

ஒருவழியா சோதியில கலந்துட்டான்

எந்தசோதி, பரங்கிமலை சோதியா

டேய், கம்….(எடிட் செய்யப்படுகிறது), நண்பன் சாவை வேடிக்கை பாத்த நாயிங்களா

நீ பாக்கலியாடா

Sucks and sucks: கெட்ட வார்த்தைகள்

அரசியல் சரித்தன்மையற்ற இந்த வார்த்தைகளை கண்டிக்கிறேன்.

செகண்ட் ரேட்

எல்லா மதங்களும் தற்கொலையைக் கண்டிக்கின்றன. அது சாவுக்குப்பின்னும் தண்டனை கிடைக்கச்செய்யும்.

எல்லாக் கடவுளும்?

அவன் கிடக்கான், தே….(எடிட் செய்யப்படுகிறது)

1DR: வியக்கிறேன்

இந்தப்பசங்களை நம்பி வீட்ல எவ்வளவு செய்திருப்பாங்க

என்ன செய்திருப்பாங்க

இப்ப அதுவா முக்கியம்

பட்சி ஏமாத்தியிருக்கும்

யாரு உன் தங்கச்சியா

2MI: மேலதிகச் செய்தி

வாழ்க்கைக்கு சன்னல்கள் ஆயிரம், கதவேயில்லாதபோதும் அவை திறக்கும்: இப்படிக்கு ஒரு கவிஞர்

நேத்தி அவன் ஆட்டத்தைப் பாக்கறப்ப சொல்லியிருக்க வேண்டியதுதானேடா

ஒண்ணுமே புரியல உலகத்தில

ஆகமொத்தம் ஆட்டம் குளோஸ்

மாபெரும் தேசியசக்தியாக இளைஞர்கள் உருவாகாமல் இப்படி வீணாகப் போவது ஏன் என்று நாம் யோசிக்கவேண்டும்

A3: எங்கேயும் எந்நேரமும் எவ்விடத்திலும்

வாழ்தல் ஒரு மாளாவரம், வரமிடையே தடைப்படுதல் விதியின் சாபம்: இப்படிக்கு இன்னொரு கவிஞர்

சாவின் தொட்டில் இளைஞர்களை எப்போதுதான் காவு கேட்கவில்லை?

கவிஞனுங்கள கட்டிவச்சி (எடிட் செய்யப்படுகிறது)

இவனுங்களோட (எடிட் செய்யப்படுகிறது) கூட அர்த்தம் இல்ல

என்னென்னவோ நடக்குது எடிட்டிங்-கில்

காவல்துறை பார்த்தவர்களையும் கைது செய்திருக்கவேண்டும்

ஏண்டா வெண்ண நீ பாக்கலியா அதான்

சரிடி தொன்ன

மேலே இரு கமெண்ட் போட்டவர்கள் படிப்பில் வல்லவர்கள் அல்லர், ஆனாலும் நல்லவர்கள், தங்கள் காசில் அடுத்தவர்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருபவர்கள் என்பதைப் பதிவுசெய்கிறேன்.

ஆமாமாம், நானும்தான்

LTOD: சாவின் மடிக்கணினி

என்ன சாகப்போகிறாயா, ஒரு சனிக்கிழமை எல்லாச்சானல்களிலும் விஜய் படங்களைப் போடும் நாளாகப் பார்த்து

செத்துத்தொலை

கடவுளோடு மனிதனும் அவன் பெண்பாலும் சேர்ந்து இறந்துவிட்டனர்

மேலே காணும் குறிப்புகள் பதிவேற்றிய அதே ஒழுங்கில்
கத்தரித்து ஒட்டப்பட்டிருக்கின்றன (ஸ்மைலிகளைத் தவிர்த்து)
அவன் முகப்புத்தகக் கணக்கு இப்போதைக்கு மூடப்படாது
உங்கள் நண்பனாயிருந்தால் ஒரு வேளை
நீங்களும் ஒரு குறிப்பு எழுதமுடியும் விரும்பினால்
அவன் சுவரை இன்னும் வண்ணமயமாக்கவும்.



****

(உலோகருசி தொகுப்பிலிருந்து, காலச்சுவடு வெளியீடு, 2010)

இக்கவிதை வலைப்பூவில் முதலில் வெளியானபோது நடந்த உரையாடல் இங்கே.

Friday, December 2, 2011

க்ராஸ்டாக்

(அல்லது குறுக்குச்சால்)

இப்படித்தான்
அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா
சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு
பர்ஸ்ட் க்ளாஸ் பாட்டு போட்டான்யா
ஓரம்போவில கருமத்தைப் பேசாதே
சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹஹா
பொம்பளை சிரிச்சாப்போச்சு
சிரிப்பா சிரிச்சிரும் கதை அப்புறம்
கதைக்கு காலு கை முளைச்சி
ஆண்குறியும் பெண் அதிகாரமும்
வெவ்வேற வீடுகளுக்குப் போவது தான்
கலசம், அரசி, கோலங்கள்
ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவோம்
வா மானாடி மயிலாடி
அய்யா ஏற்கெனவே திட்டிப்புட்டாரு
கையை காலை வச்சுக்கிட்டு சும்மா
இருக்கமாட்டீங்களா
பட்டாணி சுண்டல் சுக்குக்காப்பி
சரி சரிச் சும்மா டைம்பாஸுக்கு
சனியனே மேட்ச் பாக்கிறப்ப
உயிரை வாங்காதே
பிடிக்குங்களா
காலிப்ளவர் பக்கோடா
பக்கார்டி ரம்மோடு
பொறந்தா தமிழ் எழுத்தாளரா
பொறக்கணும்
பொரவலர் கிடைக்க
என்னுயிரே என்னுயிரே
மகளின் போனில் ரிங்டோன்
டிங் மெசேஜா வருதே
எந்தப் பொறுக்கி அது
ஏன் மூட்டுவலி இப்பல்லாம் வருது
கோப்பையிலே என் குடியிருக்கும்
அவன் யாரு சார் மகா கவிஞன்
இப்பல்லாம்
இன்னாத்த எழுதிக்கிழிக்கிறாங்க
மூத்திரம் முலை பத்தாததுக்கு
உடல் அரசியல்
கோஷ்டி அலையுது அவுங்களும்
கல்கி படிச்சி கவுந்தவங்க தான்
சார்
வந்தியத்தேவனை குந்தவை
மல்லாக்கவா யாருக்குத்
தெரியும் ஷகீலாவின் கண்ணீர்
மிகப்பெரிய பெரிசு தான்
ஆமாமாம் மிகப்பெரிய
கோப்பைகளையே நிரப்பப்
பற்றாது அஸிஸ்டெண்ட் டைரக்டரு
பேசினா என்ன துப்பினாகூட
மார்க்வெஸ் தான்
நடிகைகளின் வாழ்க்கைகள்
துயரப்பொதிமூட்டைகள் என்கிற
மானுடவியல் ஆய்வைச்
செய்த அமெரிக்க மாணவி
படுபேஜார்டி
கண்ணீரால் ஆய்வறிக்கையை
எண்ணூறு பக்கம் நிரப்பினாள்
தி ஹிந்து இலக்கியத் துணையிதழ்
படிச்சிட்டு இன்னிக்கு
வாழ்வாங்கு வாழ்ந்தப்புறம்
அதான்ப்பா அதேதான்
குப்புறப்படுத்துட்டு
நாளைக்காலையில்
சுனாமி வருமா
என மாற்றத்தை எதிர்நோக்கும்
உங்கள் அன்பன்.

****

(உலோகருசி கவிதைத்தொகுப்பிலிருந்து, காலச்சுவடு இதழிலும் பிரசுரிக்கப்பட்டது, மீள்பதிவு இங்கே)

Sunday, November 27, 2011

மந்தை

காதலின் பாலத்தில் ஏறி
அந்தப்பக்கம் போய்விடலாம்
என்று சொல்லித்தான்
அழைத்துவந்தேன்.
இல்லாதபாலத்திலேறி
தொலையாததூரம்போக
என்னோடு இன்னொரு
ஆட்டுக்குட்டி.

Sunday, November 20, 2011

”வால் தெருவை ஆக்கிரமிப்போம்” இயக்கம்: பெண்ணியச் சிந்தனையாளர் ஜூடித் பட்லரின் சிற்றுரை

(தமிழாக்கம்)

எல்லாருக்கும் ஹலோ. நான் ஜூடித் பட்லர். என் ஆதரவைத் தர இங்கே நான் வந்திருக்கிறேன்; முன்னெப்போதுமில்லாத வகையில் இங்கே காட்சிப்படுகிற வெகுசன மற்றும் மக்களாட்சியின் விருப்புறுதிக்கு என் ஒன்றிப்பைத் (solidarity) தர வந்திருக்கிறேன். மக்கள் கேட்கிறார்கள்: இவர்களின் கோரிக்கைகள் தாம் என்ன? கூறுகிறார்கள்: இவர்களுக்குக் கோரிக்கையேயில்லை, இது இவர்களின் விமர்சகர்களைக் குழப்பத்திலாழ்த்துகிறது; அல்லது இப்படிச் சொல்கிறார்கள்; சமூக சமத்துவம் மற்றும் பொருளியல் நீதிக்கான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள், ஆகவே இந்த இயலாத கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையும்கூட.

ஆனால் இதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்! நம்பிக்கை என்பது ஒரு இயலாத கோரிக்கை என்றால், இந்த இயலாத ஒன்றையே நாங்கள் கோருகிறோம். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேலைக்குமான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள் என்றால் இயலாதவற்றையே நாங்கள் கோருகிறோம். பொருளியல் மந்தநிலையால் ஆதாயம்கண்டவர்கள் தங்கள் செல்வத்தை மீள்-பகிர்வு செய்யவேண்டும், தங்கள் பேராசையை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கைகள் இயலாதவை என்றால், ஆமாம், நாங்கள் இயலாதவற்றையோ கோருகிறோம்.

சரிதான், எங்கள் கோரிக்கைகளின் வரிசை நீண்டது. இவை எவற்றுக்கும் எந்த நடுவாண்மையும் செல்லுபடியாகாது. செல்வம் ஒரேயிடத்தில் குவிந்துகிடப்பதை நாங்கள் மறுக்கிறோம். வேலைசெய்யும் மக்கள்திரளை கழித்துக்கட்டக்கூடியவர்களாக ஆக்குவதை மறுக்கிறோம். கல்வியை தனியார்மயமாக்குவதை மறுக்கிறோம். கல்வியை பொதுநலமென்றும் பொதுவிழுமியமென்றும் நம்புகிறோம். பெருகிக்கொண்டேவரும் ஏழைகளின் எண்ணிக்கையை எதிர்க்கிறோம். வீடுகளிலிருந்து மக்களை வெளியேதள்ளும் வங்கிகளுக்கு எதிராகவும், ஆராயவும்முடியாத எண்ணிக்கையிலான மக்களுக்கு மருத்துவ வசதி கிட்டாததற்கு எதிராகவும் ஆத்திரப்படுகிறோம். பொருளியல் இனவெறியை மறுக்கிறோம், அதன் முடிவைக் கோருகிறோம்.

உடல்களாக நாம் பொதுக்களத்தில் வந்தடைவதால் இது முக்கியமாகிறது. உடல்களாக நாம் துயருறுகிறோம், எங்களுக்கு உணவும் உறைவிடமும் தேவைப்படுகிறது, விழைவிலும் சார்பிலும் உடல்களாக ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம். ஆக இது கூட்டுப்பொதுவுடலின் அரசியல், அவ்வுடலின் தேவைகள், அதன் இயக்கம், அதன் குரல். நமது விருப்புறுதியை ஓட்டு அரசியல் பிரதிபலிப்பதாக இல்லை என்றால் நாம் இங்கே இருந்திருக்கமாட்டோம். ஓட்டு அரசியலால் மறக்கப்பட்ட கைவிடப்பட்ட வெகுசன விருப்புறுதியாகத்தான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், நகர்கிறோம். ஆனாலும் இங்கே இருக்கிறோம், மீண்டும் மீண்டும் ”மக்களாகிய நாங்கள்” என்கிற சொற்றொடரை வலியுறுத்தியபடி, கற்பனைசெய்தபடி.

(ஆங்கில மூலம் இங்கே: http://www.autostraddle.com/and-then-judith-butler-showed-up-at-occupy-wall-street-in-solidarity-117911/ )

என் குறிப்பு: தமிழகத்தின் இன்றைய நிலையும் (அணு உலை, விலைவாசி உயர்வு) நம்முன்/நம்மில் காட்சிப்படுவதிலேயே இந்த மொழிபெயர்ப்பின் சாத்தியம் அடங்கியிருக்கிறது.

Saturday, November 19, 2011

கடைசி மேசையில் ஓர நாற்காலியில்

மற்றும் சில கவிதைகள்:

காலச்சுவடு இதழில் வெளிவந்தவை:

http://www.kalachuvadu.com/issue-138/page42.asp

Wednesday, November 16, 2011

கவிதை எழுதவேண்டுமானால்

ஒருபோதும்
கவிதைபற்றிக் கவிதை எழுதாதே
சிலகோடி கவிதைகளின் பாடுபொருளாக
நீ இருந்தாலொழிய.
ஒருபோதும்
காதலில் தோற்றதை வென்றதை அல்லது
இடையில் தின்னப்பட்டதை எழுதாதே.
சிலகோடிப் பேர்களை காதலுக்காக
நீ சாகடித்திருந்தாலொழிய அல்லது
சிலகோடி பேர்களாவது உன்னைச்
சாகடிக்கத் தேடிக்கொண்டிருந்தாலொழிய.
ஒருபோதும்
மழையை பூவை குழந்தையைப் பற்றி எழுதாதே
மொழிநடைக்கு அலங்காரமாக இருக்கக்கூடிய
அபாயத்தை அளிக்காதே அவைகளுக்கு
ஒருபோதும்
சொந்தக்கதையை எழுதாதே
உன் வாழ்க்கையை உன் கண்களிலிருந்து
நீ பார்க்கும்போதே
கண்டங்களுக்கப்பால்
அந்நியப்படுத்திவிடும் கவிதை
ஒருபோதும்
அரசியல்சரிக்காகக் கவிதை எழுதாதே
பாலுறவை வென்றெடுக்க கவிதை எழுதாதே
தினசரிக்கடமையில் ஒன்றாய்க் கவிதை எழுதாதே
கவிதையாக உருக்கொள்ளாத கவிதை
அரசியல் சரித்தன்மையைக் கோமாளித்தனமாக்கிவிடும்
வென்ற பால்துணையைப் பிசாசாக மாற்றிவிடும்
மேலும் கடமையில் ஒருநாள் தவறிவிட்டால்
மனச்சிக்கலில் தற்கொலை செய்துகொள்வாய்.
ஒருபோதும்
கவிதை எழுதாதே
கவிதை எழுதநினைத்துக்கொண்டு
அல்லது எழுதுவதாக நினைத்துக்கொண்டு.

பிடிச்சாம்பலிலிருந்து
எழும்பும் ஒரு தடம்
பிடியற்ற ஒரு கூர்
சாம்பலாகும்முன்.

Monday, November 7, 2011

நினைவுகூரத்தக்க புன்னகை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (17)

எங்களிடம் தங்கமீன்கள் இருந்தன
ஒற்றை விரிகண்ணாடிச் சன்னலை மூடிய
கனத்த சீலைகளுக்கருகே
மேசைமேல் கண்ணாடிக் கிண்ணத்தில்
சுற்றிச்சுற்றி வந்தன அவை.
என் அம்மா, எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருப்பவள்,
நாங்களனைவரும் மகிழ்ச்சியோடிருக்க விரும்பி
என்னிடம் சொன்னாள்: ஹென்றி, மகிழ்ச்சியாயிரு.
அவள் சொன்னது சரிதான்: இருக்கவேண்டியதுதான்
மகிழ்ச்சியாய் உன்னால்
முடியுமானால்.
ஆனால் என் அப்பா அவரது ஆறடி இரண்டங்குலச் சட்டகத்துள்
பொங்கியெழுந்து அவரைத் தாக்குவது
எதுவென்று புரியாமல்
என் அம்மாவையும் என்னையும்
அடிப்பதைத் தொடர்ந்தார்
வாரத்தில் பலமுறை.

என் அம்மா, ஒரு பாவப்பட்ட மீன்,
மகிழ்ச்சியாயிருக்கவேண்டி, வாரத்தில்
இரண்டுமூன்றுமுறை அடிபடுபவள்,
மகிழ்ச்சியாயிருக்கச் சொல்லிக்கொண்டிருந்தாள் என்னிடம்:
ஹென்றி, புன்னகைசெய், ஏன் எப்போதும்
புன்னகையே இல்லை உன்னிடம்?

அப்புறம் அவள் புன்னகைப்பாள், எப்படி என்று காட்ட.
நான் பார்த்ததிலேயே ஆகவருத்தமான புன்னகை அதுதான்.

ஒரு நாள் தங்கமீன் இறந்தது, எல்லா ஐந்துமீன்களும்,
அவை நீரில் மிதந்தன, பக்கவாட்டாக,
கண்கள் இன்னமும் திறந்தபடிக்கு.
என் அப்பா வீடு திரும்பியவுடன் அவற்றைப்
பூனைக்குமுன் எறிந்தார்
அங்கே சமையலறைத்தரையில்.
என் அம்மா புன்னகை செய்ய
நாங்கள் பார்த்தோம்.

Sunday, November 6, 2011

பூஞ்சை நெஞ்சம்

மரணத்துக்கு முன் உன் துரோகிகளையெல்லாம்
மன்னித்துவிடுவாய் என்கிற உன் நம்பிக்கை
நீயும் அப்படி மன்னிக்கப்படுவாய் என்கிற
பேராசைக்குமுன் ஒன்றுமேயில்லை.
கடைசிக் கதவத்தை
ஒரு இறைஞ்சல்
எல்லாக் கைகளோடும்
தட்டுகிறது.
அதிரமாட்டாமல் அதிர்கிறது
ஒரு தாளக்கொட்டோடு.
தொலைவில்தான்.

Saturday, November 5, 2011

நீலப்பறவை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (14)

என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
ஆனால் என் முரட்டுத்தனத்துக்குமுன்
அவன் ஒன்றுமில்லை.
சொல்கிறேன், அங்கேயே இரு,
யாரும் உன்னைப்பார்க்க
விடப்போவதில்லை நான்.
என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
அவன்மீது நான் விஸ்கியை ஊற்றுகிறேன்,
புகையை உள்ளிழுக்கிறேன்.
வேசிகளுக்கும் குடியை ஊற்றிக்கொடுப்பவர்களுக்கும்
மளிகைக்கடை குமாஸ்தாக்களுக்கும்
உள்ளே அங்கே அவனிருப்பது
ஒருபோதும் தெரிவதில்லை.


என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
ஆனால் என் முரட்டுத்தனத்துக்குமுன்
அவன் ஒன்றுமில்லை.
சொல்கிறேன், அப்படியே இரு. என்னைக்
குழப்பியடிக்கப் விருப்பமா? என்
வேலைகளை வெட்டியாக்க விருப்பமா? அல்லது
ஐரோப்பாவில் என் புத்தக விற்பனையை
ஒன்றுமில்லாமலாக்கத் திட்டமா?
என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
ஆனால் எல்லாரும் தூங்கும்
இரவில்மட்டுமே
அவனை வெளியேவிடும்
அளவுக்கு நான் மிகவும் புத்திசாலி.
சொல்கிறேன், எனக்குத் தெரியும் நீ அங்கேயிருக்கிறாய்
ஆகவே வருத்தப்படாதே.
திரும்பவும் அவனை உள்ளே வைக்கிறேன்.
ஆனால் அவன் பாடுகிறான்
உள்ளுக்குள்ளே கொஞ்சம்,
நான் அவனை சாகடிக்கவெல்லாம் செய்யவில்லை.
மேலும் அவனும் நானும்
ஒன்றாகத் தூங்குகிறோம்
எங்களின் ரகசிய ஒப்பந்தத்துடன்.
மேலும் ஒரு ஆணை
அழச்செய்வதென்பது நல்லதுதான். ஆனால்
நான் அழுவதில்லை,
நீங்கள்?

Wednesday, July 27, 2011

பீகாரிலிருந்து வந்தவர்கள்

இன்னொரு அந்தி.
தெருவோர பேக்கரியில்
பத்துரூபாயை நீட்டி பன் கேட்டான் சிறுவன்.
கூட மூவர்
(அம்மா? தங்கை? குட்டித்தம்பி?)
கட்டிடத்தொழிலாளர்கள் இவர்கள்
வடக்கத்திக்காரர்கள்
(சொன்னது கடைக்காரர்)
இரவுணவுக்கா?
ஆமாம்
மொத்தக் குடும்பத்துக்கா?
ஆமாம்
தினமுமா?
ஆமாம்
குழந்தைக்குமா?
ஆமாம்
ஆமாம்
(பன்னை டீயில் தோய்த்து
குழந்தைக்கு அவள் ஊட்டும்போது
நிலாவைத் தேடுமா அவள் கண்கள்?
குறுக்காக நீண்டுயரும் தளங்களுக்கு இடையே
தென்படுமா அதன் ஒரு கீற்று?
நிலவைக் கட்டிடம் விழுங்கிவிட்டிருந்தால்
ஒரு குழல்விளக்குத் துண்டு
ஒளிருமா அருகே?)
மின் தடை இருக்குமா
இன்றைக்கு இரவு?
உரத்த கடைசிக்கேள்வி மட்டும்
உடனே கால்முளைத்து
அடுக்குமாடிக் கட்டிடங்கள்
பலவும் நீளத்தாண்டி
ஆ.....மாம்
எதிரொலித்தது நகரமெங்கும்
பல குரல்களில் பல மொழிகளில்
ஆத்திரத்தோடு.

Saturday, July 9, 2011

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துக்குமாக.
கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?

Saturday, March 19, 2011

ஜப்பான் அணு உலைக் காட்சிகளின் எண்வகை மெய்ப்பாடுகள் (2)

ரோஜாநிறப் புகைமேகம் ஒன்று நகரத்தின்மீது உலாவந்த ஒரு காலையில் விளையாட்டு வீரர்களும் அரசு அதிகாரிகளும் குழந்தைகளும் திரைப்படத்தாரகைகளும் பிச்சைக்காரர்களும் அடியாட்களும் அரசியல் தலைவர்களும் அவர்கள் கட்டிய கட்டாத பெண்களும் ஆட்டோக்காரர்களும் இன்னும் பலரும் உடனடியாக நகரத்திலிருந்து சென்றுவிட அறிவுறுத்தப்பட்டனர். சிலர் கார்களை ஆட்டோக்களை இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு குடும்பத்தோடு சென்றனர். பலர் பேருந்துகளிலும் வேன்களிலும் உள்ளேயும் மேலேயும் ஓட்டிச்செல்லப்பட்டனர். கொஞ்சம் ரோஜா நிறமேகம் அவர்களோடும் ஆசையோடு சென்றது ஒட்டி ஒட்டி. அவர்களில் குழந்தைகள்கூட அழாமல் இறுகிய முகத்தோடிருந்தனர். ”ரோஸி, மூகமூடியை நன்றாகப் பொருத்திக்கொள்.”

விரைவாகத் துறக்கப்பட்ட நகரத்தை ரோஜாநிறம் முழுக்க தன் வெளிறிய இதழ்களில் வசப்படுத்தியிருந்தது. கடலோரத்திலும் வசிப்பிடங்கள் என்று பெயர்பெற்றிருந்த இடங்களிலும் தனித்தும் ஒட்டியும் கும்பலாயும் ஊதாவண்ணம் மினுங்குகிற பிணங்கள்.

......


இருமாதங்களுக்குப் பின், பொழுதுசாய்ந்த ஒரு பொழுதில், நகரத்தின் கொஞ்சமாக சிதிலம்கண்டிருந்த மையப்பகுதி ஒன்றில் பதுங்கிப் பதுங்கி சின்னக்குழுக்களாக உருவங்கள் வெளிவந்தன. இதுவரையில் சுவர்கள் கீழே விழாத மால்களின் கடைகளிலும் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்களிலும் இருந்துகொண்டிருந்தன அவை. பென்சில்போல் மெலிந்த அவர்களின் பலரின் கைகளும் இருந்த மடிக்கணினிகள் அவர்கள் தள்ளாடி நடக்க அதே தள்ளாட்டத்தோடு அசைந்தன. மின்சாரம் அப்பகுதியில் மட்டும் எப்படியோ துண்டிக்கப்படாமல் இருந்தது. உப்புக்காற்றோடு பிணவீச்சடிக்கும் வீதிகள் மொத்தமும் இரும்புத் துகள்களும் கண்ணாடிகளும் செங்கல்குவியல்களும் சாம்பலும் பிளாஸ்டிக்கும் கதவுச்சட்டங்களும் அழுகின உறுப்புகளும். இக்குழுக்கள் ஒன்றையொன்று முறைத்தபடி கிட்டத்தட்ட உறுமியபடி ஒன்றின் நோக்கத்தை இன்னொன்று யூகித்தபடி ஒன்றோடு ஒன்று போட்டியிட்டபடி மெதுவாக அப்பகுதியின் சூப்பர்மார்க்கட்களை நோக்கி நடந்தன. கைவிடப்பட்ட அந்தப் பெரிய அங்காடிகளின் குளிர்பதனப் பெட்டிகளின் நாளோடிய இறைச்சித்துண்டங்களும் பூஞ்சைபிடித்த ரொட்டிகளும் சிலநாட்கள் அவற்றுக்குப் போதுமானதாக இருக்கும். அதன்பின்னும் இதே உணவைச் சேகரிக்க அலைந்துதிரிந்தவாறு சிலகாலம் செல்லும்; பின்னர் மேலும் சிலகாலம் தனியாய் அகப்படும் உருவங்களை பிடித்து உண்டு அவைகள் இருக்குமோ?

......

இக்குழுக்கள் தங்களை பின்-புவியதிர்வு சீவிகள் xe1, Pu1, Ra1, Th2, ... என்று தமக்குப் பெயரிட்டு அழைத்துக்கொள்ளும். உணவுக்கு அலையத் தேவையில்லாத நேரங்களில் மடிக்கணினிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள்— பலநாட்டுப் புல்வெளிகள், கொடை நீலமலைக்குன்று, அரபிக்கடலின் சிற்றலையின் பின்னணியில் ஒரு சிறுவன் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும். மனிதர்கள் சிரித்துப் பேசி நடக்கும் சமநிலமான பரப்புகளைக் காட்டும் படங்கள் அவற்றுக்கு வெகுவிருப்பம்.

......

வெளியேறிச் சென்றுவிட்ட மற்றவர்களுடன் எத்தொடர்பும் கொள்ள முனைவதில்லை அவை. அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதுமில்லை. பின்–புவியதிர்வு சீவிகளாக அவைகள் ஆகியிருக்கலாம், அல்லது சீக்கிரம் அவைகளாகிவிடும் என்கிற அவற்றின் நினைப்பு அல்லது நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

--நகரத்தைப் புனையும் சிதிலம்


மெய்ப்பாடு 6: இளிவரல் (பிணியும் வருத்தமும்)


டோக்கியோவின் தண்ணீரில் கதிரியக்க அயோடின், சூடுகுறையாத ஃபூகுஷிமா அணு உலைகளின் அருகே பண்ணைகளில் கீரை மற்றும் பால் உணவுப் பொருட்களில் அபாயகர அளவில் கதிரியக்க ஐசோடோப்கள்—இவைபோன்ற தெளிந்த கதிரியக்கப் பலாபலன்கள் பற்றி இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. கொடுங்கனவு போன்ற பழைய நிகழ்வொன்றில் பங்கேற்ற உடல்கள் மட்டுமே பேசப்படும்.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சில் தப்பிய ஒருவரின் கூற்றைச் சுட்டுகிறார் ஆன் லராபி என்கிற மனித அழிவுகளை ஆராயும் ஒரு அறிஞர் (பார்க்க, Larabee, Ann. Decade of Disaster, Univ. of Illinois, 2000):
“எங்கெல்லாம் நான் நடந்தேனோ அங்கெல்லாம் இந்த மனிதர்களைப் பார்த்தேன்…..அவர்களில் பலரும் ரோட்டோரத்தில் மடிந்தார்கள்—என் மனதில் இப்போதும் அவர்களைப் படமெடுக்க முடிகிறது—அவர்கள் நடக்கும் பிசாசுகளைப் போல் இருந்தார்கள். …இவ்வுலகைச் சார்ந்த மனிதர்களாகவே அவர்கள் தெரியவில்லை. அவர்களின் நடை தனித்த வகையில் இருந்தது—மிக மெதுவாக. அவர்களில் நானும் உண்டு.”

“நடக்கும் இறந்தவர்களின்” இந்த அனுபவத்தை, உணர்வை தொடர்ச்சியானதாக, தீர்க்கமுடியாததாக, முடிவற்றதாக விவரிக்கிறார் ராபர்ட் லிஃப்டன் என்கிற ஆராய்ச்சியாளர் (பார்க்க, லராபியின் Decade of Disaster)

被爆者 ஜப்பானிய மொழியில் ஹிபாகுஷா என்பது ”அணுகுண்டால்/கதிர்வீச்சால் உடல், மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள்” என்ற பொருளைத் தந்தாலுமே, அந்தப் பதம் முழுமொத்தமான அடையாளமாற்றத்துக்குள்ளானவர்களை, பொதுவெளியில் கதிர்வீச்சின் அழிவுக்குறியை உடலில் சுமப்பவர்களைக் குறிப்பது; அதுமட்டுமல்லாமல், “அணுகுண்டு நோய்” தன்னை உடற்குறிகளின் மூலம்—நிறம்மாறும் புள்ளிகள், ஓய்ச்சல், வலி போன்ற குறிகளின்மூலம் எந்நேரமும் தன்னை வெளிப்படுத்தும் (காட்டிக்கொடுக்கும்) என்கிற பயத்தைச் சுமந்தபடி இருக்கும் நிலை என்கிறார் லிப்டன். “காட்டிக்கொடுக்கும்” என்கிற பதத்தை இங்கே நான் பயன்படுத்தக் காரணம்: ஜப்பானில் ஹிபாகுஷாக்களும் அவர்கள் சந்ததியினரும் படிப்பு வேலை விஷயங்களில், இடங்களில் எதிர்கொண்ட, இன்றும் எதிர்கொள்ளும் பாரபட்ச பாகுபாடு தாம். ஹிபாகுஷாக்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் என்றால் சமூக ஒறுத்தல் நிச்சயம். இத்தகையதொரு அடையாளத்தையும் உடல்கள் காட்டிக்கொடுத்துவிடுமோ என்ற அச்சமும் நோய் பற்றிய பயத்தோடு கூட இவ்வுடல்களில் வரையப்பட்டிருக்கின்றன.

ஹிபாகுஷாக்களின் உடல்களின் பிம்பங்களில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது இன்றைய அணு உலை/அணுகுண்டு எதிர்ப்பாளர்களின் சொல்லாடல், என்கிறார் லராபி. ஹிபாகுஷாக்களைப் பற்றிய தொடர்ந்த நேர்காணல்கள், மருத்துவ உளவியல் சோதனைகள், ஆராய்ச்சிகள், துயரங்களைப் பற்றித் தொடர்ந்துகொண்டிருக்கும் பத்திரிகைப்பதிவுகள் போன்றவற்றின் வாயிலாக ஹிபாகுஷாக்களின் உடல்களின் “மனித உண்மையை” மனிதர் அனைவருக்கும் நேரக்கூடிய ஒன்றாக உணரப்படுதல் சாத்தியமாகி இருக்கிறது; தவிர, தீவிரமாக எழுதப்படுகிற, கதிரியக்க அபாயங்களை வரிசைப்படுத்தி ஆதாரத்தோடு முன்வைக்கிற கட்டுரைவடிவங்களை விட, இத்தகைய பதிவுகள் மனிதப் பிரக்ஞையை ஏதோ ஒருவகையில் கேள்விகேட்கும், வடிவமைக்கும் திறன்கொண்டவையாக கருதப்படுவதையும் லராபி சுட்டிச் செல்கிறார்.

ஒரு நாடு அல்லது கலாச்சாரம் சார்ந்த மக்களின் இத்தகைய வலியையும் அவலத்தையும் அந்த நாடு, கலாச்சாரம் குறித்த ஸ்தூலமான குறியீட்டை ஒருவர் சற்றே தள்ளிவைத்து சிந்திக்கும்போது, அச்சிந்தனையின் ஊடாக அந்த வலியும் அவலமும் வையகத்துக்கே பொதுவானவையாக மாறும், மாறிவிடமுடியும். கூடவே இந்த மாற்றம் சிந்திப்பவரை தனிநபர்/குடும்பம்/நட்புக்குழு போன்றவற்றுக்கான நலனுக்கான விசாரணைகளிலிருந்து பெரும்போக்கோடு கூடிய வேறு சீரிய விசாரணைத்தளங்களுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கக்கூடும். ஜப்பான் காட்சிகளின் உள்ளுறையான இளிவரல் இதையும் யோசிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது.

ஜப்பான் அணு உலைக் காட்சிகளின் எண்வகை மெய்ப்பாடுகள் (1)

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்காப்பியச் சூத்திரம்)

வாழ்க்கையே அணு உலையாலே நாமெல்லாம் அதனாலே
உடலுருகிச் சாய்ந்திடுவோமே வாழ்நாளிலே (ரீ மிக்ஸ்)

மெய்ப்பாடு 8: அழுகை (இழத்தல் வகை)

மார்ச் 19, 2011. டோக்கியோ மின்சக்தி நிறுவனத்தின் (டெப்கோ) நிர்வாக இயக்குனரின் கண்ணீர்: சூடு அதிகமான அணு உலைகள், எரிபொருள்கள் மக்களுயிரைப் பறிக்கவல்லவை என்று ஜப்பான் ஒத்துக்கொண்டு, கதி்ர்வீச்சு அபாயத்தை அளவுகோலில் ஐந்துக்கு உயர்த்தியிருக்கும் வேளையில் அகியோ குமிரி அழுதார்.

பார்க்க:

http://www.dailymail.co.uk/news/article-1367684/Nuclear-plant-chief-weeps-Japanese-finally-admit-radiation-leak-kill-people.html

அழுகை மக்களுக்காகவா? டெப்கோ ஊழியர்கள் கதிரியக்கத்தைக் கட்டுக்குக் கொண்டுவராமல் உலை இடத்தைவிட்டு நீங்கக்கூடாது என்று ஜப்பானிய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டதற்கா? இப்போது மக்கள் மத்தியில் டெப்கோ போன்ற அணு உலை நிறுவனங்களைப் பற்றி அவநம்பிக்கை பெருகிக்கொண்டிருப்பதால் இழக்கப்போகும் வியாபார லாபங்களுக்கா?

வரலாற்றில் இதற்கு முன்பு அணுசக்தி மற்றும் ஜப்பான் தொடர்பாக ஒருவர் கண்ணீர் விட்டிருக்கிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் அவர். இரண்டாம் உலகப்போரின் பெரும் திருப்புமுனையாக, ஜப்பான் நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி நாசமாக்கிய போது தன் அறிவியல் கோட்பாடு இவ்வாறு கொண்ட உயிர்ப்பலிகளுக்காக ஐன்ஸ்டீன் அழுததாக சொல்லப்படுகிறது. 1905-ஆம் வருடம் அவர் எழுதிய கட்டுரை அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்புக்குப் பெருமளவில் உதவியது; அதேபோல அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்-டுக்கு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவர் எழுதிய கடிதமே அமெரிக்காவின் அணுகுண்டு தயாரிப்புக்கு ஊக்கமளிப்பதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மெய்ப்பாடு 7: உவகை (கேளிக்கை)

ஜப்பானியர் ஒருவரால் எடுக்கப்பட்டு கீச்சிலும் முகநூலிலும் பெருவாரியாகப் பகிரப்பட்டிருக்கும் ஒரு யூ-ட்யூப் வீடியோக்காட்சி அதன் அரசியல் சரியற்ற தன்மையோடு புலன்மயக்கத்தோடான தலைகீழ்-உவகை தருகிறது. (கீழே அதன் சுட்டி) படத்தின் கருத்து இது:

”நிலம் நடுங்கிய நாளிலிருந்து அணுவுலைப் பையனுக்கு வயிற்றுக்கோளாறு, அதனால் அவன் அவ்வப்போது நாற்றமடிக்கும் வாய்வை வெளிவிடுகிறான். மருத்துவர்கள் ஒரேயடியாக அவன் பக்கத்தில் நின்றால் அவர்களுக்கும் சுகவீனமாகிவிடும். ஆகவே ஒருவர் மாறி ஒருவர் வருகை தருகிறார்கள். அவன் நோய் குணமாக உடலைக் குளுமை செய்கிறார்கள். ஏற்கெனவே ”3 மைல் தீவு” என்ற ஒரு பையன் விட்ட வாய்வு நாற அடித்தது. அதன் பின்னர் “செர்னோபில்” பையனின் வயிற்றுப்போக்கு வகுப்பறையிலேயே நேர்ந்துவிட்டது. அப்படியெல்லாம் வயிற்றுப்போக்கு ஆகாமல் இந்தப் பையனின் வயிற்றுவலியைச் சரி செய்யவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டிருக்கிறது.”

http://www.youtube.com/watch?v=5sakN2hSVxA&feature=youtu.be

நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் அச்சுறுத்தப்பட்ட சிறுவர்கள் மனிதனால் ஏற்பட்டிருக்கும் இந்த மூன்றாவது அபாயத்தாலும் இன்னும் பாதிக்கப்பட வேண்டாம் என்று ஜப்பானியர் ஒருவரால் எடுக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. ஆனால், அணு உலை எனும் அ-மனித பேரழிவுசக்தியை நம் வீட்டுக் குட்டிப்பையனாக, ஆகவே நம் கட்டுக்குள் இருப்பது போல் ஒன்றாகக் காட்டுவது, மற்றும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகியும் அழியாது அழிவுச்சுடர் வீசும் அணுக்கழிவை உயிருக்கு உதவும் விளைச்சலுக்கு உரமாகக்கூடிய மனிதக்கழிவோடு ஒப்பிடுவது, ஆகியவற்றின் அணு உலைசார் அரசியல் மிக அபாயமானது, ஏமாற்றுச் சொல்லாடலை முன்வைப்பது. ஆகவே இந்த உவகை மெய்ப்பாடு தலைகீழ் வகையிலானாது.


(தொடரும்)

Wednesday, March 16, 2011

துடைக்கப்பட்ட இடம்: ரூமி

பிரசன்னம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது மீண்டும்
அலமாரித்தட்டுகளைத் துடைக்கிறது கடைகளை மூடுகிறது.

ஆன்மாவின் நண்பரே ஆன்மாவின் எதிரியே
ஏன் என்னுடையதை நீங்கள் விரும்புகிறீர்கள்?

கிராமத்திலிருந்து கப்பம் கொண்டுவா
ஆனால் உங்கள் வெள்ளத்தில் கிராமமே போய்விட்டதே.

அந்தத் துடைக்கப்பட்ட இடமே வேண்டியது எனக்கு.
பின்னால் மறைந்துகொள்ள கதவற்ற
வெட்டவெளியில் வாழ். இரு சுத்த இன்மையாய்.
அந்நிலையில் ஒவ்வொன்றுமே அவசியம்.


இதன் மீதியை மௌனத்தில் சொல்லவேண்டும்
ஒளிக்கும் ஒளியைச் சொல்ல முயலும் வார்த்தைகளுக்கும்
இடையிலான பிரம்மாண்ட வித்தியாசத்தால்.

(“A Cleared Site.” The Essential Rumi, translations by Coleman Barks with John Moyne. ஜப்பான் எனக்குள் உருவாக்கிக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கான ஒரு வடிகாலாய் இதை மொழிபெயர்த்தேன். இது முதல்வரைவு.. தமிழில் தலைப்பு அவ்வளவாக உவக்கவில்லை.)

Sunday, March 6, 2011

புணர்-விளையாட்டு: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (13)

மோசமானவற்றிலேயே
நிசமாகவே
ஆக மோசமானது
இரவுக்குப் பின் இரவாக
உனக்கு இனியும் புணரப்பிடிக்காத பெண்ணோடு
ஒரே படுக்கையில் கிடப்பதுதான்.

அவர்களுக்கு வயதாகிவிடுகிறது, அவர்கள் அழகாக
இருப்பதில்லை இனிமேலும்—அவர்கள்
குறட்டைகூட விடுகிறார்கள், ஆன்மாவை
இழந்துவிடுகிறார்கள்.

ஆக, நீ படுக்கையில், சிலசமயம் கொஞ்சம் திரும்புகிறாய்,
உன் பாதம் அவளுடையதைத் தொடுகிறது—
கடவுளே, மோசம்!—
இரவு இன்னமும் இருக்கிறது வெளியே
திரைச்சீலைகளுக்கும் அப்பால்
ஒரே கல்லறையில்
உங்கள் இருவரையும் உறையிட்டுமூடி.

மேலும் காலையில் நீ குளியலறைக்குப்
போகிறாய், வரவேற்பரையில் செல்கிறாய், பேசுகிறாய்,
ஏதேதோ தொடர்பில்லாமல் சொல்கிறாய்; முட்டை பொரிகிறது, கார்கள்
கிளம்புகின்றன.

ஆனால் எதிரெதிரே உட்கார்ந்திருக்கின்றனர்
இரு அந்நியர்கள்
ஜாம் இடப்பட்ட டோஸ்டைத் தொண்டைக்குள் திணித்தபடி
உம்மென்றிருக்கும் மூஞ்சியையும் குடலையும்
காப்பியில் எரித்தபடி.

அமெரிக்காவில் பத்து மில்லியன் இடங்களில்
இதேபோலத்தான் –
ஒன்றுக்கெதிர் இன்னொன்றாக
சலித்துப் போன வாழ்க்கைகள்
எந்தப் போக்கிடமும் இல்லை.

காரில் ஏறுகிறாய் நீ
பணியிடத்துக்கு ஓட்டிச் செல்கிறாய்
அங்கே இன்னும் அந்நியர்கள், பெரும்பாலும்
ஏதோவொருவரின் மனைவிகள் கணவர்கள்
வேலையெனத் தலைக்குமேல் தொங்கும் கத்தி
தவிரவும் அவர்கள் குலாவுகிறார்கள், ஜோக் அடிக்கிறார்கள்,
கிள்ளிக்கொள்கிறார்கள், சிலசமயம்
வேறெங்கோ ஒரு துரிதப்புணர்வும் முனைந்து முடிகிறது
அதை வீட்டில் செய்ய முடியாது
மேலும் அப்புறம்
காரோட்டி வீட்டுக்குத் திரும்பி வருதல்
கிறிஸ்துமஸ் அல்லது உழைப்பாளர் தினம் அல்லது
ஞாயிற்றுக்கிழமை அல்லது அதைப் போல ஒன்றுக்கான
காத்திருத்தலோடு.

(இக்கவிதை பெண்ணியசார்புநிலை எடுப்பவராக எனக்குப் பிரச்சினையான ஒன்று, ஆனால் கவிஞராகப் பிடித்திருக்கிறதே, என்ன செய்வது? அடையாளங்களின் மோதலில் இங்கே கவிஞரே வென்றார். :))

Saturday, March 5, 2011

ஒரு காதல் கவிதை

பகல் முழுக்க பச்சைவெளி
அறையோ நீலங்களின் வானம்
உன் அருகாமை கடல்களைச் சாடி வரும்பொழுது
உப்பையும்விடச் சுவைகோரும் உன் உதடு
இல்லைகள்
உரமாகி வளர்த்த
ஒவ்வொரு நொடிப்புல்லிலும்
அகல அகலத்
திறக்கும் வாசல்கள்
புல்லின் இழைகளைவிட
நெருங்கி நெருங்கிப்
பின்னிக்கொள்ள
இடம் மாறி அடையாளம் குலையும்
நீயும் நானும்.
கலவிமுடிந்து சோம்பல்முறிக்கையில்
மூடிப்படர்ந்திருக்கும் நீலப்பச்சை
நம் தோல்
என்றும் அறிந்துகொள்வோம்.

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள்: புதுசு கண்ணா புதுசு

நடுநிசி நாய்கள் பார்த்தவுடன் முதலில் உருவான உணர்வுகளின் அடிப்படையில் எழுதுவது இது. விரிவான விமர்சனமாக இதைக்கொள்ள வேண்டாம். தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை நான் இங்கே ஒன்றும் சொல்லப்போவதில்லை. மேலும் இந்தப் படம் காப்பியடிக்கப்பட்டதா என்கிற விவகாரத்துக்குள்ளும் நான் செல்லப்போவதில்லை. என் வாசிப்பின் கரிசனம் அல்ல அது.

பெரும்பான்மையான தமிழ்ப்படங்கள் ஆபாசத்தை சிலபல காட்சிகளுக்காவது குத்தகை எடுத்திருப்பவை:

(அ) திரைக்காட்சிகளில் முழு ஆபாசமாக நான் கருதுபவை பெண்ணை உடல் உறுப்புகளின் தொகுதியாக, முலைகள், புட்டம், தொப்புள், இடுப்புமடிப்பு போன்றவற்றின் சேர்க்கையாக பார்ப்பவர் கண்களுக்குப் பண்டங்களாகப் பரிமாறும் குத்துப்பாட்டுகள். பேருந்துகளை வசிப்பிடங்களின் முன்னறைகளை நாளும் இரவும் நிறைகின்றன குத்துப்பாட்டுகள். பார்ப்பவர்களின் உடல்களை ஆபாசக்கிளர்ச்சியின் (கவனிக்கவும், காமக் கிளர்ச்சியல்ல) மங்கிய ஆனால் அணையாத கங்குகளாகத் தொடர்ந்து ”காத்து” வருவதில் இவற்றின் பங்கு இன்றியமையாதது. குத்துப்பாடல்களுக்கு அடுத்தபடியாக, பலநேரம் ஆண்-பெண் சோடி “நடிக்கும்” பாடல் காட்சிகளும் பார்ப்பவர் உடல்களை கிளர்ச்சியின் நெகிழ்பதத்தில் பராமரிக்கின்றன.

(ஆ) குத்துப்பாட்டுக்கு நிகரான ஆபாசம் பெண்ணுடல்—ஆணுடல் என ”கலாச்சார” முரணை விதந்தோதும் தமிழ்த்திரை ”முதலிரவுக்” காட்சிகள். உடலும் காமமும் அடிக்கோடிடப்படும் ”முதலிரவு” என்பது திரைப்படத்தில் செய்கிற முக்கிய வேலை ஆண்-பெண் படிநிலையை இயங்குபவர்-இயக்குபவர் படிநிலையோடு பொருத்தி ஒன்றிணைப்பதுதான். நாணுதல், உதடு கோணுதல், அணைக்க நழுவுதல், ”வீணையாகத்” தழுவப்படல், மயிர்க்கூச்செறிந்து மலர்தல், துவளுதல் என பெண்ணுடல். இதற்குப் பொருந்த கம்பீரம், அரவணைப்பு, இறுகப் பிடித்து “நம்பிக்கை” (?:)) தருதல், நழுவ நழுவப் பிடித்திழுத்தல், அணைப்புக்குள் வைத்திருத்தல், ”வீணையை” வாசித்தல், அங்கம் அங்கமாக முகருதல் ஆக இயங்கும் ஆணுடல். மேல்-ஆண்xகீழ்-பெண் பால்படிநிலையை மேன்மையான ஒன்றாக, கொடுக்கப்பட்ட இன்றியமையாத ஒன்றாக நிலைநிறுத்தும் திரைக்காட்சிகளில் முதலிரவுக்கே மகுடம்.

(இ) ஆபாசத்தோடு வக்கிரமும் சேர்ந்து துலங்குபவை தமிழ்ப்படங்களின் பெரும்பாலான ”காதல்” அரும்புதல் தொடர்பான காட்சிகள் மற்றும் கற்பை வலியுறுத்தும் காட்சிகள். அவமானப்படுத்துதல், துரத்துதல், ஆடையைப் பிடித்திழுத்தல், பொம்பளையா நீ என்று கேள்வி கேட்டு தன் “ஆண்மையை” நிரூபித்து பெண்ணைப் பணிய வைத்தல், பெண்ணுடலை அத்துமீறல் செய்து வன்முத்தம் கொடுத்தவன், வன்புணர்ச்சி செய்தவனுக்கு அதே பெண்ணைக் கட்டிக்கொடுத்து அல்லது அந்தப் பெண்ணைச் சாகடித்து கற்பின் பெருமையைக் காப்பாற்றுதல். வலியின் இருப்பாக, அவமானத்தின் கொள்கலமாக, வதையின்பச் சுயமாக பெண்ணைப் படைத்ததில் இக்காட்சிகளின் பங்களிப்பு இன்றியமையாதது. இவற்றில் குறைவில்லாத ஆபாசமும் வக்கிரமும் பொருந்தியவை பெண்கள் அறை வாங்கும் காட்சிகள். ஆண் கையால் அறை வாங்காத பெண்பாத்திரமே இல்லை. எல்லாவகைப் பாத்திரங்களிலும்-- மனைவியாக, பெண்சிநேகிதியாக, வேலைக்காரியாக, காதலியாக, வைப்பாக, தோழியாக, எசமானியாக, தாசியாக, தாதாவாக, உறவினராக, ஆட்டக்காரியாக --பெண்கள் (மனநோய் இல்லாத, “நார்மல்” என்று காட்டப்படுகிற) ஆண்களிடமிருந்து அறை வாங்கியிருக்கிறார்கள் தமிழ்ப்படங்களில்.

இவற்றையெல்லாம் நினைவில்கொண்டு பார்க்கும்போது நடுநிசி நாய்கள் ஆபாசமோ வக்கிர உறுத்தலோ இல்லாத படம் என்றே நான் கருதுகிறேன். மேலும் இப்படம் தலைகீழாக்கியிருக்கும் முக்கியமான சில ”பண்பாட்டு” விழுமியங்களைப் பற்றி இங்கே விவாதிக்க விரும்புகிறேன்:

ஒரு குடும்பத்தின் குழந்தைகள் சிறந்த மனிதர்களாக ஒழுக்கசீலர்களாக வளர தாய் அல்லது தாய்ப் பொறுப்பை ஏற்றிருப்பவள் கற்பைப் பேணிப் பாதுகாத்து, தன் கருப்பையின் கருவுக்கு ஒருவனையே தந்தையாக அடையாளம் காட்டும் குலமகளாக இருக்க வேண்டும் என்கிறது பெண்களுக்கான சமூக-பண்பாட்டு விதி. இவ்விதி பலசமயங்களில் தலைகீழாகவும் சற்று நகர்த்தியும் வாசிக்கப்படுகிறது. அதாவது, ஒழுக்கத்தில் குறைவுபட்டவனாக ஒருத்தி/ஒருவன் இருந்தால் அதன் ஊற்று அல்லது மூலம் தாயோடு ஒப்பிடக்கூடிய ஒரு பெண்ணின் பிறழ்வுபட்ட நடத்தையில் தேடியடையப்படுகிறது. சிகப்பு ரோஜாக்கள் படம் ஒரு உதாரணம்: ஆண்மகன் ஏன் மனநிலை பிறழ்ந்து பெண்களை வன்புணர்ந்து கொலை செய்கிறான்? இதற்குக் கதை சொல்லுகிற விடை: துன்புறுத்தும் சிற்றன்னையிடமிருந்து ஓடிவந்த சிறுவனை, பரிவுகாட்ட வேண்டிய அக்காபோன்ற ஒருத்தி அவனை “தப்பான” விதத்தில் உபயோகிக்கப்பார்க்கிறாள்; அவளது பெற்றோர் அதைப் பார்த்துவிட, பழி சிறுவன்மேல் விழ, அவன் ஓட்டம் தொடர்கிறது; வந்துசேர்ந்த அடுத்த இடத்தில், அவனது எசமானின் மனைவி் வளர்ப்புத்தாய் போன்ற மாதரசி ”ஒழுக்கம்” கெட்டு கணவனில்லாத நேரத்தில் வேறொருத்தனோடு படுக்கிறாள். இதைக் காண நேர்ந்து அவளைக் குத்திக்கொல்லும் எசமானிடம் “குத்துங்க எசமான், இந்தப் பொம்பளங்களே இப்படித்தான்” என்கிறான் சிறுவன்; ஆக, ”இப்படியான பொம்பளைகளால்” அவன் தொடர்கொலைகாரனாக உருவெடுக்கிறான். இன்னொரு உதாரணம், மூடுபனி திரைப்படம். தாயை அடித்துத் துன்புறுத்தும் தந்தையைவிட, அந்தத் தந்தை தாயை ஒறுப்பதற்கு காரணமாக தாயின் மாற்றுருவமான வேசியே காட்டப்படுகிறாள். ”அம்மா உயிருக்கு போராடறப்ப கூட அந்த வேசி அப்பாவை வரவிடலை,” “பொம்பளைங்களை பாத்தாலே எனக்கு பிடிக்கலை,” ”விபச்சாரிங்களைப் பாத்தாலே கொல்லணும்னு தோணுது” போன்ற மூடுபனி-யின் வரிகளை நினைத்துப்பார்க்கலாம் இங்கே.

குல ஒழுக்கத்தின் பொறுப்பைச் சுமக்க வேண்டியவள் பெண் என்கிற வழக்கமான ஆண்மையக் கதையாடலை நடுநிசி நாய்கள் அடித்துப்போட்டிருக்கிறது. நடுநிசி நாய்களில் சிறுவன் சமரை வன்புணர்பவன் தந்தை. மேலும், தந்தை குழுவோடு கொள்ளும் பாலுறவுக் களியாட்டத்தில், ’குழந்தை இங்கே இருப்பான் எனத் தெரிந்திருந்தால் இதற்கு வந்திருக்க மாட்டேன்’ என்கிற அர்த்தத்தில் ஒலிப்பது ஒரு பெண் குரல் என்பது கவனத்துக்கு. சமர் தந்தையிடம் எதிர்கொண்ட வன்புணர்ச்சி, தந்தை அவனை வற்புறுத்தி குழுப் பாலுறவுக் களியாட்டத்தில் ஈடுபட வைப்பது போன்றவை, சமரின் பதின்ம வயதில் தாய்போல் பரிவுகாட்டும் ஒருத்தியிடமும் (மீனாட்சி) அவனைக் காதல் என்கிற பேரில் வல்லுறவு கொள்பவனாக மாற்றிவிடுகிறது. சமரின் உடல்பலத்தில் வலுவிழந்து, அந்தப் போராட்டத்தில் தாய்மையை சற்றே விலக்கி வெறும் உடலாக அவனோடு உறவுகொள்ள நேர்கிறது மீனாட்சிக்கு. இதனால் குழப்பமடைகிற அவள் அவ்வுறவை மறுக்க வேண்டி வேறொரு ஆண்துணையைத் தேடி இணைகிறாள். பொறாமையால் சமர் அந்த ஆண்துணையைக் கொல்லும்போதுகூட அவள் அவனது சிறுவயதுத் துன்பத்தைக் கணக்கில்கொண்டு அவன் நல்வாழ்வுக்காக தன் சொத்துகளை எழுதிவைக்கிறாள்.

ஆண்/தந்தை செய்யும் பாலியல் கொடுமைச் செயல்களை உள்வாங்கி வன்முறையாளனாக சுய அடையாளம் (சமர்) பெறுகிறான் மகன். ஆனால் இடையில் வருகிற, அவனைக் காப்பாற்றுகிற தாய் உரு இந்த உள்வாங்கலை பிறிதொரு அடையாளத்தின் (வீரா) வாயிலாக இடையீடு செய்கிறது. மோசமான தந்தையை பிரதிசெய்கிற வன்சுயத்தின் அடையாளம், இடையீடு செய்கிற மென்மையான பிறிதொரு அடையாளம், இவற்றிடையேயான மோதல், கதையாடலின் களம்.

இரண்டு அடையாளங்களின் மோதல்களை இணக்கச்செய்ய சமர்-வீரா கண்டுபிடிக்கும் உத்திதான், மீனாட்சி இறந்துபின்னும் அவன் மனதில் தொடரும் அவளது வாழ்வு. செய்கிற பாலியல் வன்முறைக்கான, கொலைகளுக்கான பழியை, மீனாட்சியின் காரணமாக, அவள் சொல்லி தான் செய்வதாக இறந்துவிட்ட மீனாட்சியின்மேல் போடுகிறான் சமர். அக-மனவுலகில் மீனாட்சி மேல் அவன் கொண்டிருக்கும் ஆசை, நிஜ உலகில் அவன் தொடர்ந்து நடத்தும் வன்முறை: இவை இரண்டும் அவன் மீனாட்சிமேல் போடும் பழியின் புள்ளியில் இணைகின்றன.

சமர்-வீராவின் பார்வையில் இரு அடையாளங்கள் மீனாட்சிக்கும் தரப்படுகின்றன. உளப்பகுப்பாய்வு அறிஞர் சுதீர் காகர்-இன் எழுத்தை (“The Inner World: A Psycho-Analytic Study of Childhood and Society in India, 1981) வாசித்துவிட்டு நேரடியாக கௌதம் மேனன் படமெடுக்க வந்ததுபோலத் தோன்றுகிறது. இந்தியச் சமூகத்தில் ஆண்குழந்தையின் உளவளர்ச்சியைப் பேசும் காகர், “மேற்கத்திய” சமூகங்களைப் போலல்லாது இங்கே ஆண்குழந்தைக்கும் தாய்க்குமான உறவு இருமுக உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் தாக்குறுவதைச் சுட்டுகிறார். ஒரு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும்போது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து அவளுக்கு கிடைப்பது ஒருபுறம், மற்றொரு புறம் குழந்தைகள் பிறந்தவுடன் (கூட்டுக்குடும்பத்தில் குறிப்பாக) பால்சுகம் குறைந்துவிடல், இதனால் தாய்க்கு ஆண்குழந்தைமேல் அளவுக்கதிகமான அன்பும் சொந்தம்கொண்டாடும் தன்மையும் வந்துவிடுகிறது என்கிறார் காகர். இந்த இருமுக உணர்ச்சிகளை தாயோடு இயைந்து ஆண்குழந்தை எதிர்கொள்வதன் விளைவாக, அதன் அடிப்படை உளவளர்ச்சிப்போக்கில் நல்ல தாய், கெட்ட தாய் என்ற இரண்டின் கலவை பெரும்பங்கு வகிக்கிறது; ஆண்குழந்தை வளர்ந்தவுடன், தாயுடன் நெருக்கவுறவு குறைந்து (மறுக்கப்பட்டு), தந்தை-ஆண்மைய சமூகத்தில் அறிமுகம் கிடைத்தவுடன், அது அச்சுஅசல் ஆணாக ”இரண்டாவது பிறப்பு” பெறுகிறது; தந்தை-ஆண்மைய சமூகவிதிகளுக்கும் சட்டங்களுக்கும் ஒப்புக்கொடுத்த பின்னரும் இழந்த இருவகைத் தாய்களோடான இயைந்த ஒரு உறவுக்கான ஆழ்மன விருப்பம் வயதுசென்றாலும் ஆணுக்குத் தொடர்கிறது; கோபமும் பாலுணர்வும் மிக்க தாய்தெய்வங்கள் இந்த ஆழ்மன விருப்பத்தின் வெளிக்கூறு; கற்பனை, படைப்பூக்கம், மிகுபுனைவு என்று விரியும் பண்பாட்டின் எல்லாத் தளங்களிலும் இந்த இருமைத்தாய்மையின் மேலாண்மை இருக்கிறது, என்று பரிணமிக்கிறது காகர்-இன் விளக்கம்.

சுதீர் காகர்-இன் புகழ்பெற்ற இந்தக் கருத்துகளைப் பற்றி மட்டுமில்லாமல் பொதுவாகவே உளப்பகுப்பாய்வு மேல் எனக்கு விமர்சனங்களுண்டு. ஆனால் அவற்றுக்கான களம் இக்கட்டுரை அல்ல. நான் சொல்ல வருவது, காகர்-இன் உளப்பகுப்பாய்வின் இரட்டைத் தாய்களும் இங்கே படத்தில் வருகிற விதம் குறித்தே. தாய்மேல் பழிபோடும் காகர்-இன் உளப்பகுப்பாய்வு விளக்கத்தைத் தலைகீழாக்கிப் போடுவதாக நடுநிசி நாய்களின் கதையாடல் இருக்கிறது என்பேன். சமர் பிறந்தவுடனேயே தாய் இறந்து விடுகிறாள். தாயில்லாத வெற்று இடத்தையும் “சாத்தான்” தந்தையே இட்டு நிரப்புகிறான். பின்னர் சமருக்குக் கிடைக்கிற வளர்ப்புத்தாய், கதையின் போக்கில் இருவராக—அவனைக் கவனித்து வளர்த்தவளாகவும், அவன்மேல் ஆக்கிரமிப்பு செலுத்துபவளாகவும்—அவன் மனதில் பிரிகிறாள். உளவியல் வளர்ச்சிக்கோட்டில் பிற்போக்குமுகமான இறங்குபயணத்தில் (regressive journey) தனியனாக இருக்கிறான் சமர். தந்தைமைய ஒழுங்குக்கு, அரசின், குடிமைச்சமூகத்தின் சட்டக் கட்டுப்பாடுகளுக்குள் வரமுடிவதில்லை அவனால்.

சுதீர் காகர்-இன் உளப்பகுப்பாய்வெனும் பெருங்கதையாடலுக்கு மாற்றாக, இப்படத்தில் மகனின் பதட்டப் பேரதிர்ச்சியோடான இறங்குபயணத்துக்கு ஊற்றாகச் சொல்லப்பட்டிருப்பது தந்தை மகனுக்குச் செய்யும் பாலியல் துன்புறுத்தலும் வன்முறையுமே. மேலும் காகரின் “புனைவில்” குழந்தை வளர்மன நிலையில் சிக்கலை உண்டுபண்ணுவது ஒரேசமயத்தில் இயங்கும் இரு தாய்கள். அதுபோலன்றி, படத்தில் தாய் உருவின் இருமை கால ரீதியாகக் காட்டப்படுகிறது. இறப்புக்கு முந்தைய நிஜமான உண்மையான மீனாட்சியை அருமையான “நல்ல” தாயாகக் காட்டுகிற கதையாடல், ”கெட்ட” தாயென மீனாட்சியின் உருவெளித்தோற்றத்தையே காட்டுகிறது என்பதை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.

நடுநிசி நாய்களின் கதையாடல் குலக்கொழுந்து-இளைஞர்களின் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கும் சுமையிலிருந்து, அல்லது இவ்வொழுக்கம் குலைந்தால் விழுகிற பழியிலிருந்து மட்டும் பெண்ணை விடுவிக்கவில்லை; சுதீர் காகர் போன்றவர்களின் உளப்பகுப்பாய்வு குவிக்கும் பண்பாட்டுச்சுமையிலிருந்தும், உளப்பகுப்பாய்வு கட்டும் இருமையின் விளைவாக புரியாத ”புதிர்” போன்று அடையாளப்படுத்தப்படும் பெண்மையின் பண்பாட்டு இருப்பிலிருந்தும் கூட பெண்ணை விடுவித்திருக்கிறது. தமிழ்த் திரையில் அபூர்வமான ஒரு பெண்-சிநேகிதப் பிரதி நடுநிசி நாய்கள்.

பின்குறிப்பு:

(1) கணவனைக் கொன்றவனைப் பழிவாங்க ஊரையே எரித்தவளின் தொன்மத்தை எந்தச் சந்தேகமுமின்றி சுமக்கின்ற தமிழ்மனங்களால் மனநிலைப் பிறழ்ச்சியால் வன்புணருகின்றவனை, கணவனைக் கொல்கிறவனை மன்னிக்கிற தமிழ்ப்பெண்ணை ஏற்றுக்கொள்ளுதல் கடினம்தான். அதுவும் அவள் பெயரைப் பாருங்கள்: மீனாட்சி. கண்ணகி எரித்த அதே மதுரையின் அரசி. கண்ணகிபோலவே, (வரப்போகிற) கணவனை முன்னிட்டு வேறுவகையில் ஒரு முலையிழந்தவள் மீனாட்சி. ஆனால் நடுநிசி நாய்களின் மீனாட்சி கணவனுக்காக என்ன இழக்கிறாள், ஒன்றுமில்லை. அதேநேரத்தில் மீனாட்சியின் பதிலி (substitute) சமர்-வீராவைக் கொல்லுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். (தன்னை நோக்கிச் சுடுகிற சுகன்யாவை மீனாட்சியாகவே காணுகிறான் சமர்-வீரா). இந்தக்கொலை கணவனுக்காக அல்ல, அவனிடம் சிக்கிக்கொண்டிருக்கும், அடைபட்டிருக்கும் பெண்களுக்காக வேண்டியே நடக்கிறது.

(2) சிகப்புரோஜாக்கள் படம் போன்று (ஆண் குணமாகி வர பெண் காத்திருப்பதைப் போல) நடுநிசி நாய்களில், எந்த “காக்கும் கருணையும்” பெண்ணிடமிருந்து ஆணுக்கு வரப்போவதில்லை. கடைசிக் காட்சியில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் சமர்-வீராவை மனநிலை பிறழ்ந்த இளம்பெண் ஒருத்தி பார்த்துச் சிரித்தபடி போகிறாள். அவளோடு ஒரு சமயத்தில் கூட இருந்த சில ஆண்கள் இறந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லையாம். சமர்-வீராவை அவள் என்ன செய்யப் போகிறாள்?

Tuesday, February 8, 2011

புதிய கவிதைகள் சில

அலகிலா

எங்குமிலாத எங்கும்
எதுவுமிலாத எதுவும்
பெற்ற உற்ற பரிபக்குவமாய்
ஒன்றிலாத ஒரு சுவை துலங்கும்
இனித்தும் இனிப்பற்றும் இன்னமும்.

**^**

நேயம்

யாரையும் பிடிக்காத என்னை
யாரையும் பிடிக்கும் ஓர் உலகு துரத்துகிறது.
சக்கரைக்குவியலில் மூச்சுமுட்டி
அழுந்திக் கிடக்கிறது ஓர் எறும்பு.

**^**

சா அவா

கண்ணொடு கண்ணொத்து சொல்லொடு சொல்லொத்து
உடலற்று உணர்வற்று இருளற்று பழியற்று
புள்ளியில் புள்ளியில் புள்ளியிலும் புள்ளியிலா
கிடக்கும் கடக்கும் உள்ளும் வழியும்.

**^**

விட்ட குறை

அறுபட்டதென்ன விடுபட்டதென்ன
ஒன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு.

**^**

தனித்து

நெளிவிலும் சுழிவிலும்
நேரம் தொலைத்தும்
பார்வை தப்பியும்
நினைவற்ற ஒருவழியில்
நின்றும் நிற்காமலும்
ஓட்டமாய் நகர்கிறது
சின்னஞ்சிறு
மணி.

**^**

ஊரோடொத்து

எடுபடா எண்ணத்துக்கும் தொடுபடா வண்ணத்துக்குமிடையே
ஏன் ஓடோடுகிறாய்
கொள்கையும் சுகமில்லை கோலமும் நித்தியமில்லை.

**^**

Sunday, January 30, 2011

தேவை இங்கே திசைதிருப்பல் அல்ல

பேராசிரியர் சூர்யநாராயணனின் ”LIVELIHOOD OF FISHERMEN IN THE PALK BAY- SRI LANKAN TAMIL PERSPECTIVE” (28 ஜனவரி 2011) கட்டுரையைப் படிக்க நேர்ந்தது (http://www.southasiaanalysis.org/papers44/paper4304.html, நன்றி, பத்ரி சேஷாத்ரி). கட்டுரை பாக் வளைகுடா மீனவர் பிரச்சினை பற்றிய அவதானிப்புகளைத் தீவிரமாக முன்னெடுப்பது போலத் தோற்றம் தருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாக ”சொல்லப்படுவதைக்” குறிப்பிட்டு, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருபவர்களை பொதுவாக மற்ற நாடுகள் கையாளுவதைப் போல இலங்கை கையாளுவதில்லை என்று சுருக்கமாக அவதானிக்கிறது. என்றாலும், கட்டுரையில் வைக்கப்பட்டிருக்கிற வாதங்களும் தகவல்களும் சில கேள்விகளை எழுப்புகின்றன:

கிடைத்திருக்கும் செய்திகளின்படி 530-க்கும் மேல் இருக்கிறது கொல்லப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை. ஆனால் சூர்யநாராயணன் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 என்கிறார். என்ன வருடத்திலிருந்து இந்தக் கணக்கைச் சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.

எண்ணிக்கைப் பிரச்சினை இருக்கட்டும். கட்டுரையில் சுட்டப்படுகிற ”இலங்கையின் தமிழ் மீனவர்” என்பதற்கும், “இலங்கை மீனவர்” என்கிற சொற்றொடருக்குமான பொருள் வேறுபாட்டை கவனிக்க வேண்டும். எதற்கு இந்தத் தமிழ் அடையாளம் இங்கே என்று யோசிக்கலாம். இரு விதங்களில் இந்த அடையாளம் இயங்குகிறது; (அ) தமிழக மீனவர்களின் ட்ராலர்களைக் குறைக்கச் சொல்லும்வகையில், ’நாமே’ (தமிழக மீனவர்களே) நம்மின மக்களின் (இலங்கைத் தமிழ் மீனவர்களின்) வாழ்வாதாரத்தைக் குலைக்கலாமா என்று “மனசாட்சியை” நோக்கிய கேள்வி போல் ஒன்று; (ஆ) தமிழக மீனவர்களின் சாவுக்கு அடிப்படை ’வெளியிலிருந்து’ இல்லை, ‘நமக்குள் (தமிழக மீனவர்-இலங்கைத் தமிழ் மீனவர்)’ நடக்கும் தொழில்போட்டிதான் என்று செயல்முறை விளக்கக் காரணம் காட்டும் மற்றொன்று. பிணைந்திருக்கிற இவ்விரு சொல்லாடல்களும் இலங்கை என்கிற நாட்டின் கடல்நீரில் நடந்த கொலைகளுக்கான பொறுப்பிலிருந்து அந்த நாட்டை அழகாகக் காப்பாற்றி விட முயல்கின்றன.

இதற்கு நீட்சியாக அடுத்த படியாக, நடந்த கொலைகளுக்கு இலங்கை அரசும் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டும் என்று தமிழகத்தில் எழத் தொடங்கியிருக்கும் கோரிக்கையை திசைதிருப்பும்முகமாக, குற்றச்சாட்டைத் தமிழக அரசில்பால் திருப்பிவிடுகிறது கட்டுரை. இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் குலைகிறது, இதற்குக் காரணம் தமிழக மீனவர்களின் ட்ராலர்கள் முதலியவை, தமிழக அரசு இதைக் கண்டும் காணாமலும் இருப்பது மனித உரிமை மீறல் என்று கட்டுரை சொல்லிக்கொண்டு போகிறது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வரும் நிலையில், மீனவர் எதிர்கொள்ளும் வன்முறை குறித்த பேச்சை நாம் கூர்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இக்கட்டுரை “இலங்கை தமிழ் மீனவர்” “தமிழக மீனவர்” என்கிற தொழில்போட்டி எதிரிணையை தமிழக மீனவர் எதிர்கொள்ளும் இலங்கைக் கடற்படையின் வன்முறையோடு conflate செய்து பேசுவது மிகவும் பிரச்சினைக்குரிய ஒன்று.

மேலும், ட்ராலர்களை உபயோகித்தல், அடுத்த நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டுதல் போன்றவை இன்றைய உலகளாவிய முதலீட்டியம் குறித்த இன்னமும் விரிவான ஆய்வுச்சட்டகங்களின் ஊடே அணுக வேண்டியவை. இத்தகைய அணுகுதலுக்கு மாறாக தமிழக மீனவர் தொடர்கொலை வன்முறையோடுகூட இந்த செயல்பாடுகளை இணைத்துப் பேசுவது, இந்த வன்முறையைப் புரிந்துகொள்ளவும் உதவாது; சூழலியல் மற்றும் குடிகளின் வாழ்வாதாரங்கள் பகிர்தல் போன்றவற்றின் மீதாக நாம் கொள்ள வேண்டிய தொலைநோக்கு அக்கறையையும் விசாரணையையும்கூட திசைதிருப்பிவிடும்.

Sunday, January 16, 2011

”கவிதை வாசிப்பு என்பது ஒரு பறத்தலாகவும் அதே சமயம் ஒரு புதைவாகவும் இருக்க வேண்டும்:” உலோகருசி வெளியீட்டு நிகழ்வில் திலீப் குமார்

(புத்தகக் கண்காட்சியில் 10 ஜனவரி 2011 அன்று உலோகருசி கவிதைத் தொகுப்பை வெளியிட்டு எழுத்தாளர் திலீப் குமார் பேசியதன் உரைவடிவம்)


உலோக ருசி: ஓரு சிறு குறிப்பு

பெருந்தேவியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். சொல்லப்போனால் அவர் கவிஞராக உருவாகிக்கொண்டிருந்தை நான் கூட இருந்தே பார்த்து வந்துள்ளேன். இன்று அவருடைய ”உலோக ருசி” என்கிற மூன்றாவது தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரது முதல் தொகுப்பான தீயுறைத்தூக்கத்திலிருந்து தொடர்ந்து பார்த்து வரும் போது அவரது கவிதைக்ளின் உருவத்திலும் உருவாக்கத்திலும் படிப்படியான என்றாலும் ஒரு சீரான செறிவு தென்படுகிறது. முந்தைய கவிதைகளில் காணப்பட்ட இறுக்கம் குறைந்து ஒரு வித நீர்மையும் பெருக்கும் மிளிர்வதைப் பார்க்க முடியும். பெருந்தேவியின் கவிதைகளின் இன்னும் ஓரிரு முக்கிய அம்சங்கள்:
* பெருந்தேவி ஒரு நவீனக் கவிஞராக இருந்தாலும் துவக்கம் முதலே தமிழ் செவ்வியல் கவிதையின் எதாவதொரு அம்சத்தை தன் கவிதைகளில் மிக இயல்பாகக் கலந்து எழுதக் கூடியவராக இருந்திருக்கிறார். அதே போல உலகக் கவிதைகளில் அவருக்கு உள்ள வாசிப்பின் காரணமாக அவற்றின் கூறுகளையும் தன் கவிதைகளில் அவரால் பிணைக்க முடிந்துள்ளது.
* பொதுவாக, கவிதை என்பது சொல்லில் பிறந்து பொருளை அடைகிறது. இங்கு பொருள் என்று சொல்லப்படுவது அதன் சம்பிரதாயமான பொருளில் அல்ல. கவிதையில் பொருள் என்பது பாடுபொருளின் எல்லைகளுக்கப்பால் பல திறப்புகள் கொண்ட பொருளாகச் செயல்படுகின்றது. ஒரு உரைநடைப் படைப்பில் சொல்லின் பொருள் என்பது அப்படைப்பின் மற்ற விவரங்களின் சேர்க்கையால் அது ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயமான நிலையில் கூட சிறைபட்டுவிடக்கூடியது. ஆனால் கவிதையில் வரும் சொல்லுக்கு ஏராளமான சிறகுகள் உண்டு. அதற்கென்று ஒரு பரந்த வானம் உண்டு. பெருந்தேவியின் கவிதைகளில் இக்கூற்று மிக சிறப்பாகத் துலக்கம் கொள்கிறது.

சமீப வருடங்களில் தமிழில் ஏராளமான பெண் கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களின் கவிதைகளை வகைப்படுத்துவதற்கென்றே சில முறைமைகளும் உருவாகிவிட்டிருக்கின்றன. (இத்தகைய வகைப்பாட்டிற்கு அந்தக் கவிஞர்களே ஒத்துக்கொள்ளாவிட்டாலும் கூட இது எப்படியோ நிகழ்ந்து விடுகின்றது). இதற்கு ஒரு வரலாற்றுத் தேவையும் பொருத்தப்பாடும் இருந்தாலும், இவை காலப்போக்கில் தமிழ்க்கவிதையின் ஆதார நீரோட்டத்தோடு இணைந்துகொள்ளக்கூடிய இலக்கியச் சிறப்புகளை கொண்டிருக்கவேண்டும். பொதுவாக, தரப்புகள், சார்புகள், நிலைப்பாடுகள் இவற்றின் அடிப்படையில் உருவாகும், உருவாக்கப்படும் இலக்கியப் படைப்புகளுக்கு ஆயுள் குறைவு. பெருந்தேவியைப் பொறுத்தவரை, அவரது உடனடியான பறிமாறல்களுக்கும் / உரையாடல்களுக்கும் தேவையான அரசியலும் நிலைப்பாடும் காணப்பட்டாலும் கூட, கூடவே இந்த தற்காலிக வரம்புகளைக் கடந்து செல்லும் பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. இது மிக முக்கியமான விஷயமென்று நான் கருதுகிறேன். எந்த ஒரு எழுத்தும் நிரந்தரமானதல்ல. ஆனால், நிரந்தரத் தன்மையை நோக்கிய பாய்ச்சல்களும் அவற்றில் இல்லாமல் இருக்க முடியாது.

பெருந்தேவியின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு பேசுவதை விட, தொகுப்பாக இவை தரும் நிறைவுக்கான தர்க்கத்தையே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். ஒரு கவிதையின் வாசிப்புப் பயணத்தில் அது நாம் ஆழ்மனதுக்குள் மூழ்கி எழ வசதியான பல தருணங்களையும் பல வழிகளையும் கொண்டிருக்க வேண்டும். கவிதை வாசிப்பு என்பது ஒரு பறத்தலாகவும் அதே சமயம் ஒரு புதைவாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் இந்த அம்சங்கள் மிக அலாதியான ஒரு வீச்சோடு உருக்கொண்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை வெளியிட வாய்ப்பு தந்த பெருந்தேவிக்கும், காலச்சுவடு கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழத்துகளும்.

திலீப்குமார்
சென்னை.





(புகைப்படத்தில் இடமிருந்து வலம்: கண்ணன், திலீப் குமார், அம்பை, பெருந்தேவி. கவிதைத் தொகுப்பைப் பிரசுரம் செய்த காலச்சுவடு பதிப்பகத்தார், வெளியிட்ட திலீப், முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட அம்பை மற்றும் வருகை தந்திருந்த நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும். அதேபோல, கவிதைகளுக்கு விரிவான பின்னுரையொன்றை நல்கியிருக்கும் ஜமாலனுக்கும் அட்டையை வித்யாசமாக வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பயணிக்கும் என் அன்பு கலந்த நன்றி: பெருந்தேவி)